கதிகலங்க வைத்த ‘கருமுட்டை’ விற்பனை! மகளை இரையாக்கிய இரக்கமில்லா தாய்! அமைச்சர் மா.சு.வின் வார்னிங்!
சென்னை : பெற்ற மகளை கள்ளக்காதலனை விட்டு பலாத்காரம் செய்ய வைத்து தொடர்ந்து கருமுட்டை விற்பனை செய்து வந்த கொடூரத்தாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், சட்டவிரோதமாக கருமுட்டையை விற்பனை செய்தால் சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது உறவினர்களுடன் சூரம்பட்டி காவல்நிலையத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் புகார் ஒன்றினை அளித்தார். அதில் தன்னை தனது தாய் மற்றும் அவரது ஆண் நண்பர், பெண் புரோக்கர் ஒருவர் ஆகியோர் சேர்ந்து தனது கருமுட்டையை விற்பனை செய்வதாகக் கூறி இருந்தார்.
ஈரோட்டில் வசிக்கும் 38 வயதாகும் ஒரு பெண்ணுக்கு 16வயதில் மகள் உள்ளார். சிறுமிக்கு 3 வயது இருக்கும்போதே கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார் அந்த பெண்.

ஈரோட்டில் அதிர்ச்சி
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சிறுமியின் தாய் அடிக்கடி தனியார் ஆஸ்பத்திரிகளில் தனது கருமுட்டையை விற்று உள்ளார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தனது ஆண் நண்பருடன் ஜாலியாக செலவு செய்து வந்து உள்ளார். அப்போது சிறுமியின் தாய்க்கும், ஈரோடு கைக்காட்டி வலசு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த மாலதி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

கருமுட்டை விற்பனை
இவர் கருமுட்டை விற்பனை செய்யும் புரோக்கராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் சிறுமியின் தாயின் ஆண் நண்பர் சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார். மேலும் சிறுமியின் மூலமும் கருமுட்டை விற்பனை செய்ய முடிவு செய்தனர். அதன்படி சிறுமியின் தாய், அவரது ஆண் நண்பர், புரோக்கர் மாலதி ஆகியோர் சிறுமிக்கு ஈரோட்டைச் சேர்ந்த ஒருவர் மூலம் போலியாக பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையை தயாரித்து உள்ளனர்.

மருத்துவமனைகளில் வியாபாரம்
பின்னர் சிறுமிக்கு அதிக வயது என்று கூறி அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளை அணுகி கருமுட்டையை விற்று உள்ளனர். இதில் சிறுமிக்கு 20 ஆயிரம் ரூபாயும், புரோக்கர் மாலதிக்கு 5 ஆயிரமும், ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் கொடுத்து உள்ளனர். இந்த பணத்தை வைத்து சிறுமியின் தாய் மற்றும் அவரது ஆண் நண்பர் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். 12 வயது முதல் 16 வயது வரை 8 முறை சிறுமியின் கருமுட்டையை ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் விற்றது தெரிய வந்தது.

தாய், புரோக்கர் கைது
இதையடுத்து பெற்ற மகளையே பணத்துக்கு ஆசைப்பட்டு கருமுட்டை விற்க வைத்த தாய், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் ஆண் நண்பர் மற்றும் புரோக்கர் மாலதி ஆகியோர் மீது போலீசார் போக்சோ உள்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுமியின் தாய், புரோக்கர் மாலதி ஆகியோர் கோவை சிறையிலும் தாயின் ஆண் நண்பர் கோபி சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சட்டவிரோதமாக கருமுட்டையை விற்பனை செய்தால் சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

அமைச்ச்ர் எச்சரிக்கை
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிமணியனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்," சில தனியார் மருத்துவமனைகள் கருமுட்டை விற்பனையை சட்டவிரோதமாக மேற்கொள்வதாக எழுந்துள்ள புகார் குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாக கருமுட்டையை விற்பனை செய்தால் சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications