வரி பாக்கியை வசூலிக்க கருணாநிதி கொண்டு வந்த சமாதானத் திட்டம்! இதன் நோக்கம் என்ன? -அமைச்சர் மூர்த்தி
சென்னை: வரி பாக்கியை வசூலிக்க கருணாநிதி கொண்டு வந்த சமாதானத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது பற்றி வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார்.
பொள்ளாச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் எழுப்பிய கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய போது சமாதானத் திட்டம் என்றால் என்ன என்பதை அமைச்சர் மூர்த்தி விளக்கினார்.

அதன் விவரம் வருமாறு;
''சமாதானத் திட்டம் என்பது கலைஞர் சிந்தனையில் உதித்த சீரிய திட்டமாகும். வணிகவரித் துறையில் நிலுவையில் உள்ள வரி நிலுவைகளை செலுத்தி, தீர்ப்பதற்கு வணிகர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கும் பொருட்டு ஒரு முறைத் தீர்வு திட்டமான சமாதானத் திட்டம் முதன் முதலாக கலைஞரால் 1999-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதற்கு பின்னர் 2002, 2006, 2008, 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் சமாதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, அதன் மூலம் வணிகர்களின் நீண்ட கால வரி நிலுவைகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டம் 1999-ஆம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டபோது 4 மாதங்களில் 2,095 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ரூபாய் 19.97 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது வரி நிலுவையாக, மொத்தம் ரூபாய் 27,526.82 கோடி வரி நிலுவை உள்ளது. இந்நிலையில் கடந்த 13.8.2021 அன்று சட்டமன்றப் பேரவையில் சமாதானத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், உரிய கருத்துரு பெறப்பட்டு, சமாதானத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு வணிக வரிகள் சட்டமுன்வடிவு தயாரிக்கப்பட்டு, கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்வதற்கான சுற்றோட்டக் கோப்பு சட்டத்துறை அமைச்சர், நிதித் துறை அமைச்சர், முதலமைச்சர் ஆகியோரின் வழியாக ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
ஆளுநர் கடந்த ஆண்டு 10.5.2022 அன்று அக்கோப்பிற்கு ஒப்புதல் வழங்கினார். அன்றைய தினம் 2022-2023-ஆம் நிதியாண்டின் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் என்பதால் அந்த சட்ட முன்வடிவை பேரவையில் அறிமுகம் செய்ய இயலவில்லை.

எனவே, இச்சட்ட முன்வடிவினை அவசர சட்டமாக இயற்றலாம் என இத்துறையில் உத்தேசித்து, சட்டத்துறையின் இசைவினை 20.05.2022 அன்று பெற்று, வணிகவரி ஆணையரிடமிருந்து உரிய கருத்துரு பெறப்பட்டு, சுற்றோட்டத்தில் ஆணை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நிதித் துறை அமைச்சரின்ன் ஒப்புதலுக்கு பின்னர், அக்கோப்பு முதலமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே, தமிழ்நாடு வணிக வரிகள் (நிலுவைகள் தீர்ப்பு) சட்டமுன்வடிவு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, சமாதானத் திட்டம் நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.''












Click it and Unblock the Notifications