நாடாளுமன்றத்தில் தூங்கும் எம்.பி.க்கள்! உணர்ச்சிவசப்பட்டு பேசிய அமைச்சர் நாசர்! வெடித்த சர்ச்சை!
சென்னை: அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் நாசர், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் தூங்குவதாக கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பால் வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜெயக்குமாரை புகழ்ந்து பேசுவதாக நினைத்து மற்ற எம்.பி.க்களை விமர்சித்தார்.

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மட்டுமே நாடாளுமன்றத்தில் கேள்வி மேல் கேள்விகள் கேட்டு மத்திய அரசை மிரள வைப்பதாகவும் மற்ற எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தூங்கிவிட்டு வருவதாகவும் பேசினார்.
தங்கள் தொகுதி எம்.பி.யை புகழ்ந்து பேச வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் நாசர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இக்கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
ஜெயக்குமார் எம்.பி.க்கு நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நேரம் கொடுக்கப்பட்டாலே எல்லோரும் அலறுவார்கள் என்றும் அந்தளவுக்கு அவரது கேள்விகள் வலிமையாக இருக்கும் எனவும் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
திருவள்ளூர் மக்களவை தொகுதிக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான் டாக்டர் ஜெயக்குமார் எம்.பி. என அமைச்சர் நாசர் புகழாரம் சூடியுள்ளார்.
ஒருவரை புகழ்ந்து பேசுவதற்காக மற்ற அனைத்து எம்.பி.க்களையும் நாடாளுமன்றத்தில் தூங்கிவிட்டு வருவதாக அமைச்சர் நாசர் பேசியிருப்பது திமுக மூத்த எம்.பி.க்களை அதிருப்தி கொள்ளச் செய்துள்ளது.
அமைச்சர் நாசரை பொறுத்தவரை ஏதேனும் ஒரு வகையில் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications