தமிழகத்தில் ஊரக சாலைகள் போடணும்.. ரூ.4,000 கோடி கொடுங்க.. டெல்லி கதவை தட்டிய அமைச்சர் பெரியகருப்பன்!
சென்னை: தமிழகம் முழுவதும் கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்காக ரூ.4,000 கோடி நிதி வழங்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார்.
அமைச்சர் பெரியகருப்பன் கொடுத்த மனுவை பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ள மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், தமிழகத்தில் ஊரக வளர்ச்சி பற்றி அக்கறையோடு கேட்டறிந்திருக்கிறார்.
தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் மட்டும் ஒரு லட்சத்து 50,000 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலை அமைக்க வேண்டியிருப்பது பற்றி எடுத்துக் கூறியிருக்கிறார்.

டெல்லி பயணம்
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் அந்தத் துறையின் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். உட்பட உயர் அதிகாரிகள் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்து தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்து விளக்கி கூறியிருக்கின்றனர். நாட்டின் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கிராமப்புறங்கள் அடைந்திருக்கக் கூடிய முன்னேற்றங்கள் பற்றியும் மத்திய அமைச்சரிடம் எடுத்துக் கூறியிருக்கின்றனர்.

புதிய சாலை
தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் மட்டும் ஒரு லட்சத்து 50,000 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலை அமைக்க வேண்டியிருப்பதாகவும் இதற்காக மத்திய அரசு தமிழக ஊரக வளர்ச்சித்துறை ரூ.4,000 கோடி நிதி வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் பெரியகருப்பன் கேட்டிருக்கிறார். அத்துடன் கையோடு எடுத்துச்சென்ற மனுவையும் மத்திய அமைச்சரிடம் வழங்கினார். அதை விரிவாக படித்துப் பார்த்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தமிழக அரசின் கோரிக்கையை நிச்சயம் தாம் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.

பட்டு வேட்டி
மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங்குக்கு அமைச்சர் பெரியகருப்பன் பட்டு வேட்டியை பரிசாக வழங்கினார். இந்தச் சந்திப்பின் போது தமிழக ஊரக வளர்ச்சித்துறை மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஒராண்டில் துறை ரீதியாக மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் பற்றியும் மத்திய அமைச்சருக்கு பெரியகருப்பன் எடுத்துக் கூறியிருக்கிறார்.

அமைச்சர்கள்
அண்மையில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு டெல்லிக்கு சென்று துறை ரீதியாக மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வைத்து தமிழகம் திரும்பிய நிலையில், இப்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மத்திய அரசிடம் நிதி கோருவதற்காக டெல்லி பயணம் மேற்கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications