தலைக்கு மேல் தொங்கிய 2 கத்திகள்.. எஸ்கேப் ஆன அமைச்சர் பொன்முடி! அடுத்தடுத்து வந்த தீர்ப்பால் ஹேப்பி!
சென்னை: அமைச்சர் பொன்முடி தலைக்கு மேல் தொங்கிய 2 கத்திகள் விலகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த வாரம் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட நிலையில், நில அபகரிப்பு வழக்கில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் பொன்முடிக்கு இந்த 2 வழக்குகள் தலைக்கு மேல் தொங்கிய கத்திகளாக இருந்து வந்த நிலையில், 2 வழக்கில் இருந்தும் தப்பித்துள்ளார் பொன்முடி.
நில அபகரிப்பு வழக்கு: தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 1996 - 2001 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தன்னுடைய மாமியார் சரஸ்வதி பெயரில் போலி ஆவணங்களைத் தயார் செய்து, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில், அரசுக்குச் சொந்த 3,630 சதுர அடி நிலத்தைப் பதிவுசெய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக 2003 ஆகஸ்ட் 27ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் பொன்முடி, அவருடைய மாமியார் சரஸ்வதி, அப்போதைய அடையாறு சார் பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு, தற்போதைய சென்னை துணை மேயர் மகேஷ் உட்பட 10 பேர்மீது வழக்கு பதிவுசெய்தனர். இதற்கிடையே வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே, பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார் பதிவாளர் புருபாபு, சைதை கிட்டு ஆகிய மூன்று பேர் இறந்துவிட்டனர்.
பொன்முடி விடுதலை: இதையடுத்து, எம்.பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், பொன்முடி உள்ளிட்ட மற்ற ஏழு பேர்மீதான வழக்கில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜரத்தினம் உட்பட 90-க்கும் மேற்பட்ட சாட்சிகள் அரசுத் தரப்பில் விசாரிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக நுாற்றுக்கும் மேற்பட்ட சான்று ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையால் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை முடிந்து, இன்று தீர்ப்பளிக்கபட்டிருக்கிறது.
லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பில் நீதிபதி ஜெயவேல், குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. எனவே சரஸ்வதி, புருபாபு, கிட்டு ஆகியோர் இறந்துவிட்ட காரணத்தால், அவர்கள்மீதான வழக்கு கைவிடப்படுகிறது. பொன்முடி உட்பட மற்ற ஏழு பேர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்" என்று தெரிவித்திருக்கிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கிலும் விடுதலை: முன்னதாக, கடந்த 13-5-1996 முதல் 31-3-2002 வரையிலான கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ஆம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று வேலூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்த லீலா முன்னிலையில் நடந்து வந்தது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து நீதிபதி வசந்த லீலா உத்தரவிட்டார். இந்த வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்டவில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
திமுகவினர் உற்சாகம்: அடுத்தடுத்து 2 முக்கிய வழக்குகளில் அமைச்சர் பொன்முடி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என தீர்ப்பு வெளியாகியுள்ளது அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது திமுகவுக்கு நெருக்கடியாக அமைந்துள்ள சூழலில், நீண்டகாலமாக இருந்த இந்த வழக்குகளில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டிருப்பதால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications