தொழில்துறையில் தமிழ்நாடு பின் தங்கியதாக கூறினேனா? அன்புமணியை லெப்ட், ரைட் வாங்கிய பிடிஆர்!
சென்னை: தமிழ்நாடு பிற தென் மாநிலங்களை விடவும் தொழில் துறையில் பின் தங்கி இருப்பதாக கூறிய கருத்து தொடர்பாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் கொடுத்துள்ளார். அன்புமணி தனது குடும்ப பிரச்சனை மற்றும் கட்சி பிரச்சனையை திசை திருப்ப இப்படி பேசி இருப்பதாக கிண்டல் செய்த பிடிஆர், கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுக்கு அதிமுகவே காரணம் என்றும் விமர்சித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி, திமுக மீதான விமர்சனங்களை கூர்மைபடுத்தி வருகிறார். இந்த சூழலில் நேற்று அன்புமணி, தொழில்துறையில் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா போன்ற தென் மாநிலங்கள் அளவுக்கு தமிழ்நாடு தீவிரம் காட்டவில்லை என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறி இருக்கிறார்.

அன்புமணி குற்றச்சாட்டு
தமிழக தொழில்துறை வளர்ச்சி பிற தென் மாநிலங்களை விட குறைவாக இருப்பதாக அமைச்சர் ஒருவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எதையும் வெளிப்படையாக பேசக் கூடியவர். தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சி அடையவில்லை. தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றன.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி
அதனை உறுதி செய்யும் வகையில் அமைச்சரின் பேச்சு அமைந்துள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அன்புமணியின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், அரைகுறைவாக ஒரு தகவலை வைத்து பேசிக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு உற்பத்தி
அரசியலுக்காகவோ, குடும்ப சூழ்நிலையை திசைதிருப்ப பேசுவது மிகவும் தவறான செயல். ஒரு காலத்தில் தொழில்துறை தமிழ்நாடு முன்னிலையில் இருந்த மாநிலம். ஆனால் 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளோம். தேசிய அளவிலான உற்பத்தியில் தமிழ்நாடு 11 சதவிகிதம் செய்து வந்தோம். அதில் இருந்து 9 சதவிகிதமாக குறைந்துவிட்டோம்.
சேவை துறையில் வளர்ச்சி
ஆந்திரா பிரதேசம் 4ல் இருந்து 6ஆக அதிகரித்துள்ளது. இதனால் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு தொழில்துறையில் கவனம் செலுத்தவில்லை. இன்னொரு புள்ளி விவர அடிப்படையில், கருணாநிதி ஆட்சி முடியும் போது, மொத்த தமிழ்நாடு உற்பத்தியில் 18ல் இருந்து 20 சதவிகிதமாக இருந்தது. அது நாளடைவில் சரிந்து 16 சதவிகிதமாக உள்ளது. கட்டுமான பணி, சேவைகள் தான் வளர்ந்ததாக கூறினேன்.
15 ஆண்டு கால அதிமுக ஆட்சி
2000ல் டைடல் பூங்கா, ஐடி துறை உருவாக்கப்பட்ட போது சென்னை தான் முதலிடத்தில் இருந்தது. அப்போது பெங்களூர் ஐடி துறையில் வளர்ச்சி அடையவில்லை. ஆனால் இன்று பெங்களூர் ஐடி துறை மற்றும் சுற்றுசூழலில் வளர்ச்சியடைந்துள்ளார்கள். அதாவது தமிழ்நாடு அதிக பாதிப்பை சந்தித்தது 2000 முதல் 2020 வரை. இந்த 20 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் அதிமுக ஆட்சி இருந்திருக்கிறது. அதனால் வந்த சரி இது.
எங்களின் ஆட்சி
இந்தியாவில் மிகவும் வேகமாக வளரும் மாநிலமாக தமிழ்நாடு இப்போது உள்ளது. அதாவது 9.69 சதவிகிதம் வளர்ச்சியை எட்டி வருகிறோம். இவ்வளவு சிறப்பாக முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார். 1 ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சி என்ற திட்டத்தை முன் வைத்து, செயல்பட்டு வருகிறார். அரசியல் ரீதியாக அதிமுக ஆட்சியை குறை சொல்லக் கூடாது என்பதற்காக பொதுவாக சொன்ன கருத்து அது.
கிண்டல்
எங்கள் ஆட்சி மீது நானே குறை சொல்வதாக கூறி இருக்கிறார்கள். அன்புமணிக்கு இருக்கும் குடும்ப பிரச்சனையையும், கட்சி பிரச்சனையையும் திசை திருப்புவதற்காக, நான் தொழிலதிபர்களுடன் பேசியதை அரைகுறையாக எங்கோ தகவல் எடுத்து நானே திமுக ஆட்சியை குற்றம்சாட்டுவது போல் பேசி இருப்பது கொஞ்சம் கேலியாக உள்ளது என்று பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications