பிரதமர் மோடிக்கு அமைச்சர் பிடிஆர் பதிலடி.. பெண்களுக்கான இலவச பஸ் திட்டத்தை விமர்சித்ததால் விவாதம்
சென்னை: பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்தை பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ள வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்கு, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை பிடித்தவுடன் பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்மூலம் பெண்கள் ‛பிங்க்' நிறத்திலான மாநகர அரசு பஸ் மற்றும் டவுன் பஸ்களில் இலவசமாக பயணிக்க முடியும்.

இந்த திட்டத்தால் தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். உண்மையில் இந்த திட்டத்துக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இதையடுத்து திமுகவை பாலோ செய்து கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. கர்நாடகா, தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பும் முக்கிய காரணமாகும். இந்நிலையில் தான் பிரதமர் மோடி பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்தை விமர்சனம் செய்துள்ளார்.
தற்போது லோக்சபா தேர்தல் நடந்து வரும் சூழலில் பிரதமர் மோடி தற்போது பல்வேறு சேனல்களுக்கு சிறப்பு பேட்டியளித்து வருகிறார். தற்போது அவர் இந்தியா டூடே சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். மொத்தம் 4 பத்திரிகையாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி அளித்த பேட்டியில், ‛‛சில அரசியல் கட்சிகள் பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தை வழங்குகின்றன. இதனால் மெட்ரோ ரயில்களில் யாரும் பயணிகளின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. அதோடு இலவச பஸ் பயண திட்டத்தால் போக்குவரத்து அதிகரிப்பதோடு சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது'' என்றார்.
பிரதமர் மோடியின் இந்த வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது. இதற்கு தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இது ஒரு கேலிக்கூத்து. கேலிக்கூத்தர்கள் ஒவ்வொருவரும் யார் முதலிடத்துக்கு வருகிறோம் என்பதற்காக போட்டியிடுகின்றனர். மேலும் இந்த காட்சி என்பது பிரதமர் ஏன் கடந்த 10 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்பதை விளக்குகிறது.
மேலும் அங்குள்ள Court Jesters, ஒரு பத்திரிகையாளராக செயல்பட்டு இருந்திருந்தால் தர்க்க ரீதியாக உடனே சில கேள்விகளை எழுப்பி இருக்க வேண்டும். அதில் முதலாவது கேள்வி இப்படி ஏதாவது ஒரு இடம் உள்ளதா? A.ஒரு இடத்தில் மெட்ரோ சேவை மட்டுமே இருந்து பஸ் சேவைகள் இல்லாமல் இருக்கிறதா? B.பொதுப்போக்குவரத்தை பொறுத்தமட்டில் மாணவர்கள், வயதானவர்கள், மாதாந்திர பஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படவில்லையா? C. பஸ் சேவையானது மெட்ரோ ரயிலின் சேவையை பாதிக்கிறதா? என கேட்டிருக்க வேண்டும்.
2. சென்னை மெட்ரோ 2ம்கட்ட பணிக்கு (புதிய வழித்தடம்) இன்னும் ஏன் நிதி வழங்க ஒப்புதல் வழங்காமல் மத்திய அமைச்சரவையில் பல ஆண்டுகளாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது?. அதேவேளையில் சென்னை மெட்ரோவுக்கு பிறகு வந்த பிற நகரங்களுக்கான மெட்ரோ திட்ட அறிவிப்புகள்/ஒப்புதல்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இது சென்னை மெட்ரோ பணியை மெதுவாக்கும் செயலா? அதேவேளையில் மெட்ரோவில் ஒருவர் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லமுடியாது? என்பதை சுட்டிக்காட்டி இருக்கலாம்'' என விமர்சனம் செய்த பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications