ஒரு மொழியை கூட சரியாக கற்கவில்லை.. நீங்கள் தமிழ்நாட்டை பார்த்து பேசலாமா? கொந்தளித்த பிடிஆர்!
சென்னை: தேசிய அளவில் இந்தி திணிப்பு தொடர்பான விவாதங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்பதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெளிப்படையாக அறிவித்துள்ளன. மும்மொழிக் கொள்கை ஏன் தேவையில்லை என்ற விவாதத்தையும் திமுக தரப்பில் பல்வேறு அமைச்சர்களும் பேசி வருகின்றனர்.
அதில் முக்கியமான அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். ஏனென்றால் பத்திரிகையாளர் கரண் தப்பார்-க்கு அளித்த நேர்காணல் தேசிய அளவில் விவாத பொருளாக மாறியது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், வரலாற்றில் நம் வெற்றியை பதிவு செய்வது மிகவும் குறைவாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கீழடியில் செய்யப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. வரலாற்றை பதிவு செய்வதில் நமக்கு ஏதோவொரு சிக்கல் இருந்து வருகிறது. அதனை சரியாக செய்ய தொடங்கி இருக்கிறோம். தேசிய அளவில் பாஜக மீதான ஈர்ப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. கல்வி நிதி விவகாரத்தில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு தேசிய அளவில் பிரச்சனை கொண்டு சென்றுவிட்டார்கள்.
மும்மொழிக் கொள்கையில் ஒரு மொழியை கூட நிறைவேற்ற முடியாமல் தோல்வியடைந்தவர்கள், இருமொழிக் கொள்கையை சிறப்பாக செயல்படுத்தி வென்ற பின் நம்மை, உங்களுக்கு போதாது.. நீங்கள் மும்மொழிக் கொள்கைக்கு மாற வேண்டும் என்கிறார்கள். நாட்டில் எங்கும் மும்மொழிக் கொள்கையை ஒழுங்காக செயல்படுத்தி நிரூபிக்க முடியவில்லை.
இது ஒன்றும் புதிதாக வந்ததல்ல. தேசியக் கல்வி கொள்கை ஒன்றும் பாஜகவின் புதிய கருத்தல்ல. ஏற்கனவே ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தேசியக் கல்வி கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. தேசியக் கல்வி கொள்கை இதற்கு முன்பாக மசோதாவாக கொண்டு வரப்பட்டது. ஆனால் இம்முறை மசோதாவாக கொண்டு வரப்படவில்லை. இதற்கே நிதி கொடுக்க மாட்டேன் என்றால், நாம் ஃபாசிசம் என்றுதானே சொல்ல முடியும்.
1968ல் மும்மொழிக் கொள்கை செயல்படுத்த முயற்சிகள் நடந்தது. அப்போது இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியும், இந்தி பேசும் மாநிலங்களில் சமஸ்கிருதம் இல்லாத தென் மாநில மொழி என்றும் செயல்படுத்த முயற்சிகள் நடந்தது. ஆனால் 1986ல் இதனை செயல்படுத்த முடியவில்லை என்று ஒப்புக் கொண்டார்கள். டெல்லியில் அமர்ந்து கொண்டு செயல்படுத்த முடியாது என்று புரிந்தது.
அதனால் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவது மாநிலத்தின் விருப்பம் என்று கூறினார்கள். இந்த கல்விக் கொள்கையில் எத்தனையோ குறைபாடுகள் இருக்கிறது. சிறுவயதிலேயே மாணவர்களை திசைதிருப்பும் நடவடிக்கையை முக்கியமாக எதிர்க்க வேண்டும். ஒப்பீட்டளவில் வெற்றிகரமாக நடப்பது இருமொழிக் கொள்கை.
ஆனால் தோல்வியடைந்த மாடலை தோல்வியடைந்தவர் வந்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்றால், அதனை தமிழ்நாடு ஏன் ஏற்க வேண்டும்? ஃபாசிசத்தின் முதல் இலக்கு இல்லாத ஒரு எதிரியை உருவாக்குவதுதான். அதனால் மத்திய அரசு தனது இயலாமையை மறைக்க, மும்மொழி என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள். நம்முடைய வரிப் பணத்தில்தான் அவர்கள் துறைகளை நடத்தி வருகிறார்கள். நம் பணத்தைதான் மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications