கொலை அல்ல ‘கலை’..களை எடுக்கும் மாநிலம்! பழிக்கு பழி கொலைக்கு ஒன்னும் செய்ய முடியாது -அமைச்சர் ரகுபதி
சென்னை: அடுத்தடுத்த கொலை சம்பவங்களால் தமிழகம் கொலை மாநிலமாக மாறி விட்டதாக தமிழக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் தமிழகம் கொலை மாநிலம் அல்ல 'கலை' மாநிலம் எனவும், குற்றவாளிகளை களை எடுக்கும் மாநிலம் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதற்கு பிறகாக சேலம் அதிமுக பிரமுகர் கொலையும் தமிழகத்தை பதறச் செய்தது.

இது மட்டுமல்லாமல் தர்மபுரியில் ஹோட்டலுக்குள் புகுந்து இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், கடலூர் அதிமுக நிர்வாகி பத்மநாபன், சிவகங்கை அருகே பாஜக பிரமுகர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் தொடர்ந்து வரும் அரசியல் கொலைகளால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கிடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரி செய்ய தமிழகம் முழுவதும் காவல்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்ட அருண் ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பேசப்படும் என சொல்லியிருந்தார். இதனை தொடர்ந்து சில என்கவுண்டர் சம்பவங்களும் நடைபெற்றன.
இந்நிலையில் அடுத்தடுத்த கொலை சம்பவங்களால் தமிழகம் கொலை மாநிலமாக மாறி விட்டதாக தமிழக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர்,"திமுக, ஆட்சியில் யாருக்கும் எங்கும் பாதுகாப்பு இல்லை. அரசியல் கட்சியினர் தொடர்ந்து கொலை செய்யப்படும் நிலையில், அதனை தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
அரசியல் கொலைகளை கடந்து விட நினைக்கும் திமுக அரசு, தனது வழக்கமான கண்துடைப்பு நடவடிக்கைகளால், கணக்கிற்காக சிலரை கைது செய்கிறது. அதிமுக வார்டு செயலாளர் கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தார். மேலும் திமுக ஆட்சியில் இது தமிழ்நாடு அல்லது கொலை நாடா என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகம் கொலை மாநில அல்ல 'கலை' மாநிலம் எனவும், குற்றவாளிகளை களை எடுக்கும் மாநிலம் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்," தமிழகத்தில் நடைபெறும் கொலைகளுக்கு அரசை குறை கூறுவது ஏற்புடையது அல்ல வன்முறை சம்பவங்களுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பழிக்குப் பழி கொலையில் அரசு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் தடுக்க முயற்சிக்கிறோம். அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்தால் பாதுகாப்பு வழங்கப்படும்.
பழிக்குப் பழியாக நடக்கும் சம்பவங்கள் தான் தமிழகத்தில் நடக்கிறது. ஆனால் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. புதுச்சேரியில் நடந்தால் கூட தமிழகத்தில் கொலைகள் நடப்பதாக கூறுகிறார்கள். வன்முறை சம்பவங்களுக்கும் அரசுக்கும் தொடர்பு கிடையாது. தற்போது நடக்கும் கொலைகள் முழுவதும் முன் விரோதம் காரணமாக நடப்பவை. சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாக எந்த வன்முறை சம்பவங்களும் நடக்கவில்லை.
மக்கள் தொகை உயர உயர இது போன்ற குற்றங்களும் அதிகரிக்கும் அல்லது குறையும். அரசாங்கம் இதற்கு பொறுப்பாக முடியாது. யார் யாருக்கு முன் விரோதம் இருக்கிறது என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதால்தான் பல்வேறு தொழிலதிபர்களும் தமிழகத்தை நாடி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இதனை மாற்றி தமிழகத்தை பின்னோக்கி கொண்டு செல்ல கனவு காண்கிறார்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது. தமிழகத்தில் பழி வாங்கும் செயல்கள் தான் அதிகம் நடைபெறும் நிலையில் அதனை தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications