தீபாவளி 2025: சென்னை தீவுத்திடலில் 30 பட்டாசுக் கடைகள்! சீன பட்டாசுகளே கிடையாது! சேகர்பாபு பேட்டி
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவு திடலில் பட்டாசு விற்பனையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். மேலும் பட்டாசு வாங்கும் விலையில் இருந்து 5 முதல் 10 சதவீதம் வரை லாபம் பெறும் அளவிற்கு பட்டாசுகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை வரும் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றால் பட்டாசுகள், புத்தாடைகள், இனிப்புகள் உள்ளிட்டவைதான் பிரதானம். பட்டாசுகள் சிவகாசியில் இருந்து வாங்கி தமிழகமெங்கும் ஸ்டால்கள் அமைத்து விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளை இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
இங்கு இன்று முதல் அக்டோபர் 21ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெற உள்ளது. சென்னை தீவுத்திடலில் 30 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.பட்டாசு விற்பனையை ஒட்டி தீவுத்திடலில் சுழற்சி முறையில் 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிபத்து ஏற்பட்டால் அதனை தடுக்க தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்த கடைகளில் விற்பனையை தொடங்கி வைத்து சேகர்பாபு பேசுகையில், "தீபாவளியை முன்னிட்டு தீவுத்திடலில் 11-வது ஆண்டாக இன்று 30 பட்டாசு கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த கடைகளில் ரூ.20 கோடி ரூபாய் அளவில் வியாபாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 30 கடைகளில் பங்குதாரர்களாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முதலாளிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரம் இந்த பட்டாசு கடைகளால் சிறக்கும் என நம்புகிறோம்.
இன்று திறக்கும் பட்டாசு கடைகள் தீபாவளி முடிந்து ஓரிரு நாட்களில் நிறைவு பெறும். பட்டாசு வியாபாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் போதிய பாதுகாப்பும் அடிப்படை தேவைகளான கழிப்பிடம், குடிநீர் போன்றவையும் நிச்சயமாக ஏற்படுத்தி தரப்படும்.
விருதுநகர், சிவகாசி போன்ற மாவட்டங்களில் இருந்து உயர்தர பட்டாசுகளை கொள்முதல் செய்துள்ளனர். பட்டாசு வாங்குமிடத்தில் நிர்ணயிக்கும் விலையை பொறுத்து அதோடு போக்குவரத்து மற்ற செலவினங்களை கணக்கிட்டு 5 முதல் 10% லாபம் வரும் வகையில் விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தீவு திடலில் சீன பட்டாசு எதுவும் இல்லை. இங்கு தமிழ்நாட்டின் பட்டாசுகள் மட்டுமே வியாபாரம் செய்யப்படுகிறது. பொதுமக்களின் கருத்துக்கேற்ப பட்டாசு வாங்க வருபவர்களுக்கு நியாயமான பார்க்கிங் விலையை நிர்ணயிக்க அரசு சார்பில் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications