224 கோவில்களுக்கு சொந்தமான ரூ.3,000 கோடி சொத்துக்கள் மீட்பு! அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!
சென்னை: திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழகம் முழுவதும் 224 கோவில்களுக்கு சொந்தமான ரூ.3,000 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்துவிரோத கட்சி திமுக என சிலர் பரப்புரை செய்து வரும் நிலையில், திமுகவின் ஆட்சி எல்லோருக்குமான ஆட்சி என்பதை இதன் மூலம் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இந்துசமய அறநிலையத்துறை ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இந்து சமய அறநிலையத்துறை
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்து மண்டல இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் தனி வட்டாட்சியர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

ஒரே ஆண்டில்
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் முதல் இப்போது வரை 224 கோவில்களுக்குச் சொந்தமான 1906.39 ஏக்கர் நிலமும், 497 கிரவுண்டு 1064 சதுரஅடி மனைகளும், 53 கிரவுண்டு 1738 சதுரஅடி கட்டிடமும், 36 கிரவுண்டு 1867 சதுரஅடி குளமும் கோவில்கள் வசம் சுவாதீனமாக பெறப்பட்டுள்ளதாகவும், இதுவரை மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு சுமார் ரூ.3 ஆயிரம் கோடியே 21 லட்சம் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.

பல ஆயிரம் ஏக்கர்
கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவிடுதல், எல்லைக் கற்கள் நடுதல் போன்ற பணிகளை உரிமம் பெற்ற நில அளவர்களைக் கொண்டு 59,435.24 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் அமைச்சர் சேகர்பாபு. கோவில் நிலங்கள் அளவிடும் பணி 20 மண்டலங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறிய அவர், அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து கோவிலுக்கு வருவாயை அதிகப்படுத்தும் பணிகளில் அலுவலர்கள் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இன்னும் 4 ஆண்டுகள்
இந்துவிரோத கட்சி திமுக என சிலர் பரப்புரை செய்து வரும் நிலையில், திமுகவின் ஆட்சி எல்லோருக்குமான ஆட்சி என்பதை இதன் மூலம் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். இதனிடையே ஒரே ஆண்டில் ரூ.3,000 கோடி மதிப்பு கோவில் சொத்துக்கள் மீட்பு என்றால் இன்னும் 4 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி மதிப்பு கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications