ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்
சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆகியோரே காரணம் என அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மதுரையில் பேட்டியளித்திருந்தார்.
அப்போது ஜெயலலிதா பெயரை அவர் விட்டுவிட்டதால் அதனை அதிர்ச்சியுடன் பார்த்த அதிமுகவினர் பேட்டியை முடித்தபின்னர் அதுபற்றி அமைச்சரிடம் எடுத்துக்கூறினர்.
இதையடுத்து செய்தியாளர்களை அழைத்து மறுபடியும் ஒரு பேட்டி கொடுக்க அமைச்சர் முயன்ற நிலையில், செய்தியாளர்கள் அந்த இடத்தில் இருந்து ஜூட் விட்டனர்.

அமைச்சர் கருத்து
பெரியார் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை தமிழக பாஜக ட்வீட் செய்தது தொடர்பாக மதுரையில் நேற்று பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழகம் என்றும் திராவிட பூமி என்றும், சுயமரியாதை இயக்கத்தை வித்திட்டவர் பெரியார் என்றும் கூறியிருந்தார்.

புகழாரம்
மேலும், இன்று தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆகியோரே காரணம் என அவர் தெரிவித்திருந்தார். இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், கலைஞர் என்பதோடு அவர் நிறுத்திக்கொண்டது தான். மேற்கொண்டு ஜெயலலிதா பற்றி அவர் கூறவில்லை.

பதறியடித்து
இதையடுத்து பேட்டியளித்து முடித்த பின்னர் அவரிடம் இது பற்றி நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனால் மறுபடியும் பேட்டியளிக்க எண்ணிய செல்லூர் ராஜூ செய்தியாளர்களை தேடியிருக்கிறார். ஆனால் அதற்குள் அடுத்த நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர் செய்தியாளர்கள்.

குழப்பம்
இதனிடையே நேற்று கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் கலைஞரை பற்றி அமைச்சர் செல்லூர் ராஜூ புகழாரம் என தலைப்புச் செய்தி இடம்பெற்றிருந்தது. இதனைப் பார்த்த அதிமுக நிர்வாகிகள் குழப்பமடைந்து அமைச்சரிடமே விளக்கம் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications