“சீஃப் கெஸ்ட்” செந்தில் பாலாஜி.. புழல் சிறையில் உள்ளவர் கரூரில் எப்படி? தடதடக்கும் தடகள சங்க அழைப்பு
சென்னை: சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறப்பு விருந்திரனாக தமிழ்நாடு தடகள சங்கம் அழைப்பு விடுத்து இருப்பதாக வெளியாகியுள்ள அழைப்பிதழ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 2வது மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டி துவக்கு விழா நாளை நடைபெற இருக்கிறது. கரூர் தளவாபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ள இந்த விழாவில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதன்ம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு இருப்பதாக அழைப்பிதழ் வெளியாகி உள்ளது.

அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ, குளித்தலை எம்.எல்.ஏ இரா.மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துறை வழங்க இருப்பதாக அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். தொடர்ந்து அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவர் எப்படி நாளை நடைபெறும் ஈட்டி எறிதல் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என்ற கேள்வி எழுந்து உள்ளது. இந்த அழைப்பிதழை பகிர்ந்து எதிர்க்கட்சியினரும் விமர்சித்து வருகிறார்கள்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "சிறையில் இருக்கிற செந்தில் பாலாஜியை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருக்கிறது தமிழ்நாடு தடகள சங்கம். குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அழைத்ததே தவறு என்கிற நிலையில், அந்த மாவட்டத்தின் காவல் துறை கண்காணிப்பாளரையே மற்றொரு சிறப்பழைப்பாளராக அழைத்திருப்பது ஆட்சியில் இருப்பவர்களின் அதிகார ஆணவத்தை வெளிப்படுத்துகிறது.

இனி சிறையில் இருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளை முக்கிய பிரமுகர்களாக உருவகப்படுத்த இந்த நிகழ்ச்சி தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். தமிழக காவல்துறை தலைவர் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை இந்த நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது என உத்தரவிட வேண்டும்.
முன்னாள் தமிழக காவல்துறை தலைவர் திரு.வால்டர் தேவாரம் அவர்கள் இந்த தடகள சங்கத்தின் தலைவர். முன்னாள் தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் அவர்கள் இந்த சங்கத்தின் துணை தலைவர். சிறையில் இருக்கிற ஒருவர் வர முடியாது என்று தெரிந்தும் அவர் வருவதாக பதிவிட்டிருப்பது குறித்து அவர்களுக்கு தெரியவில்லையென்றால், இந்த தவறை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது தெரிந்தே அனுமதித்துள்ளார்கள் என்றால் தமிழகத்தின் அரசியல் அவலத்தை உணர்த்துவதோடு, அவர்களின் தலைமை பண்பையும் கேள்விக்குறியாக்கும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications