கலைஞர் பெயர் எங்கே? பபாசி அறிவிப்பால் வெடித்தது சர்ச்சை! அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவால் பரபரப்பு!
சென்னை : முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது பட்டியல் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்த்தால் (பபாசி) அறிவிக்கப்பட்ட நிலையில், கலைஞர் பெயரிலான அந்த விருது அறிவிப்பில் வெறுமனே 'பொற்கிழி விருது' என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி 2007ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் 6 எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பபாசி வெளியிட்டுள்ள விருது அறிவிப்பில், வெறுமனே 'பொற்கிழி விருது' என்று மட்டும் குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி அமைச்சரே கேள்வி எழுப்பி இருப்பதால், இந்த விவகாரம் மேலும் தீவிரமாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை புத்தகக் காட்சி
46வது சென்னை புத்தகக் காட்சி 2023 ஜனவரி 6ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது.வரும் 6ஆம் தேதி மாலை புத்தகக் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் இந்த புத்தகக் காட்சி சர்வதேச புத்தகக் காட்சியாக நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜனவரி 4ஆம் தேதி புத்தகக் காட்சி குறித்தும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது பெறுபவர்கள் மற்றும் பபாசியின் விருது பெறுபவர்கள் குறித்தும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினர் (பபாசி) அறிவித்தனர். இந்நிகழ்வில் பபாசியின் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகக் குழுவினர் பங்கேற்றனர்.

கலைஞர் பொற்கிழி விருது
அப்போது முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது பெறுவோர் அறிவிக்கப்பட்டனர். தேவிபாரதி (நாவல்), சந்திரா தங்கராஜ் (சிறுகதைகள்), தேவதேவன் (கவிதை), சி.மோகன் (மொழிபெயர்ப்பு), பிரளயன் (நாடகம்), பேரா.பா.ரா.சுப்பிரமணியன் (உரைநடை/ஆய்வு) ஆகிய 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டது. ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் சென்னை புத்தகக் காட்சி 2023 தொடக்க விழாவில் 2023ஆம் ஆண்டிற்கான முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகள் மற்றும் தலா ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசுகளை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்.

கருணாநிதி தொடங்கி வைத்தார்
2007-ல் 30-வது சென்னை புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்த, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, தம் சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை பபாசியிடம் வழங்கி, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஒரு பிறமொழி எழுத்தாளருக்கும், ஒரு ஆங்கில மொழி எழுத்தாளருக்கும் தலா ஒரு லட்சம் வீதம் பொற்கிழியும், விருதும் வழங்குமாறு தெரிவித்தார். அதன்படி, இந்த விருதுகள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வருகின்றன.

6 பேர்
பபாசியால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில் இருந்து, கவிதை, புனைவு இலக்கியம், உரைநடை, நாடகம் ஆகியவற்றில் சிறந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் எழுதும் சிறந்த 2 பேருக்கு ஆண்டுதோறும் விருது மற்றும் ரூ.1 லட்சம் பணமும் அளித்து கவுரவித்து வருகிறது. அந்தவகையிலேயே இந்த ஆண்டுக்கான விருதுக்கு 6 பேர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், பபாசி வெளியிட்ட விருது அறிவிப்பில், கலைஞர் பெயரே இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கலைஞர் பெயர் இல்லை
முன்னாள் முதல்வர் கருணாநிதி தமது சொந்தப் பணத்தில் வழங்குமாறு கோரிய விருது பற்றிய அறிவிப்பிற்கு, அவரது பெயரையே குறிப்பிடாமல் விருது பட்டியலை பபாசி வெளியிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசு இதுபற்றி கேள்வி எழுப்பி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். எழுத்தாளர்கள் பலரும் இதைக் குறிப்பிட்டு தங்கள் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

தங்கம் தென்னரசு கேள்வி
இதுகுறித்து, தமிழக தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ஃபேஸ்புக் பதிவில், "முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் நிறுவப்பட்ட விருதிற்கு, அவர் பெயரையே போடாமல், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) வெறுமனே 'பொற்கிழி விருது' என அவர்களது அமைப்பின் பேரில் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறதென்றால்.." என காட்டமாக பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications