பக்கத்து மாநிலங்களை விட ஸ்டாலின் குறைவான முதலீடுகளை ஈர்த்தாரா? அமைச்சர் டிஆர்பி ராஜா விளக்கம்!
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தின்போது, முதலீடுகள் செய்ய முன்வந்த அனைவருடனும் நாம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடவில்லை. யார், யார் உறுதியாக பணியை துவக்குவார்கள் என்பதை பல வகையில் உறுதி செய்து, அதன் மூலம் தமிழ்நாட்டுக்கு வளர்ச்சி உறுதி செய்யப்படுமா என்பதையும் கவனத்தில் கொண்டு தான் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்க்க ஆகஸ்ட் 27 அன்று தொடங்கிய அமெரிக்கச் சுற்றுப் பயணம் முடிந்து இன்று சென்னை வந்து சேர்ந்தனர். இந்தப் பயணத்தில் 7,616 கோடி ரூபாய் புதிய முதலீடாக ஈர்க்கப்பட்டு,11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

தெலுங்கானா முதல்வராக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற ரேவந்த் ரெட்டி, கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை 8 நாள்கள் மட்டுமே அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டு, ரூ.31,500 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். மொத்தம் 19 நிறுவனங்களுடன் தெலுங்கானா அரசு செய்து கொண்ட ஒப்பந்தங்களின் மூலம் இவ்வளவு முதலீடுகள் கிடைத்துள்ளன.
அதேபோல், கர்நாடகாவில் கடந்த ஆண்டு புதிதாக பொறுப்பேற்ற சித்தராமையா தலைமையிலான அரசின் சார்பில் அம்மாநில தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தலைமையிலான குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் மூலம் ரூ.25,000 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளனர்.
அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும் போது அமெரிக்காவில் தமிழகம் ஈர்த்த முதலீடுகளின் மதிப்பு மிகவும் குறைவு. அந்த வகையில் தமிழக முதல்வரின் அமெரிக்கப் பயணம் தோல்வியடைந்துள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில், முதலீடுகள் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கப் பயணத்தில் உடன் சென்று வந்த தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது வலைதளப் பதிவில், “இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர் என அனைவராலும் போற்றப்படும் திராவிட நாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலுடன் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நமதுஅரசின் அமெரிக்க பயணம் வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது.
இந்தப் பயணத்தில் 7,616 கோடி ரூபாய் புதிய முதலீடாக ஈர்க்கப்பட்டு,11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) போடப்பட்டுள்ளன. இதற்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று உலகப் புகழ்பெற்ற ஃபோர்டு நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை மீண்டும் துவங்கப் போவதாக அறிவித்துள்ளது. இன்னும் கூடுதலான முதலீடும், அதிகம் பேருக்கான வேலை வாய்ப்புகளும் உறுதி செய்வதற்கான முதல் கட்டப் பணிகளை முடித்துவிட்டு வந்திருக்கிறார் நமது முதலமைச்சர்.
வெகு விரைவில் மேலும் பல முதலீடுகள் வந்து குவிய இருக்கின்றன என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். மீண்டும் சொல்கிறேன்:இது ஆரம்பம் மட்டுமே. இப்பயணத்தின் போது முதலீடுகள் செய்ய முன்வந்த அனைவருடனும் நாம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடவில்லை. யார் யார் உறுதியாகப் பணியைத் துவக்குவார்கள் என்பதைப் பல வகையில் உறுதி செய்து, அதன் மூலம் தமிழ்நாட்டுக்குப் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி உறுதி செய்யப்படுமா என்பதையும் கவனத்தில் கொண்டுதான் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
ஆகையால்தான் முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வதைப் போல இந்தப் பயணத்தின் அனைத்து ஒப்பந்தங்களும் 100 சதவிகிதம் நிறைவேற்றப்படும் வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக உள்ளன. நமது முதலமைச்சர் பொறுத்தவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பு எவ்வளவு என்பதைவிட அவை எந்த அளவிற்கு முதலீடாக மாற்றப்பட்டு, தமிழ்நாட்டில் பரவலான அளவில் நமது மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதில்தான் மிகுந்த கவனமாக இருக்கிறார்! எனவேதான் முதலீடாக மாறும் உறுதித்தன்மை கொண்ட நிறுவனங்களுடன் மட்டுமே ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
இன்னும் பல நிறுவனங்கள் முதலீடு செய்யத் தயாராக இருந்த நிலையிலும் அவற்றின் உறுதித்தன்மை குறித்த கூடுதல் விவரங்களைப் பெற்று, அதன் பின்னர் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடலாம் எனப் பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கப் பயணத்தில் சான்பிரான்சிஸ்கோவிலும் சிகாகோவிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டில் 100 சதவீதம் முதலீடாக மாறி, மாநிலத்தில் பரவலான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது நிச்சயம்! இந்தியாவின் முதன்மை முதல்வரான திராவிட நாயகர் அதனைச் சாதித்துக் காட்டுவார்” என்று விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications