“கார் ஓட்டணும்னு ரொம்ப நாள் ஆசை” - 23,424 மகளிர் கனவை நிஜமாக்கிய உதயநிதி
சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக 1,808 நகர்ப்புற சுய உதவிக்குழுக்களில் உள்ள 23,424 மகளிர்கள் பயன்பெறும் வகையில் 100 கோடி ரூபாய் அளவில் வங்கிக்கடன் இணைப்பை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்.
கடந்த 14 ஆம் தேதி இதற்கான விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதில் திண்டுக்கல் மாநகராட்சியிலிருந்து துளசி மகளிர் சுய உதவிக்குழு, சென்னை அனகாப்புத்தூர் நகராட்சியிலிருந்து தாமரை மகளிர் சுய உதவிக்குழு, பல்லாவரம் நகராட்சியிலிருந்து நக்சத்ரா சுய உதவிக்குழு, புதுக்கோட்டை நகராட்சியிலிருந்து பத்மாவதி சுய உதவிக்குழு எனத் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகராட்சிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பல பெண்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ஓட்டுநர் உரிமத்தை வழங்கினார். இந்த விழாவில் ஓட்டுநர் உரிமம் பெற்ற அனைத்து பெண்களும் முதல் தலைமுறையாக ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் என்பது கூடுதலான சிறப்புச் செய்தி.

பல தடைகளைத் தாண்டி, இன்றைக்கு ஓட்டுநர்களாக மாறி இருக்கும் இந்தப் பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?
"நான் எல்லாம் வீட்டைவிட்டு வெளியே வருவேன் என்று நம்பவே இல்லை. வீட்டுக்குள்ளாகவே கடைசிக் காலம் வரை நான் இருந்துவிடுவேன் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தேன்.
லேடீஸ் சில கார் ஓட்டுவதைப் பார்க்கும்போது, நாமும் கார் ஓட்டக் கற்றுக் கொண்டால் என்ன என்று அடிக்கடி மனதில் தோன்றும். ஆனால், அந்த ஆசையை யாரிடமும் சொல்ல முடியாது. வீட்டிலும் கேட்க முடியாது. இப்படியே பல வருடங்கள் பறந்துவிட்டன" என எடுத்த எடுப்பிலேயே தனக்கு சுய உதவிக்குழு மூலம் எப்படி புதிய உலகம் திறந்துள்ளது என்பதைப் பற்றி நீல வானில் மிதப்பதைப் போலச் சொல்லத் தொடங்குகிறார் நீல உடையில் இந்த விழாவில் கலந்துகொண்ட பெண்மணி.

"எனக்கும் மற்றவர்களைப் போல கார் ஓட்ட வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை. அது இந்தக் குழு மூலமாக நிறைவேறி உள்ளது. குழுவில் உள்ளவர்கள் மிகப் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தார்கள்.
இன்றைக்கு கார் ஓட்ட கற்றுக்கொண்டு அதற்காக ஓட்டுநர் உரிமமும் பெற்று விட்டேன். நீங்கள் கார் கொடுத்தால், நான் இப்போது பயமே இல்லாமல் தைரியமாக ஓட்டுவேன். இதற்காக நான் அமைச்சர் உதயநிதிக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்கிறார்.

இந்த விழாவில் பங்கேற்ற பல சுய உதவிக்குழுக்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றன. அவர்கள் யாரும் இதுவரை இத்தனை பிரம்மாண்டமான விழாவைப் பார்த்தது இல்லை என்கிறார்கள்.
மேலும் இதைப் பார்க்கும்போது புதிய உற்சாகம் கிடைத்துள்ளது என்றும், இன்னும் பல பெண்களைப் புதியதாக இணைத்து குழுவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பிறந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
"என்னிடம் முதன்முதலாக கார் ஓட்ட கற்றுக்கொள்கிறீர்களா? எனக் கேட்ட போது மனசுக்குள் அவ்வளவு சந்தோஷம். நான் அதுவரை காரைத் துடைத்ததுகூட கிடையாது. எந்தப் பக்கம் என்ன இருக்கும்? எப்படி அதை இயக்குவது என எதுவுமே தெரியாது. சுய உதவிக்குழு மூலமாக கற்றுக் கொடுத்தார்கள்.

நம்மால்கூட கார் ஓட்ட முடியுமா? என்ற தயக்கத்துடன்தான் போனேன். ரொம்ப பொறுமையா, அக்கறையா கற்றுக் கொடுத்தார்கள். இன்றைக்கு நான் சொந்தமாகச் சுயதொழில் செய்வதற்கான நம்பிக்கை பிறந்ததே இந்தச் சுய உதவிக்குழு கொடுத்த தைரியத்தால்தான்" என்கிறார் மஞ்சள் உடையில் மங்களகரமாக விழாவுக்கு வந்த பெண் மணி ஒருவர்.
"ஃபோர் வீலர் ஓட்டக் கற்றுக்கொள்ள விருப்பமா என எங்கள் சுய உதவிக் குழுவில் கேட்டார்கள். டூ வீலர் ஓட்டுவதே பெரிய விஷயம். அதுவும் பெண்கள் ஃபோர் வீலர் கற்றுக்கொள்வது என்பது சாதாரணமான வாய்ப்பு இல்லை. குழுவில் கேட்ட உடனேயே நான் சம்மதம் சொல்லிவிட்டேன்.

இதைவிட்டால், அப்புறம் வாய்ப்பு வராது என்றும் தோன்றியது. எங்களுக்கு ஐஆர்டி மூலமாக (The Institute of Road Transport) முறையாகச் சொல்லிக் கொடுத்தார்கள்.
குழுவின் மூலமாக இப்போது ஃபோர் வீலர் கற்றுக் கொண்டுவிட்டேன். நானே தைரியமாக ஓட்டவும் பழகிவிட்டேன். இப்போது நீங்கள் வாகனத்தைக் கொடுத்தால் நான் ஓட்டிக்காட்டுவேன். அந்தளவுக்கு நல்ல பயிற்சி கிடைத்துவிட்டது" என்கிறார் முகம் முழுக்க மகிழ்ச்சியை நிரப்பிக் கொண்டு கைகளில் ஓட்டுநர் உரிமத்துடன் விழாவில் காட்சி தந்த சிகப்பு புடவை அணிந்த பெண்மணி.

விளையாட்டுத்துறையுடன் இளைஞர் நலன் துறையையும் உதயநிதி ஏற்றது முதல் தினம் விழாக் கோலமாகக் காட்சி அளிக்கிறது இந்தத் துறை. இதற்கு முன்னதாக சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் தயாரிக்கும் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்காகத் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இயங்கிவந்த பூமாலை வளாகங்களை 5 கோடியே 16 லட்சம் செலவில் அரசு புதுப்பித்துக் கொடுத்தது. அத்தனை வளாகங்களையும் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில்தான் திறந்து வைத்தார்.
அதே வேகத்தில் 100 கோடி அளவுக்கான திட்டப்பணிகள் இப்போது செயல்வடிவம் பெற்றுள்ளன.
இது குறித்து தனது ட்விட்டர் பதிவு ஒன்றில் உதயநிதி ஸ்டாலின், " முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான நம் திராவிட மாடல் அரசு, மகளிர் மேம்பாட்டுக்காக எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 1, 808 நகர்ப்புற சுய உதவிக் குழுக்களில் உள்ள 23,424 மகளிர் பயன் பெறும் வகையில் 100 கோடி ரூபாய் அளவில் வங்கிக்கடன் இணைப்பைச் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினோம்.
மேலும், திருநங்கையர் - திருநம்பியர்களை உள்ளடக்கிய சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4 லட்சம் வங்கிக் கடன் இணைப்பினை வழங்கி உற்சாகப்படுத்தினோம்.
இந்த கடன் இணைப்பை நம்முடைய கழக அரசு, வெறும் கடன் தொகையாகப் பார்க்காமல், நம் சுய உதவிக்குழு சகோதரிகளின் உழைப்பின் மீதான நம்பிக்கையாகப் பார்க்கிறது.

மேலும், 50 நகர்ப்புற சாலையோர வியாபாரிகளுக்கு உணவுத் தரச் சான்றிதழ்கள், திறன் பயிற்சி பெற்ற 100 இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகள், ஓட்டுநர் உரிமங்களை வழங்கி மகிழ்ந்தோம்.
சுய உதவிக் குழுக்களுக்குச் சிறப்பான முறையில் வங்கிக்கடன் வழங்கிய 6 வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகள் மற்றும் 9 தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு சான்றிதழ்களை வழங்கினோம்.
மகளிர் மேம்பாட்டுக்குக் கழக அரசு என்றும் துணை நிற்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் நலன் நாட்டிற்குப் பலன்!














Click it and Unblock the Notifications