செமல்ல! அர்ச்சகர் பயிற்சி முடித்த 3 பெண்களுக்கும் ஸ்மார்ட்போன்+ பணமுடிப்பு வழங்கிய அமைச்சர் உதயநிதி!
சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சி முடித்த 3 பெண்களையும் நேரில் சந்தித்து பாராட்டி அவர்களுக்கு தலா ரூ.25,000 நிதி மற்றும் ஸ்மார்ட் போன் வழங்கியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இதுவரை ஆண்கள் மட்டுமே அர்ச்சகர் பயிற்சி பெற்ற நிலையில் இப்போது பெண்களும் அர்ச்சகர் பயிற்சி பெற முன் வந்துள்ளனர். அந்த வகையில் 2022 -2023ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சியின் அடிப்படையில் 3 பெண்கள் உட்பட 94 பேருக்கு சான்று வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தாண்டும் 15 பெண்கள் வரை அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் ஆர்வமுடன் இணைந்துள்ளனர்.

அர்ச்சகர் பயிற்சி முடித்து சான்று பெற்ற ரஞ்சிதா, கிருஷ்ணவேனி, ரம்யா, என்ற 3 பெண்களும் ஸ்ரீரங்கத்தில் செயல்படும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்றார்கள். இவர்கள் மூவருக்கும் அண்மையில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதுதொடர்பாக பெருமையுடன் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், "பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சி முடித்த 3 பெண்களையும் நேரில் சந்தித்துப் பாராட்டியதோடு, அவர்களுக்கு தலா ரூ.25,000 நிதி மற்றும் ஸ்மார்ட் போன் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளினை நிரந்தரமாக நீக்கிய, நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சமூகத்தில் சரி பாதி இருக்கின்ற பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்க உத்தரவிட்டார்கள். அதன்படி, ரஞ்சிதா, கிருஷ்ணவேணி, ரம்யா ஆகிய மூன்று சகோதரிகள் அர்ச்சகர் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர். அந்த சகோதரிகளை இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.

அவர்களுடைய பணிக்கு பயனளிக்கும் வகையில் ஸ்மார்ட்போன் மற்றும் தலா ரூ.25 ஆயிரம் நிதியினை வழங்கினோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம், சாதி ஏற்றத்தாழ்வை மட்டுமன்றி, ஆண் - பெண் பாகுபாட்டையும் போக்கியுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அர்ச்சகர் பயிற்சி முடித்த சகோதரிகளின் பணி சிறக்கட்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications