“அந்தப் புள்ளை தெய்வம்பா” … ஆனந்தக் கண்ணீரால் உதயநிதியை வாழ்த்திய ஆயாக்கள்
சென்னை: மழை வரும்போது பலருக்கு மகிழ்ச்சியும்கூட வரும். ஆனால், சிலருக்குக் கண்களில் கண்ணீர் வரும். குறிப்பாகச் சென்னையில் நீர்நிலைகளின் அருகில் குடிசை வீட்டில் வாழ்க்கை நடத்தும் பலருக்கு மழைக்காலம் என்பது சோதனையான காலம். அப்படிக் கஷ்டப்படும் மக்களைக் கண்டுபிடித்து அவர்களை வேறு இடங்களில் குடியமர்த்தி வருகிறது தமிழ்நாடு அரசு.
மழைநீர் வெளியேறும் கால்வாய் மறிந்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அகற்றிவிட்டு, முறையான வடிகால் அமைக்கும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியால் வரும் காலங்களில் வெள்ளம் தேங்காமல், சாலைகளில் மக்கள் நடமாடமுடியும். ஆனால், இந்தப் பணி சிலரைப் பாதித்திருக்கிறது. குறிப்பாகச் சாலையோரங்களில் அல்லது கால்வாய் பள்ளங்களில் முறைகேடாகக் குடிசைகள் கட்டிவசித்து வந்த சிலர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அந்த மக்கள் தங்களின் வறுமை நிலையை எடுத்துக் கூறி, அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர். அந்த மக்கள் பல ஆண்டுகளாக இதே பகுதியில் வாழ்ந்துவருகின்றனர்.

திடீரென்று அவர்களின் குடிசைகள் அகற்றப்பட்டதால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்த, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு உதவ முடிவுசெய்தார். வயதான காலத்தில் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் வசிப்பதற்காக ஏற்பாடுகளைச் செய்து தந்துள்ளார்.
தங்களின் இறுதிக் காலகட்டத்தில் உதவி செய்த உதயநிதிக்கு அந்த மக்கள் தங்களின் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
"நாங்கள் எம்.ஏ.சாகிப் தெருவில் சுமார் 40 வருடங்களாக வாழ்ந்துவருகிறோம். ஆனால், முறையான வீடு இல்லை. நாங்கள் கட்டி இருந்த வீடுகளை நீதிமன்ற உத்தரவால் அகற்றிவிட்டார்கள். எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தினம் தினம் சம்பாதிப்பது வயிற்றுக்கும் வாய்க்குமே சரியாக உள்ளது. இப்படி வீடு எடுத்துவிட்டதால் வேறு வழி தெரியாமல் தவித்து வந்தோம்" என்கிறார் ஒரு மூதாட்டி.

"எங்களுக்கு 3 மாதங்களுக்கு முன்னாடியே நோட்டீஸ் கொடுத்தார்கள். முறைகேடாகக் கால்வாய்களை மறித்து வீடுகள் கட்டி இருப்பதால், இடிக்க உத்தரவு வந்துள்ளது என்று அதிகாரிகளும் வந்து எச்சரிக்கை செய்தார்கள். எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நீதிமன்றம் தீர்ப்பு, ஆகவே வேறு வழியில்லை எனச் சொல்லிவிட்டார்கள்.
நாங்கள் படிக்காத மக்கள். எப்படி ஐயா பிழைக்கிறது? அதான் எங்கள் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதியை பார்த்து உதவிக் கேட்டோம். அவர் கட்டாயம் செய்கிறேன் என்று வாக்கு கொடுத்தார். சொன்னபடியே இப்போது அந்த மகராசன் வீடு கொடுத்திருக்கிறார். அவர் 100 வயசு வரை நோய் நொடி இல்லாமல், சிறப்பா வாழவேண்டும். தங்கமான பிள்ளை அவர்.

அவர் மட்டும் உதவவில்லை என்றால், நடுத்தெருவில் நின்றிருப்போம். அந்த சாமீதான் எங்களைக் காப்பாற்றியது" என்கிறார் இதே பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவரும் ஒரு வயதான பாட்டி.
இவரைப்போலவே ஏறக்குறைய 20 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அத்தனைப் பேரையும் தன் அலுவலகத்திற்கு அழைத்து புதிய வீடுகளை ஒதுக்கியதற்கான ஆணையை வழங்கி இருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மழை நீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, #ChepaukTriplicane தொகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகளை இழந்தவர்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், முதல்கட்டமாக 20 குடும்பங்களுக்கு புதிய வீடு ஒதுக்கீடு செய்வதற்கான ஆணைகளை இன்று வழங்கினோம். துயர் நீங்கி புதிய வீட்டில் மகிழ்ச்சி பொங்கிட வாழ்த்துகள்" எனத் தெரிவித்திருக்கிறார்.
"வீட்டை இடித்த நாளிலிருந்து நிறையக் கஷ்டங்கள் பட்டோம். கட்டிக் கொள்ளத் துணி மணி இல்லை. பொங்கிச் சாப்பிடச் சின்ன இடம் கூடவில்லை. எங்கே இருப்பது? எங்கே குடிப்பது? காலையில் எழுந்தால் இதே பிரச்சினைதான். நாங்கள் பட்ட கஷ்டம் எங்கள் எதிராளிக்குக்கூட வரக் கூடாது. அந்தளவு வேதனை" என்கிறார் அறுபது வயதைக் கடந்த மூதாட்டி ஒருவர்.
"தினம் நடு ரோட்டில் வைத்து சாப்பாடு சமைத்துச் சாப்பிட்டோம். காற்று அடித்தால் மண் பறக்கும். வண்டிகள் போனால், புழுதிப் பறக்கும். எவ்வளவு சிரமம் இருந்திருக்கும் நினைத்துப் பாருங்கள்? தினம் நிம்மதி இல்லாமல் இருந்தோம்.

என்றைக்குடா நமக்கு ஒரு விடிவுகாலம் வரும் என்று தெய்வத்தை வேண்டாத நாளில்லை. அந்தக் கடவுள்தான் எங்கள் வீட்டுப் பிள்ளை உதயநிதி ரூபத்தில் வந்து இன்றைக்கு வீடு கொடுத்திருக்கிறது" என நெஞ்சு விம்மியபடி சொல்கிறார் மற்றொரு பாட்டி. கூடவே கையில் தனக்கு வீடு வழங்கப்பட்ட ஆணையையும் எடுத்து காட்டுகிறார்.
"ஏதோ எங்களுக்கு என்று ஒரு வீடு வாசலைக் கொடுத்துவிட்டார் எங்கள் எம்.எல்.ஏ உதயநிதி. அந்தப் பிள்ளை நல்லா இருக்க வேண்டும்பா. இனிமேல் தேர்தல் வந்தது என்றால், அவருக்குத்தான் போடுவோம். வேறு யாருக்கும் ஓட்டே போடமாட்டோம்" என்கிறார் சிகப்பு மஞ்சள் புடவையிலிருந்த ஆயா.
அமைச்சர் உதயநிதி செய்த இந்த உதவிக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பாக நீதிமன்ற உத்தரவால் வீட்டை இழந்து தவித்த இந்த மக்கள், அரசு வங்கி உள்ள புதிய வீட்டில் இந்த மழைக்காலத்தில் நிம்மதியாக வாழப்போகின்றன.
இனிமேல், புழுதியிலும் வேகாத வெளியிலும் இவர்கள் கிடந்து தவிக்க வேண்டி இருக்காது. இந்த வலியை உணர்ந்தவர்களுக்கு நிச்சயம் உதயநிதிக்கு ஒரு லட்சம் Heart symbol ஐ அள்ளி அள்ளிக் கொடுப்பார்கள்.












Click it and Unblock the Notifications