கள்ளச்சாராய பலி.. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி.. குடும்பத்தினருக்கு ஆறுதல்!
சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். விஷச்சாராயம் குடித்ததால் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கோவிந்தராஜ் என்ற நபர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இதனை வாங்கி குடித்த சிலருக்கு வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் ஏற்பட்ட நிலையில் அடுத்தடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 200 லிட்டர் விஷ சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்ததில் அதில் மெத்தனால் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட எஸ்.பியை சஸ்பெண்ட் செய்துள்ள தமிழக அரசு, மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷ்ரவன் குமார் ஜடாவத் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல எஸ்.பி. ஆக இருந்த சமய் சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்.பி. ஆக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்.பி. தமிழ்ச்செல்வன், திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ், கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர்கள் கவிதா, பாண்டிசெல்வி உள்ளிட்ட 8 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில், கள்ளச்சாராய குற்றங்கள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், பலியானவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்திக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டார். சட்டசபையின் இன்றைய நிகழ்வில் பங்கேற்ற பின்னர் கள்ளக்குறிச்சிக்கு சென்றார் உதயநிதி ஸ்டாலின். அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோரும் கள்ளக்குறிச்சிக்கு விரைந்தனர்.
கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் கள்ளக்குறிச்சிக்கு விரைந்தனர். விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று கள்ளக்குறிச்சி சென்றார்.
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் உடன் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் இருப்பு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
மேலும், கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் உடல்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.












Click it and Unblock the Notifications