அமைச்சர் உதயநிதி அறைக்கு சில்வர் கலர் பெயிண்ட்.. 3 லட்சத்தில் எல்இடி டிவி! என்னென்ன வசதிகள்?
சென்னை: உதயநிதி ஸ்டாலினுக்கு வெறும் 6 நாட்களில் ரூ 30 லட்சம் செலவில் அமைச்சர் பணிகளை செய்ய அறை தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஒன்றரை ஆண்டுகளில் அந்த நிகழ்வு எப்போது எப்போது என தொண்டர்கள் காத்திருந்தனர். அது நேற்று இனிதே எளிமையாக நடந்துவிட்டது. இதனால் திமுக நிர்வாகிகளின் மனம் குளிர்ந்துவிட்டது.
அதாவது எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவார் என கூறினர். ஆனால் அது நடக்கவில்லை. அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.

உதயநிதி ஸ்டாலின்
இதையடுத்து திடீரென அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினை இணைக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். அந்த பரிந்துரையை அவரும் ஏற்றார். இதையடுத்து உதயநிதி அமைச்சர் ஆவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவருக்கான அறையும் 6 நாட்கள் தயார் செய்யப்பட்டது.

தலைமைச் செயலகம்
சென்னை தலைமைச் செயலகத்தின் முதல் மாடியில் அமைச்சர்களுக்கான அறைகள் உள்ளன. இங்கு சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் பயன்பாட்டில் இருந்த 1000 சதுர அடி அறை விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்ற உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

உதயநிதி அலுவலகம்
இந்த அறையை 3ஆக பிரித்து உதயநிதியின் அலுவலகத்தை பொதுப் பணித் துறையினர் தயார் செய்துள்ளனர். இதற்காக தனியார் கட்டட கலை நிபுணர் வாயிலாக வரைபடம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி உதயநிதிக்கு 400 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது.

அறை எத்தனை அடி
உதவியாளர்கள் உள்ளிட்டோர் பணிபுரிவதற்கான அறை 250 சதுரடியில் அமைக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஓய்வெடுப்பதற்கு படுக்கை அறை மற்றும் கழிப்பறை வசதியுடன் 350 சதுர அடியில் தனி அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அமர்ந்து உணவு அருந்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

தர்பார் மண்டபம்
சட்டசபை தர்பார் மண்டபத்தில் இருப்பது போன்று உதயநிதி அலுவலகத்தில் தொங்கும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இது இரண்டு லட்சம் ரூபாய்க்கு சென்னை பாரிமுனையில் வாங்கப்பட்டதாக தெரிகிறது. அது போல் அதிக ஒளி தரும் மின் விளக்குகளும் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன.

ஃபால்ஸ் சீலிங் இல்லை
பாரம்பரிய மாறாமல் இருக்க ஃபால்ஸ் சீலிங் போடப்பட்டவில்லை. உதயநிதிக்கு பிடித்த சில்வர் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. உதயநிதி அறையில் நாற்காலிகள் டான்சி நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. தேக்கு மரத்தால் செய்யப்பட்ட ஒரு நாற்காலியின் விலை ரூ 20 ஆயிரம் ஆகும். உதயநிதி அறையில் 15 இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

உதயநிதி இருக்கைக்கு எதிரே
உதயநிதி அமரும் இருக்கைக்கு எதிர்புறம் உள்ள சுவரில் 3.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பெரிய ஸ்மார்ட் எல்இடி டிவி பொருத்தப்பட்டுள்ளது. இதில் இணையதள வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உதயநிதியின் அறைக்கு ரூ 30 லட்சம் அரசு செலவிட்டுள்ளது. இந்த அறை 6 நாட்களில் இரவு பகலாக செய்து முடிக்கப்பட்டன. இந்த பணிகளை மாணிக்கம் அண்ட் கோ என்ற ஒப்பந்தம் நிறுவனம் செய்துள்ளது. அது போல் பெயர் பலகையை எழுத்தர் மணி என்பவர் தயாரித்துள்ளார். உதயநிதி அறையின் வெளியே உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை என குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றே அந்த அறையில் அமர்ந்து 3 முக்கிய கோப்புகளில் அமைச்சர் உதயநிதி கையெழுத்திட்டார்.












Click it and Unblock the Notifications