காணாமல் போன அம்பேத்கர் ராஜினாமா கடிதம்? மோடி சொல்வது உண்மையா? நேரு செய்தது என்ன?
சென்னை: அம்பேத்கர் ராஜினாமா செய்தது ஏன்? நேரு கொடுத்த நெருக்கடியால் தான் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தாரா? அன்று நடந்தது என்ன? ஆவணங்கள் சொல்லும் உண்மை என்ன?
நாடாளுமன்ற அவையில் பிரதமர் மோடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையேயான விவாதம் காரசாரமாக நடந்து வருகிறது. முதலில் இந்து மதத்தை வைத்து அரசியல் செய்து வரும் பாஜகவை அவர் ஜாடைமாடையாக விமர்சித்தார். அதன்பின்னர் மோடி நேரடியாகப் பரமாத்மாவிடம் பேசுவதாகவும் கூறி சில விமர்சனங்களை முன்வைத்தார். அதன்பின்னர் நீட் தேர்வு குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.

அவரது பேச்சு காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேயான மோதலாக மாறியது. ராகுல் காந்திக்குப் பதிலடி தரும் வகையில் பேசி பிரதமர் மோடி, காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து அம்பேத்கர் ராஜினாமா செய்தது ஏன்? என்ற சர்ச்சையைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேசிய பிரதமர், "நாட்டிலுள்ள தலித் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் காங்கிரஸ் கட்சி அநீதி இழைத்ததால்தான், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தலித் விரோத நேரு அமைச்சரவையிலிருந்து அம்பேத்கர் பதவி விலகினார்" என்றார்.
மேலும் அவர், "தலித்து மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நேரு செய்த அநீதியை அம்பலப்படுத்தியவர் அம்பேத்கர். அம்பேத்கர் அவரது ராஜினாமாவைக் கடிதத்தை அளித்தபோது, அமைச்சரவை காங்கிரஸ் கட்சியின் குணத்தைப் பிரதிபலிக்கிறது என்று சொன்னார். தனக்குள் இருக்கும் கோபத்தை தன்னால் அடக்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
அம்பேத்கரின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர நேரு முயற்சி செய்தார். எனவேதான் தேர்தலிலும் அவர் சாமர்த்தியமாக தோற்கடிக்கப்பட்டார். அதுமட்டுமல்ல; அவரது தோல்வியைக் காங்கிரஸ் கட்சி கொண்டாடியது" என்று மோடி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
ஆனால், அம்பேத்கர் ராஜினாமா பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆகவே உண்மை என்ன என்பது பற்றி அறிய கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அம்பேத்கர் ராஜினாமா செய்தது தொடர்பான ஆவணங்களைக் கேட்டு ஆர்டிஐ மூலம் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கான ஆவணங்கள் கோப்புகளிலிருந்து காணாமல் போய்விட்டதாக மத்திய அரசு பதிலளித்து இருந்தது. அரசு ஆவணங்களிலிருந்து அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் காணாமல் போன விசயம் அவரது ஆதரவாளர்களைக் கடந்து பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
அம்பேத்கர் ராஜினாமா விவகாரம் சம்பந்தமாக சில ஆண்டுகள் முன்னதாக பேசிய இயக்குநர் ரஞ்சித் ஒரு கருத்து முன்வைத்திருந்தார். சட்ட அமைச்சராகப் பதவியேற்ற அம்பேத்கர், பெண்களுக்கான உரிமையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காகத்தான் தனது பதவியை ராஜினாமா செய்தார். பெண்களின் உரிமைக்காகவே அவர் பதவியை விட்டு விலகினார் என்றும் அவர் பேசி இருந்தார்.
அம்பேத்கர் காங்கிரஸ் கட்சியின் அனுதாபி இல்லை. ஆதரவாளரும் இல்லை. அவர் காந்தியையும் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாகவே விமர்சித்து வந்தார். குறிப்பாக வட்ட மேசை மாநாடு தொட்டு காந்திக்கும் அம்பேத்கருக்கும் மிகக் கடுமையான கருத்து முரண் நிலவி வந்தது.
இந்நிலையில்தான் 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையின் பிரதமராக நேரு பதவியேற்றார். அப்போது அவர்தான் சட்ட அமைச்சராகப் பதவியேற்கும்படி அம்பேத்கருக்கு அழைப்பு கொடுத்தார். ஆனால், உடனடியாக அவரது அழைப்பை ஏற்பதில் அம்பேத்கருக்குத் தயக்கம் இருந்தது. அவரின் ராஜினாமா கடிதம் பற்றிய ஆவணம் கிடைக்கவில்லை என்றாலும், அவரது நாடாளுமன்ற உரைகள் தொகுக்கப்பட்ட புத்தகங்கள் மூலம் கிடைக்கின்றது. மகாராஷ்டிரா அரசு அதை அவரது நூற்றாண்டு விழா வேளையில் திரட்டி வெளியிட்டிருந்து. அதைக் கொண்டு சிலர் எழுதிய கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றன.
அதன்படி அம்பேத்கர் தனது உரையில் 1951 செப்டம்பர் 27, வியாழன் அன்று தனது ராஜினாமா கடிதத்தைப் பிரதமரிடம் அளித்தேன் என்று கூறியுள்ளார். மேலும் உடனடியாக தன்னை விடுவிக்கும் படியும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். மறுநாளே அதை ஏற்கும் அளவுக்குப் பிரதமர் நேரு நல்லவராக இருந்தார் என்று குத்தலாகக் குறிப்பிட்டுள்ள அம்பேத்கர் பிரதமர் கூட்டத்தொடர் முடியும் வரை பதவியில் தொடரும்படி கூறியதை ஏற்று நடந்ததாகவும் பேசியுள்ளார்.
தனது உரையில் தனக்கு முன்னதாகவே பலர் ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறிய அவர், ராஜினாமா செய்யும் அமைச்சர்கள் யாரும் காரணங்களை விளக்கி அறிக்கை வெளியிடுவதில்லை என்றும் அதில் ஒரே மாதிரியான போக்கு கடைப்பிடிக்கப்படாததால் தான் என்ன செய்வது எனக் குழம்பியதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், மக்கள் தான் விளக்க அளிக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் சந்தேகப்படுவார்கள். ஐயங்கள் எழும். அதற்கு அறிக்கை ஒன்றுதான் பாதுகாப்பான வழி என்று அம்பேத்கர் விளக்கியுள்ளார்.
அம்பேத்கர் குறிப்பிடத்தைப் போலவே அவருக்கு முன்னதாகவே 6 அமைச்சர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்திருந்தனர். அவர்கள் யாரும் அறிக்கை விடவில்லை என்பதைத்தான் அம்பேத்கர் சுட்டிக்காட்டிப் பேசி உள்ளார்.
அம்பேத்கர், முதலில் தனது ராஜினாமா மற்றி அவை உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க விரும்பினார். அடுத்து மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என நினைத்தார். மூன்றாவதாக, எங்களிடம் செய்தித்தாள்கள் தவறான தகவல்களை எழுதலாம் என அவர் அஞ்சினார்.
"பத்திரிகைகள் சிலருக்கு ஆதரவாகவும் மற்றவர்களுக்கு எதிராகவும் சார்பு கொண்டுள்ளன. அவற்றின் தீர்ப்பு தகுதியின் அடிப்படையில் எப்போதும் அரிதாகவே எழுதப்படும். ஆதரவானவர்கள் நல்ல வெளிச்சத்தை வீசும் ஊடகங்கள் தங்களுக்கு ஆதரவாக இல்லாதவர்களை மோசமான வெளிச்சத்தில் வைத்துப் பார்க்கின்றன" என்றார். ஆகவே அவர் தனது ராஜினாமா பற்றி ஒரு அறிக்கைவிட முடிவு செய்தார்.
"இப்போது 4 ஆண்டுகள், 1 மாதம் மற்றும் 26 நாட்கள் ஆகிறது. பிரதமர் சட்ட அமைச்சராகப் பதவி ஏற்கும்படி என்னை அழைத்தார். இந்த வாய்ப்பு பெரும் ஆச்சரியத்தை அளித்தது. நான் எதிர் முகாமிலிருந்தேன், ஆகஸ்ட் 1946 இல் இடைக்கால அரசு அமைக்கப்பட்டபோது அதற்குத் தகுதியற்றவன் நான் என்று ஏற்கெனவே கண்டிக்கப்பட்டிருந்தேன்.
ஆகவே எனக்குச் சந்தேகம் இருந்தது. ஆனால் நான் எனது சந்தேகங்களை நிதானமாக வைத்துக்கொண்டு, நமது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு எனது ஒத்துழைப்பை வழங்க மறுக்கக்கூடாது என்றே பிரதமரின் வாய்ப்பை ஏற்றேன். அமைச்சரவை உறுப்பினராகவும், சட்ட அமைச்சராகவும் எனது செயல்பாடுகளின் தரம் பற்றிய தீர்ப்பை மற்றவர்களிடம் விட்டுவிடுகிறேன்.
எனது சக ஊழியர்களுடனான எனது தொடர்பைத் துண்டிக்கச் சிலர் வழிவகுத்தனர். அந்த விஷயங்களை நான் இப்போது குறிப்பிடுகிறேன். பல்வேறு காரணங்களால் நீண்ட காலமாகச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது" என்று அம்பேத்கர் தன் நீண்ட உரையில் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஆக, நேருவுக்கும் அம்பேத்கருக்கும் கருத்தியல் ரீதியாக மோதலோ முரண்பாடோ இல்லை. ஆனால், நடைமுறையில் எதற்கு அதிக முக்கியத்துவம் என்பதில் மாற்றுக் கருத்து இருந்துள்ளது. அம்பேத்கர் இந்து மத மசோதாவைச் சட்ட அமைச்சர் என்ற அடிப்படையில் தயாரித்தார். அதிலிருந்த சில ஷரத்துகளைக் காங்கிரஸ் கட்சியினரே ஏற்க மறுத்தனர். ஆனால், மசோதாவை அரசியல் நிர்ணய சபையில் முன்மொழிந்தார்.
ஆனால், அது நிறைவேற்றாமல் முடங்கியது. அதை விவாதிக்கப்படாமல் ஒரு ஆண்டு கிடப்பில் போடப்பட்டது. அதற்கு நாடு முதல் பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டி வந்துவிட்டது. அதற்கு அதற்குள் மசோதா காலாவதியானது. அதை அம்பேத்கரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

நேரு இந்தக் காரியம் உடனே முடிந்துவிடாது என்று நம்பினார். அடுத்த அரசு வந்தால் முக்கியத்துவத்தின் அடிப்படையில் இந்து மசோவை திருத்தங்களுடன் நிறைவேற்றும் என்றார். செப்டம்பர் 26, 1951 அன்று பிரதமர் அவர் "இது பயணத்தில் ஒரு கட்டம், பொருளாதாரம், சமூகம் மற்றும் பிற நிலைகள் உள்ளன, மேலும் சமூகம் முன்னேற வேண்டுமானால், அனைத்து முனைகளிலும் இந்த ஒருங்கிணைந்த முன்னேற்றம் இருக்க வேண்டும்" என்றார்.
அக்டோபர் 10, 1951 அன்று பி.ஆர். அம்பேத்கர் ஒரு பதிலளித்தார், அதில், "நான் அமைச்சரவையிலிருந்து வெளியேறுவது இந்த நாட்டிலுள்ள எவருக்கும் கவலையளிக்கும் விஷயமாக இருக்காது. ஆனால் நான் எனக்கு உண்மையாக இருக்க வேண்டும். நான் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் போது என்னிடம் காட்டிய கருணை மற்றும் மரியாதைக்காக எனது சக ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றாலும், என் மீது மிகுந்த சகிப்புத்தன்மையைக் காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
பாஜக அரசு 142 எம்பிக்களை இடைநீக்கம் செய்துவிட்டு, புதிய 3 குற்றவியல் சட்டங்களைக் கேள்வியே எழாமல் நிறைவேற்றியது. ஆனால், நேரு பல கட்சிகளின் கருத்திற்கு மதிப்பளித்து மசோதாவை நிறைவேற்றாமல் நிறுத்தி வைத்தார். இந்த இரண்டுக்கும் வேறுபாடுகள் அதிகம் உள்ளது. அதைத்தான் எதிர்க்கட்சிகள் இந்த விவாதத்தில் முன்வைத்து வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications