சென்னையே ஸ்தம்பிக்கப் போகுது.. இன்று தலைமை செயலக முற்றுகை! முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க கோரிக்கை
சென்னை: முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை நடத்த உள்ளது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு சிறைகளில் இருந்து வரும் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் பல ஆண்டுகால கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பாக நேற்று அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சட்டசபையில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது காரசார விவாதம் நடைபெற்றது. இது தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அளித்த பதில் ஏமாற்றம் தருவதாக அறிவித்த தமீமுன் அன்சாரி, இன்று சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், "20 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இதில் சமூக வழக்குகள் தொடர்புடைய 36 முஸ்லிம் சிறைவாசிகளையும் உள்ளடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறோம். இது குறித்து 161-வது பிரிவின் கீழ் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது ஒன்றே முழு தீர்வளிக்கும் என்பதை மஜக சார்பில் கோடிட்டு காட்டி வருகிறோம்.
இது தொடர்பாக, சட்டமன்றத்தில் உறுப்பினர்களை வைத்திருக்கும் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினோம். அதை ஏற்று அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய மாண்புமிகு முதல்வர் அவர்கள், சமூக வழக்குகள் தொடர்புடைய 36 முஸ்லிம் கைதிகள் உட்பட 49 பேரை முன் விடுதலையை செய்ய வேண்டுமென கவர்னருக்கு பரிந்துரைத்திருக்கிறோம் என்று பதிலளித்துள்ளார். இது எங்களுக்கு ஏமாற்றமளிக்கிறது.
ஏனெனில் ஆளுநர் அவர்கள் இதில் முடிவெடுக்க மாட்டார் என்பது முதல்வர் உள்ளிட்ட அனைவரும் அறிந்த ஒன்று. எனவேதான் மாநில அரசுக்கு, சட்டம் தந்திருக்கும் 161-வது பிரிவை பயன்படுத்தி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். இது உச்சநீதிமன்றம் சென்று சட்டப் போராட்டம் நடத்தி, சிறைவாசிகள் தாங்களாகவே விடுதலை பெற வழி வகுக்கும் என்பதே சட்ட நிபுணர்களின் ஆணித்தரமான வாதமாகும். பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலையில் இதே போன்றதொரு தமிழக அமைச்சரவை தீர்மானம்தான் உதவியது என்பதை நாடறியும்.
எனவே இன்று இந்த விவாதத்தில் பதிலளித்த முதல்வர் அவர்கள், தங்கள் அரசின் மீதுள்ள தார்மீக கடமையை தட்டிக்கழித்துவிட்டு, ஆளுனரை கை காட்டுவது ஒரு மடைமாற்றும் முயற்சி என்றே கருத வேண்டியுள்ளது. மஜகவும் இதர ஜனநாயக சக்திகளும் முன்னிறுத்தும் இக்கோரிக்கை பற்றி முதல்வர் பேசாததது அதிர்ச்சியளிக்கிறது. எனவே இக்கோரிக்கையை வலியுறுத்தி, ஏற்கனவே அறிவித்தப்படி இன்று மஜக சார்பில் சட்டமன்ற முற்றுகை போராட்டம் சென்னையில் நடைபெறும். இதில் ஜனநாயக உணர்வாளர்களும், தோழமை செயல்பாட்டாளர்களும் பங்கேற்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எமது மனிதநேய கோரிக்கையை ஆதரித்து பேசிய அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, CPM, CPI, மதிமுக, புரட்சி பாரதம் கட்சி உள்ளிட்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்விஷயத்தில் வெளிநடப்பு செய்து இக்கோரிக்கையை மேலும் வலுப்படுத்தியமைக்காக அதிமுகவுக்கு பாராட்டுகளையும் உரித்தாக்கிக் கொள்கிறோம். ஆளும் திமுக அரசு எமது இக்கோரிக்கையை மனிதாபிமானத்துடனும், மனசாட்சியுடனும், கனிவுடனும் பரிசீலிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
எமது அறம் சார்ந்த இக்கோரிக்கை இன்று மக்கள் மயப்படுத்தப்பட்டு; ஜனநாயகவாதிகளின் பேராதரவை பெற்று வீரியமடைந்துள்ளது. எமது குரலற்ற மக்களுக்கான போராட்டம் அமைதி வழியில் தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்." என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் சட்டமன்றத்தை முற்றுகையிட உள்ளனர். ஐஸ் ஹவுஸ் பகுதியில் இருந்து பேரணியாக சென்று முற்றுகையிட உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, எஸ்டிபிஐ மாநில செயலாளர் ஏகே கரீம் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications