சகோதரர்களை சந்திக்க வைக்க... செல்வி நடத்திய பாசப்போராட்டம்... கைகொடுக்காத திருமணவிழா..!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், அவரது அண்ணன் மு.க.அழகிரியையும் நேரில் சந்தித்து பேச வைக்க அவர்களது சகோதரி செல்வி மேற்கொண்ட முயற்சி ஜஸ்ட் மிஸ்ஸாகியுள்ளது.
கருணாநிதியின் மகள் செல்வியின் பேத்தி திருமண விழா நேற்று நடைபெற்றது. மிகவும் நெருங்கிய குடும்ப உறவுகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மாப்பிள்ளை வரவேற்பு வைபவம் சென்னையில் நேற்று நடைபெற்ற போது, அதில் கருணாநிதி குடும்பத்தின் அனைத்து உறவுகளும் ஆஜராகியிருந்தனர்.

கருணாநிதி மகள்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியை பொறுத்தவரை தனது சகோதரர்கள் மு.க.அழகிரிக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் உறவுப்பாலமாக இருப்பவர். அண்ணன் மீது தம்பிக்கு மனக்கசப்பு வந்தாலோ அல்லது தம்பி மீது அண்ணன் மன வருத்தத்தில் இருந்தாலோ அதில் உரிமையாக தலையிட்டு நிலைமையை சுமூகமாக்கி விடுவார் செல்வி. இதெல்லாம் அழகிரியை கட்சியை விட்டு நீக்குவதற்கு முன்பு வரை நடந்தது.

உறவுப்பாலம்
இதனிடையே கடந்த சில வருடங்களாக பிரிந்து இருக்கும் தனது சகோதரர்களான மு.க.அழகிரியையும், மு.க.ஸ்டாலினையும் சேர்த்து வைக்க செல்வி பலமுறை முயற்சிகள் மேற்கொண்டும் அது அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. இந்த வருத்தம் செல்விக்கும் அவரது கணவர் முரசொலி செல்வத்துக்கும் நிறையவே உள்ளது. இப்படியேவிட்டால் எதிர்காலத்தில் உறவுகள் தொடராமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் செல்வி தன்னால் முடிந்த அனைத்து அஸ்திரங்களையும் சகோதரர்களை இணைத்து வைப்பதற்காக கையில் எடுத்து வருகிறார்.

திருமண விழா
அந்த வகையில் தனது பேத்தி திருமண விழாவிலாவது ஸ்டாலினையும், அழகிரியையும் நேருக்கு நேர் சந்தித்து பேச வைக்க வேண்டும் என முயற்சித்த செல்வி, திருமண விழா ஏற்பாடுகளை காட்டிலும் தனது தம்பிமார்களின் வருகைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். விழாவில் மு.க.அழகிரி தனது மனைவி, மகன், என குடும்பத்தினருடன் கலந்துகொண்ட நிலையில், அவர்கள் வருவதற்கு முன்பாகவே விழா அரங்கத்தில் இருந்து ஸ்டாலின் புறப்பட்டுவிட்டார்.

முயற்சி தோல்வி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்னும் சிறிது நேரம் இருக்குமாறு அவரது அக்கா செல்வி வலியுறுத்தியும், நிறைய திருமண வரவேற்பு விழாக்களில் கலந்துகொள்ள வேண்டியிருப்பதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். தம்பி ஸ்டாலின் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் அங்கு மு.க.அழகிரி அங்கு ஆஜரானார். சற்று நிமிடம் பொறுத்திருந்தால் இருவரையும் ஒன்றாக சந்திக்க வைத்துவிடலாம் என எண்ணிய அக்கா செல்வியின் முயற்சி இம்முறையும் ஜஸ்ட் மிஸ்ஸாகியுள்ளது.












Click it and Unblock the Notifications