செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் மு.க.அழகிரி மகன்! அண்ணன் தம்பி சந்திப்பு எப்போது? களைகட்டும் மதுரை!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி கலந்துகொண்டது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.
Recommended Video
அதுவும் குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடன் ஒன்றாக ஒரே வரிசையில் துரை தயாநிதி அமர்ந்திருந்தது மதுரையில் உள்ள மு.க.அழகிரி ஆதரவாளர்களுக்கு புதிய நம்பிக்கை அளித்திருக்கிறது.
இதனிடையே அண்ணன் தம்பி சந்திப்பு எப்போது நிகழக்கூடும் என மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியுள்ளது.

மனக்கசப்பு
முதலமைச்சர் ஸ்டாலினும் அவரது அண்ணன் மு.க.அழகிரியும் ஒருவருக்கு ஒருவர் மனக்கசப்பு காரணமாக பேசிக்கொள்வதில்லை. அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து இணைத்து வைக்கும் முயற்சியில் முரசொலி செல்வம் -செல்வி தம்பதி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனால் அந்த முயற்சிகள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் சூழலில், செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி கலந்துகொண்டது ஆச்சரியமுடன் பார்க்கப்படுகிறது.

அழகிரி ஆதரவாளர்கள்
அதுவும் முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசன், உதயநிதி மற்றும் அவரது சித்தி மகன் அமர்ந்திருந்த வரிசையில், துரை தயாநிதி ஒன்றாக அமர்ந்திருந்ததை கண்ட மதுரையில் உள்ள மு.க.அழகிரி ஆதரவாளர்கள் இனி தங்களுக்கு நல்ல காலம் பிறக்கப்போவதாக உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். அண்ணன் தம்பி சந்திப்பு எப்போது நிகழும் என அவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

நட்பு ரீதியாக
இதனிடையே துரை தயாநிதி செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் கலந்துகொண்டதை குடும்பத்துடன் இணைத்துப் பார்க்கத் தேவையில்லை எனக் கூறுகிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள். உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோருடன் குடும்ப உறவுக்கு அப்பாற்பட்டு துரை தயாநிதி நல்ல முறையில் நட்பை பேணி வருவதாகவும் இதன் காரணமாகவே அவர் அதில் பங்கேற்றதாகவும் தெரிவிக்கிறார்கள்.

மிகுந்த நம்பிக்கை
ஆனால் எது எப்படியோ துரை தயாநிதி மூலம் தங்களுக்கு நல்லது நடக்கும், தங்களது அரசியல் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்ற மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறார்கள் மதுரையை சேர்ந்த மு.க.அழகிரி ஆதரவாளர்கள். ஒன் இந்தியா தமிழில் ஏற்கனவே கூறியிருந்ததை போல் கால் விரலில் செய்து கொண்ட சிறிய அறுவைச் சிகிச்சை காரணமாக மு.க.அழகிரி தற்போது மதுரையில் ஓய்வெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications