“பிரதமர் வேட்பாளர்?” பிரஸ் மீட் முடிந்து கிளம்பும்போது வந்த கேள்வி.. திரும்பி வந்து ஸ்டாலின் பதில்!
சென்னை: பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் சென்னை திரும்பியுள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர் பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் தலைவர்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதற்காக, 6 மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.
எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்திருந்தார். இன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முக ஸ்டாலின், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் சரத் பவார், ஒமர் அப்துல்லா, ஹேமந்த் சோரன், மெகபூபா முஃப்தி, உத்தவ் தாக்கரே, லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தான் பேசியது என்ன என்பது பற்றி விளக்கினார்.
தேர்தலுக்கு பிறகு கூட்டணி என்பது இருக்கக்கூடாது, குறைந்தபட்ச செயல் திட்டங்களை உருவாக்க குழு அமைக்க வேண்டும் என்று பேசியுள்ளேன். எந்த மாநிலத்தில் எந்த கட்சி பலமாக உள்ளதோ, அங்கு அக்கட்சியின் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்று வலியுறுத்தினேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
பின்னர் பிரஸ் மீட்டை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் கிளம்ப முற்பட்டபோது செய்தியாளர் ஒருவர், பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்து விட்டீர்களா எனக் கேள்வி எழுப்பினார். உடனே, திரும்பி வந்து இந்தக் கேள்விக்கு பதில் அளித்தார் முதல்வர் ஸ்டாலின்.
"பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. நீங்கள் எல்லாம் ஆர்வமாக இருப்பதை பார்த்தால் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது புரிகிறது:" எனத் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications