கருத்துக்கணிப்புகள், மக்கள் கணிப்பு எதிலும் நாம்தான்! அண்ணா நகரில் கெத்தாக சொன்ன முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சென்னை அண்ணா நகரில் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டபடியே வாக்கு சேகரித்தார். நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓயும் நிலையில் திமுக வேட்பாளர் சிற்றரசுவுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், 'கருத்துக்கணிப்புகள் மக்கள்கணிப்புகள் என எதிலும் நாம்தான், வெல்வோம் 200; படைப்போம் வரலாறு' என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இறுதி கட்ட பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. நாளையுடன் பிரசாரம் ஓய்வதால் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்க பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் முக ஸ்டாலின், எதிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் முக ஸ்டாலின் இன்று சென்னையில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், சென்னை அண்ணா நகர் டவர் பார்க்கில் நடைபயிற்சியில் ஈடுபட்ட முதல்வர் முக ஸ்டாலின், திமுக வேட்பாளர் சிற்றரசுவுக்கு வாக்கு சேகரித்தார்.
அண்ணா நகர் தொகுதிக்குட்பட்ட டவர் பார்க் பூங்காவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அண்ணா நகர் தொகுதி வேட்பாளர் சிற்றரசு அவர்களுடன் இணைந்து காலை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பொதுமக்களை சந்தித்து, கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி செய்த சாதனைகள் குறித்து விளக்கி வாக்கு சேகரித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வருகையால் மக்கள் உற்சாகத்துடன், வந்து அவருடன் உரையாடி செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அலைமோதிய மக்கள் கூட்டம், அந்தப் பகுதியில் திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் அறிகுறியாக இருந்ததாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கழக நிர்வாகிகளுடன் சேர்ந்து பொதுமக்களுடன் நேரடி கலந்துரையாடலில் ஈடுபட்டு, அவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மக்கள் உணர்வுகளை ஊக்குவிக்கும் வகையில் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
மேலும், அண்ணா நகர் தொகுதியில் நடைமுறையில் உள்ள திட்டங்கள் மற்றும் எதிர்கால வாக்குறுதிகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, அண்ணா நகரை "கிரீன் அண்ணா நகர்" ஆக மாற்றுவது, பார்க்கிங் வசதிகளை அதிகரிப்பது, நிழல் தரும் மரங்களுடன் அழகிய நடைபாதைகள் அமைப்பது, ஸ்மார்ட் குடிநீர் ஏடிஎம் வசதி ஏற்படுத்துவது, புதிய விளையாட்டு திடல்கள் உருவாக்குவது போன்ற திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.
இதனையடுத்து, கழக நிர்வாகிகளுடன் இணைந்து மக்களை நேரடியாக சந்தித்து, அண்ணா நகர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முதலீட்டு முயற்சிகள் பற்றியும் விளக்கி வாக்கு சேகரிப்பு மேற்கொண்டார்.
தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "நேற்று பிற்பகல் 2 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பரப்புரை தொடங்க ஆயத்தமானேன்.. ஓசூரில் தொடங்கி, சென்னை எண்ணூரில் இரவு 10 மணிக்கு பிரச்சாரத்தை நேற்று முடித்தேன். ஓசூர் முடித்து மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தி.நகர் ஆகிய தொகுதிகளில் சாலைகளில் மக்கள் வரவேற்பளிக்க சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு வீதி வீதியாக வாக்கு சேகரித்தேன்.
இரவு திருவொற்றியூர் நெட்டுக்குப்பத்தில் வாக்குச் சேகரித்து மீனவச் சொந்தம் ஒருவரது வீட்டில் மீன் சாப்பிட்டதும்தான், நேற்றைய நாள் நிறைவுற்றது. இப்போது, சூரியன் உதித்ததும் அண்ணா நகருக்குப் புறப்பட்டுவிட்டேன்.. கருத்துக்கணிப்புகள் மக்கள்கணிப்புகள் என எதிலும் நாம்தான்! வெல்வோம் 200; படைப்போம் வரலாறு!" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications