அம்மா உணவகம் சூறை.. திமுகவினர் மீது கடும் நடவடிக்கை.. ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
சென்னை: சென்னை முகப்பேர் மேற்கு பத்தாவது பிளாக்கில் உள்ள 92வது வட்ட அம்மா உணவகத்தில் புகுந்து அம்மா உணவக பெயர் பலகையை அடித்து நொறுக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
மேலும் அம்மா உணவகத்தில் பெயர் பலகையை மீண்டும் பொறுத்தவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் சைதாபேட்டை திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சூறையாடப்பட்ட அம்மா உணவகத்திற்கு வந்த அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

உடைக்கப்பட்ட பலகை
சென்னை முகப்பேர் மேற்கு பத்தாவது பிளாக்கில் உள்ள 92வது வட்ட அம்மா உணவகத்தில் புகுந்த திமுகவினர் சிலர் சூறையாடி உள்ளனர். இனி அம்மா உணவகம் என்ற பெயரில் உணவகங்கள் இருக்ககூடாது என்று பெயர் பலகைகளை உடைத்து, உணவகத்தை சூறையாடி, அங்கிருந்தவர்களை மிரட்டி ஜெயலலிதா படத்தை கீழே போட்டு உடைத்தனர்

அதிமுகவினர் போராட்டம்
இது தொடர்பான வீடியோ காட்சி வெளியான நிலையில் அதிமுகவினர் கொதித்து போயினர். உடனடியாக அங்கு குவிந்த அதிமுகவினர் அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெயர் பலகை
அத்துடன் அடித்து நொறுக்கப்பட்ட அம்மா உணவகத்தின் பேனரை அதே இடத்தில் ஒட்டினர். அம்மா உணவகத்தின் பெயர் பலகை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுகவினர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின்.

நடவடிக்கை எடுக்க உத்தரவு
இது தொடர்பாக திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட்டார் என்று கூறியுள்ளார்.

திருந்தமாட்டார்கள்
இதனிடையே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், சென்னை முகப்பேரிலுள்ள அம்மா உணவகத்தை தி.மு.க.வினர் அடித்து நொறுக்கி சூறையாடியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயர் இருக்கிறது என்பதற்காகவே ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் உணவகத்தில் தி.மு.க.வினர் இப்படி நடந்துகொள்வது வேதனையளிக்கிறது. ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்துவிட்ட தி.மு.க.வினர் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறார்களோ? என்கிற கவலை இந்தக் காணொளியைக் காணும்போது ஏற்படுகிறது. தி.மு.க.வினர் ஒருபோதும் திருந்தவே மாட்டார்கள் என்பதற்குச் சாட்சியாக இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications