ஐரோப்பிய நாடுகளுக்கு நிகராக தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்க அளவில் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புகள் வளர்ந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் தியேட்டரில் அறுவை சிகிச்சையை முடித்து, நோயாளியை ஐ.சி.யூ வார்டில் கண்காணித்து, அதற்குப் பிறகு சாதாரண வார்டுக்கு மாற்றி, டிஸ்சார்ஜ் செய்வதற்கு எவ்வாறு நேரம் தேவைப்படுகிறதோ - அதுபோல மருத்துவக் கட்டமைப்பையே நோயாளி ஆக்கியவர்களிடம் இருந்து மருத்துவத் துறையையும் நாட்டையும் மீட்டு ஆரோக்கியமாக்குவதற்கு அதிகபட்சமாக இன்னும் 6 மாதம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Mk Stalin Proudly says, Medical infrastructure in Tamil Nadu is comparable to European countries

சென்னையில் நடைபெற்ற மருத்துவர்கள் சங்க மாநாட்டில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

இந்திய மாநிலங்களில் மிகச்சிறப்பான மருத்துவக் கட்டமைப்பை கொண்டுள்ள மாநிலம், தமிழ்நாடு! சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பன்னோக்கு மருத்துவமனைகள், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் தலைமை மருத்துவமனைகள், நகரங்கள் எல்லாவற்றிலும் அரசு பொது மருத்துவமனைகள், கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்று அனைத்து மக்களுக்கும் உரிய நேரத்தில் உடனடி சிகிச்சை அளிப்பதற்கான கட்டமைப்புகளை, அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பே கலைஞர் உருவாக்கினார்.

பொது நுழைவுத்தேர்வு முறையை 2007-ஆம் ஆண்டு முழுமையாக ரத்து செய்து, அதற்கான சட்ட ஏற்பையும் குடியரசுத் தலைவர் மூலமாகப் பெற்றவர் கலைஞர். டாக்டர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான கமிட்டி மூலமாக, உரிய தரவுகளைச் சேகரித்து, கலைஞர் தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகத்தான், +2 மதிப்பெண் அடிப்படையில், கிராமப்புற - ஏழை எளிய - பின்தங்கிய - ஒடுக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளும் டாக்டர் ஆக முடியும் என்ற நிலை உருவானது.

அதனால்தான், பன்னோக்கு மருத்துவமனைகள் தொடங்கி ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரைக்கும், தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறை சிறப்பான மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் இந்தக் கட்டமைப்பை சிறப்பாகக் கையாண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட, வளர்த்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவக் கட்டமைப்போடு, இந்தியாவின் வேறெந்த மாநிலத்தையும் ஒப்பிடவே முடியாது. ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்க அளவில்தான் நம்முடைய மருத்துவக் கட்டமைப்புகள் வளர்ந்திருக்குறது என்பதை ஹிந்து ஆங்கில நாளேட்டில் எழுதி, The Dravidian Model of Public Health என்ற கட்டுரையில் பேராசிரியர் சக்திராஜன் ராமநாதன் அவர்களும் பேராசிரியர் சுந்தரேசன் செல்லமுத்து அவர்களும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

மக்கள் நல்வாழ்வுத்துறையில், உங்களில் ஒருவனான என்னுடைய தலைமையிலான திராவிட மாடல் அரசின் நடைமுறைகளை, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் பின்பற்றினால், சமூக முன்னேற்றத்தை எளிதாக்கலாம் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டு, "தகுதி மற்றும் சமூகத் தாக்கங்கள் பற்றிய பரந்த புரிதல் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது" என்றும் எழுதியிருக்கிறார்கள்.

இதைத் தனிப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கான பாராட்டுப் பத்திரமாக நான் கருதவில்லை! சமூகநீதியை எல்லாத் துறைகளிலும் நிலைநாட்டுகிற நோக்கத்தின் நூற்றாண்டு காலமாக இயங்கி வரும் திராவிட இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்தின் தோளோடு தோள் நிற்கும் சமூகநீதி இயக்கங்களுக்குமான ஒட்டுமொத்த பாராட்டாகத்தான் கருதுகிறேன்.

இப்படிப்பட்ட பாராட்டுகள், நம்முடைய மகிழ்ச்சியை அதிகமாக்கி, நாம் இன்னும் சிறப்பாக செயல்படத் தூண்டுகோல் ஆகிறது. மக்களுக்கு நல்ல - தரமான சிகிச்சையைத் தருகிறது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில்,

* 'மக்களைத் தேடி மருத்துவம்',

* 'இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48',

* 'புதுப்பிக்கப்பட்ட வருமுன் காப்போம் திட்டம்',

* 'விரிவாக்கப்பட்ட முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' - உள்ளிட்ட பல திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உலகளவில் அறிவியல் துறையில் நடக்கும் புதிய ஆராய்ச்சிகளையும் - மருத்துவத்துறையில் ஏற்படுகிற வளர்ச்சிகளையும் உடனுக்குடன் கவனித்து, தமிழ்நாட்டில் செயல்படுத்துவதன் விளைவாகத்தான் பன்னோக்கு மருத்துவமனைகள், சிறப்பு நோக்கு மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் சிறப்பான சிகிச்சையை வழங்கி வருகிறது.

அறிவியலுக்குப் புறம்பான மருத்துவ முறைகள், பொதுமக்களைச் சோதனை எலிகளாக மாற்றிடும் அபாயம் கொண்டவை. இந்தியா சோதனை எலியாக மாறிடுமோ என்ற அச்சம் சமூக சமத்துவ மருத்துவர்கள் சங்கத்தைச் சார்ந்த உங்களிடம் இருப்பதை உணருகிறேன்.

ஏன் என்றால், மக்களின் உயிர் காத்து, அவர்களின் ஆயுளை நீட்டிக்கும் நவீன அறிவியல் மருத்துவத்தை நீர்த்துப் போகச் செய்கிற வகையில் Mixopathy (மிக்ஸோபதி), ஒருங்கிணைந்த மருத்துவம், Common Foundation Course, வேதகால மருத்துவம், ஆன்மீக மருத்துவம், சோதிட மருத்துவம் என்று போலி அறிவியலைத் திணிக்கும் முயற்சிகள் நடந்துகொண்டு இருப்பதால் அதை எதிர்த்துப் போராட வேண்டிய கடமையுணர்வோடும் இந்த மாநாடு நடந்துகொண்டு இருக்கிறது. மருத்துவர்களான உங்களின் அறிவுப்பூர்வமான - உணர்வுப்பூர்வமான போராட்டத்தில் நாங்கள் துணை நிற்கிறோம்.

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் மருத்துவக் கட்டமைப்புகளை சிதைக்கும் வகையில், முதலில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது. மாணவி அனிதா தொடங்கி மாணவர் ஜெகதீஸ்வரன் வரை பல பேரின் உயிரை நீட் என்கிற கொடுவாள் பறித்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்டப் போராட்டத்தை நாம் உறுதியோடு முன்னெடுத்திருக்கிறோம். நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்ற ஆணவத்தோடு யார் பேசினாலும், எந்தப் பதவியில் இருப்பவர்கள் சொன்னாலும், நீட் விலக்கு என்கிற நம் இலக்கு, மக்களின் பேராதரவுடன் நிறைவேறியே தீரும். அதற்காக தி.மு.கழகத்தின் இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி இணைந்து உங்களைப் போன்றவர்களின் ஆதரவோடு தொடங்கிய கையெழுத்து இயக்கம், இன்றைக்கு மக்கள் இயக்கமாக மாறியிருக்கிறது.

நாம் நீட்டை எதிர்க்கும் நேரத்தில், நெக்ஸ்ட் தேர்வு என்று அடுத்த ஆபத்து நுழைகிறது. அதையும் வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள் என்பதை நிரூபித்து காட்டியவர் கலைஞர். அதன் காரணமாக, தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு வலுப்பெற்றுள்ள நிலையில், எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்புக்கான இடங்களைக் குறைப்பதற்கும், புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதற்கும் ஒன்றிய அரசு தடை விதிக்கும் போக்கையும் எதிர்த்தோம்.

ஆபரேஷன் தியேட்டரில் அறுவை சிகிச்சையை முடித்து, நோயாளியின் இதயத்துடிப்பு உள்ளிட்டவை சீராக இருக்கிறதா என்று ஐ.சி.யூ வார்டில் கண்காணித்து, அதற்குப் பிறகு சாதாரண வார்டுக்கு மாற்றி, பின்னர் டிஸ்சார்ஜ் செய்வதற்கு எவ்வாறு உங்களுக்கு நேரம் தேவைப்படுகிறதோ - அதுபோல மருத்துவக் கட்டமைப்பையே நோயாளி ஆக்கியவர்களிடம் இருந்து மருத்துவத் துறையையும் நாட்டையும் மீட்டு ஆரோக்கியமாக்குவதற்கு அதிகபட்சமாக இன்னும் 6 மாதம் தேவையாக இருக்கிறது. வெற்றிகரமான சிகிச்சையை நிச்சயமாக இந்திய மக்கள் அளிப்பார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+