அனைத்து சாதி அர்ச்சகர்கள்.. நிறைவேறிய நீண்ட நாள் கனவு.. பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின்!
சென்னை : அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் பயிற்சி பெற்ற 24 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியதை முன்னிட்டு, பெரியார் நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக அனைத்து சாதி அர்ச்சகர் பணி நியமனம் மூலம், அரசியல் சட்ட ரீதியான சமத்துவத்தை நிலைநாட்டி, தனி மனித மாண்பை மீட்டெடுத்து, தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியதாக தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் வா.ரங்கநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தந்தை பெரியார் அவர்கள் 1969-ல் கருவறை நுழைவுப் போராட்டம் அறிவிக்க, அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து பரம்பரை வழி அர்ச்சகர் முறையை ஒழித்தார்.

இடஒதுக்கீடு
உச்சநீதிமன்றத்தில் தடை பெற்ற பழைய அர்ச்சக பிராமணர்கள் சட்டத்தை அமல்படுத்த விடாமல் தடுத்தனர். மீண்டும் 2006-ல் அனைத்து சாதி அர்ச்சகர் சட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இயற்றியதுடன், அதை அமல்படுத்த தமிழகத்தில் சைவ வைணவ பயிற்சிப் பள்ளிகளை திறந்து, இட ஒதுக்கீடு அடிப்படையில் 207 மாணவர்களை அதில் சேர்த்து இளநிலை அர்ச்சகராக பயிற்சி கொடுத்து அதற்கான தீட்சையும் சான்றிதழும் மாணவர்கள் பெற்றனர்.

அர்ச்சகர் சட்டத்திற்கு தடை
உடனே, மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆதிசைவ சிவாச்சாரியர்கள் உச்சநீதிமன்றம் சென்று அனைத்து சாதி அர்ச்சகர் சட்டத்திற்கு தடை உத்தரவு பெற்றனர். மாணவர்கள் சான்றிதழ் கூடப் பெற முடியவில்லை. அப்போது சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம்-திருவாசகம் பாட பல்வேறு போராட்டங்களை முன் எடுத்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் விருத்தாசலம் ராஜீ, மதுரை வாஞ்சிநாதன், சென்னை ஜிம்ராஜ் மில்டன் உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று மாணவர்களை அணுகி அனைத்து சாதி அர்ச்சக மாணவர் சங்கத்தை உருவாக்கி மதுரை, சென்னை, திருச்சி, விருத்தாச்சலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலரை இணைத்து 'ஆகமம் பெரிதா? அரசியல் சட்டம் பெரிதா?' எனப் போராட்டம் நடத்தினர்.

ரங்கநாதன் தீட்சை
மீனாட்சி அம்மன் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தினோம். பெரியார் சிலை முன்பு நடத்திய போராட்டத்திற்காக மதுரை நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி விடுதலை பெற்றோம். போராட்டத்தின் உச்சமாக வா.ரங்கநாதன் தீட்சையைத் துறந்து எதிர்ப்பைப் பதிவு செய்தார். இதனால் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, இந்து முன்னணியினர் ரங்கநாதனைத் தாக்கினர். இன்று வரை மிரட்டுகின்றனர். எல்லாவற்றையும் தாண்டி உச்சநீதிமன்ற வழக்கில் அர்ச்சக மாணவர்கள் சார்பில் இணைந்தோம். வழக்கை மூத்த வழக்கறிஞர்களை வைத்து நடத்தினோம்.

வீரமணி ஆதரவு
இதற்க்கான சட்டரீதியான உழைப்பை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தினரும், பல லட்ச ரூபாய் நிதி மற்றும் மக்கள் பிரச்சாரம், நூல் வெளியீடு, போராட்டம், கருத்தரங்கம் உள்ளிட்ட ஆதரவை தோழர் மருதையன், தகாளியப்பன், மக்கள் பாடகர் கோவன் தலைமையிலான மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் செய்தனர். இதற்கு முழு ஆதரவாக தி.க. தலைவர் அய்யா வீரமணி, முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன், அய்யா சத்தியவேல் முருகனார், கிருபானந்த சாமி ஆகியோர் இருந்தனர்" தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் வா.ரங்கநாதன் இவ்வாறு கூறியிருந்தார்.
இதனிடையே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் பயிற்சி பெற்ற 24 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியதை முன்னிட்டு, பெரியார் நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது திராவிடர் கழக தலைவர் கி வீரமணி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு உள்ளிட்டோர் இருந்தனர். திமுக தலைமையிலான அரசு அண்மையில் கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை திட்டத்தை தொடங்கி வைத்தது.இப்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தையும் கொண்டுவந்துள்ளது. இந்த இரண்டும் பல்லாண்டுகளாக வைக்கப்பட்டு வந்த கோரிக்கைகள் ஆகும். பல்வேறு முன்னெடுப்புகளுக்கு பின் தற்போது சாத்தியமாகி உள்ளது.












Click it and Unblock the Notifications