மு.க.ஸ்டாலின் மீதான மதிப்பு இரு மடங்காகிறது.. ஒளிகொண்டு எழுதப்பட்ட கல்வெட்டு.. வைரமுத்து பேட்டி!
மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சி ஒளிகொண்டு எழுதப்பட்ட கல்வெட்டு என்று வைரமுத்து கூறியுள்ளார்.
சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை கவிஞர் வைரமுத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சி குறித்து வைரமுத்து கூறுகையில், இந்தப் புகைப்பட கண்காட்சி ஒளிகொண்டு எழுதப்பட்ட கல்வெட்டு என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்க்கைப் பயணத்தை வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற பெயரில் சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்தக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இன்றுடன் நிறைவு
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வழிகாட்டுதலில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடந்த பிப். 28ல் திறந்து வைத்தார். இந்தக் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

புகைப்பட கண்காட்சி
இதனையொட்டி கடந்த இரு நாட்களாக திரை பிரபலங்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பார்வையிட குவிந்து வருகின்றனர். நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தக் கண்காட்சி அரங்கில் மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணம் தொடக்கம் முதல் தற்போது வரையிலான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

வைரமுத்து பார்வையிட்டார்
மிசா காலத்தில் கைது மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது, திமுக இளைஞரணி செயலாளர், மேயர், துணை முதல்வர், செயல் தலைவர், திமுக தலைவர், முதலமைச்சர் என்று அவரின் பயணம் முழுமையாக கண்டறியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

ஒளிகொண்டு எழுதப்பட்ட கல்வெட்டு
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து வைரமுத்து கூறுகையில், பணி நெருக்கடியின் காரணமாக இக்கண்காட்சியினை பார்க்க முடியாதோ என்ற எண்ணத்தை உடைத்து கண்காட்சிகனை பார்ப்பதற்கான நல்வாய்ப்பை வழங்கிய அமைச்சர் சேகர்பாபுவுக்கு நன்றி. இப்புகைப்பட கண்காட்சி ஒளிகொண்டு எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு. இதுவரை கடந்து வந்த அரசியல் பொது வாழ்க்கையை எழுத்தால் பதிவு செய்திருக்கும் 'உங்களில் ஒருவன்' நூலினை ஒளி வடிவில் பார்ப்பதற்கு இப்புகைப்பட கண்காட்சி சரியாக இருக்கும்.

மதிப்பு கூடுகிறது
கடந்த காலத்துக்குள் சென்று நிகழ்காலத்துக்கு வந்ததாக இப்படக் கண்காட்சியினை பார்க்கும்போது எனக்கு தோன்றியது. கண்காட்சியில் உள்ள சிறைக்கூடத்தை பார்க்கும் பொழுது மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். இம்முழு கண்காட்சியினை பார்த்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதுள்ள மதிப்பு இரண்டு மடங்கு கூடுகிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications