இரவு முழுவதும் தூங்காமல் கார் ஓட்டுவேன்! டிரைவர் ஓய்வாக வருவார்! ஸ்டாலின் கூறிய ருசிகர ஃபிளாஷ்பேக்!
சென்னை: இளைஞர் அணியின் பொறுப்பை ஏற்ற ஆரம்பக் காலங்களில் இரவு முழுவதும் தூங்காமல் தாம் கார் ஓட்டியிருப்பதாக பிளாஷ்பேக் கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அவ்வாறு காரில் போகின்ற போதெல்லாம் லியோனியின் கேசட்டுக்ளை கேட்டுக்கொண்டே போனால் தனக்கு நேரம் போவதே தெரியாது எனவும் தெரிவித்திருக்கிறார்.
லியோனி எழுதிய 'வளர்ந்த கதை சொல்லவா' நூல் வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இதுவரை யாரும் அறிந்திராத சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார். அதன் விவரம் வருமாறு;

காரில் சுற்றுப்பயணம்
''ஆரம்பக் காலங்களில் தமிழ்நாடே லியோனி உரைகளை நேரடியாவும், கேசட்டுகள் வாயிலாவும் கேட்டு, மெய் மறந்து இருந்தது. தமிழ்நாடே மயங்கியபோது நான் மட்டும் விதிவிலக்கா என்ன? காரில் போகும்போதெல்லாம் அவருடைய கேசட்டுகளை நான் கேட்பதுண்டு. நான் இளைஞர் அணியின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட போது, தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றுப்பயணம் காரில்தான் செல்வேன்.''

டிரைவர் ஓய்வாக வருவார்
''என்னோடு இளைஞர் அணியில் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த திருச்சி சிவா, நம்முடைய சகோதரர் பரணி குமார் , என்னுடைய உயிர் நண்பன் அன்பில் பொய்யாமொழி ஆகியோர் சேர்ந்து காரில் ஒன்றாக கிளம்புவோம். பெரும்பாலும் பரணிகுமார் தான் பகலில் கார் ஓட்டுவார். டிரைவர் இருப்பார், ஆனால் டிரைவர் கார் ஓட்டமாட்டார், பின்னால் காரில் வருவார். அவருடைய வேலை என்ன என்றால், நாங்கள் எங்கேயாவது காரை விட்டால், திருப்பி நிறுத்தி வைப்பவது, எடுத்து விடுவது, அதுதான் அவருடைய வேலை.''

இரவில் கார் ஓட்டுவேன்
''பகலில் பரணிகுமார் கார் ஓட்டுவார், இரவு முழுவதும் நான் கார் ஓட்டுவேன். ஏனென்றால், இரவில் நான் எப்போதும் தூங்கமாட்டேன். இப்போது எப்படி தூங்காமல் இருக்கிறேனோ அப்போதும் அப்படித்தான். ஏன் தூங்காமல் இப்படி கண் விழிக்கிறீர்கள் என்று இப்போதும் பலர் கேட்கிறார்கள். இது புதியதல்ல, பழையது, எனக்கு பழகிப் போய்விட்டது. இரவெல்லாம் கார் ஓட்டிக்கொண்டு போவோம். ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அன்றைக்கு இரவே இன்னொரு மாவட்டத்திற்கு சென்றுவிடுவோம்.''

நேரம் போவதே தெரியாது
''அப்படி காரில் போகின்றபோது தொடர்ந்து நம்முடைய லியோனி அவர்களுடைய கேசட்டுக்ளைத்தான் நான் கேட்டுக் கொண்டு வருவேன். அதைக் கேட்டுக்கொண்டு போனால் நேரம் போவதே தெரியாது. அவ்வளவு சுவாரஸ்யமாக பேசுவார். நகைச்சுவையோடு இருக்கும், சிரித்துக்கொண்டே, நாங்கள் பேசிக்கொண்டு கேட்டுக்கொண்டு செல்வோம். அப்படி கேட்டுகேட்டு, அவருடைய ஃபேனாகவே நான் மாறிவிட்டேன்.''












Click it and Unblock the Notifications