5 மாநில தேர்தல்.. “அது” மட்டும் நடந்தால் பாஜக தோல்வி கன்ஃபார்ம்! வாய் திறந்த முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: 3 மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருந்தாலே பாஜகவை வீழ்த்தி இருக்க முடியும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தனியார் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்து உள்ளார். மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளம், மீட்பு, நிவாரண பணிகள் தொடர்பாகவும் 5 மாநில தேர்தல்கள் குறித்தும் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்து இருக்கிறார்.

புயலால் ஏற்பட்ட சேதத்தைப் பார்வையிட வந்த மத்திய நிபுணர்கள் தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகத்தான் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் நிவாரணப் பணிகள் குறித்து அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. அவை ஒருபுறம் இருக்க நிவாரணப் பணிகள் உங்களுக்குத் திருப்தியை அளிக்கின்றனவா? இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதிலில்,
"தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒன்றிய அரசின் குழு முழுமையாக வரவேற்றுப் பாராட்டி இருக்கிறது. 'சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததாலேயே பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது, இல்லையென்றால் பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும்' என்றும், 'உரிய நேரத்தில் நீர் திறந்து விடப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது' என்றும், 'அதற்காக இந்த அரசை நாங்கள் பாராட்டுகிறோம்' என்றும் ஒன்றியக் குழு பாராட்டி இருக்கிறது.
இதே கருத்தை, மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களும் என்னைச் சந்தித்தபோது தெரிவித்தார்கள். அரசியல் ரீதியாக ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் எங்களுக்குமான கொள்கை முரண்பாடுகள் அனைவரும் அறிந்ததே. அதனையும் தாண்டி இந்தளவுக்குப் பாராட்டுகிறார்கள் என்றால், தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடுகள்தான் இதற்குக் காரணம். கடுமையான மழை இரண்டு நாட்கள் இடைவிடாது பெய்கிறது. மழை நின்றதும் நிவாரணப் பணிகளை நாங்கள் தொடங்கிவிட்டோம். மறுநாளே போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.
பெரும்பாலான பகுதிகளுக்கு மின் இணைப்பானது மூன்று நாட்களுக்குள் கிடைத்துவிட்டது. புறநகரில் ஒரு சில பகுதிகள் நீங்கலாக நான்கைந்து நாட்களுக்குள் மற்ற அனைத்துப் பகுதிகளும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டன." என்றார்.
மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதாக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. இச்சூழலில் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நம்புகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஸ்டாலின், "மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் என்பவை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்தான். இது நாடாளுமன்றத் தேர்தல் முடிவைப் பாதிக்காது. பொதுவாகச் சட்டமன்றத் தேர்தலின் போது மாநிலப் பிரச்சினைகள்தான் தலைதூக்கிக் காணப்படும். அவைதான் இத்தகைய முடிவுக்குக் காரணம் ஆகும். இராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க வென்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்குமான வாக்கு வித்தியாசம் 10 லட்சம் பேர்தான். சத்தீஸ்கரில் 6 லட்சம் வாக்குகள்தான் பா.ஜ.க அதிகம் பெற்றுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் மட்டும்தான் 35 லட்சம் வாக்குகளைக் கூடுதலாக பா.ஜ.க பெற்றுள்ளது. பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல், ஒருமுகப்பட்டிருக்குமானால் இந்த மூன்று மாநில வெற்றியை பா.ஜ.க பெற்றிருக்க முடியாது என்பதே உண்மை. நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை அனைத்து மாநிலங்களிலும் ஒன்று சேர்க்கும் முயற்சிகளை 'இந்தியா' கூட்டணி செய்யும். அதன் மூலமாக நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை நாங்கள் பெறுவோம். மூன்று மாநிலத் தேர்தல் முடிவைப் படிப்பினையாகவே நாங்கள் பார்க்கிறோம்." என்றார்.












Click it and Unblock the Notifications