பணத்தால் பெற்ற அதிமுகவின் வெற்றி தொடராது... மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
சென்னை: பணநாயகம் மூலம் இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி தொடர வாய்ப்பே இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
ஆட்சியை பற்றி விமர்சித்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் பொத்துக்கொண்டு வருவதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார்.

முதல்வர் கோபம்
ஆட்சியில் நடைபெறக் கூடிய தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சியின் கடமை என்றும், ஆனால் அவ்வாறு சுட்டிக்காட்டினால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தம் மீது கோபப்படுவதாகவும் கூறியுள்ளார்.

எதிரிக்கட்சி அல்ல
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதே திமுக எதிர்க்கட்சியாக தான் செயல்படுமே தவிர எதிரிக்கட்சியாக செயல்படாது என சட்டமன்றத்தில் தாம் கூறியுள்ளதாகவும், அரசின் குறைபாடுகள், அவலட்சணங்களை எல்லாம் அப்போதே எடுத்துரைத்ததாகவும் தெரிவித்துள்ளார் ஸ்டாலின். தமிழக அரசு மத்திய அரசுக்கு எடுபுடி வேலை பார்ப்பதாக விமர்சித்தார்.

வெற்றி தொடராது
அண்மையில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில் பணநாயகத்தை நம்பி ஆளுங்கட்சி வெற்றி பெற்றிருப்பதாகவும், ஆனால் இந்த வெற்றி இனி தொடர்வதற்கு வாய்ப்பே கிடையாது எனவும் கூறியுள்ளார் ஸ்டாலின். பொதுத்தேர்தலை பொறுத்தவரை மக்கள் இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

வெற்றிக்கு காரணம்
பணத்தை கொடுத்துதான் இரண்டு தொகுதிகளிலும் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளதாகவும், அதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம் எனவும் பேசினார் மு.க.ஸ்டாலின். மேலும், வரும் தேர்தல்களில் இதே நிலை நீடிக்காது என நம்பிக்கை தெரிவித்தார் அவர்.












Click it and Unblock the Notifications