தலைமை செயலகத்தில் ஸ்டாலின் படம் அகற்றம்.. மொத்தமாக தூக்கப்பட்ட அமைச்சர்களின் படங்கள், பொருட்கள்
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தமிழக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அறைகளில் உள்ள படங்கள் மற்றும் பொருட்களை அகற்றும் பணியில் தலைமை செயலக பணியாளர்கள் ஈடுபட்டார்கள். அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பக்கத்தில் ஸ்டாலின் புகைப்படம் அகற்றப்பட்டது. அத்துடன் ஸ்டாலின் பெயரில் இருந்த காலண்டர் உள்பட அவரது புகைப்படம் மற்றும் அவர் சார்ந்த பொருட்களை அதிகாரிகள் அகற்றினார்கள்.
கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக கூட்டணி 74 இடங்களை பெற்று இரண்டாம் இடத்தையே பிடித்தது. திமுகவைவிட சுமார் 3 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் வாங்கியதால் சுமார் 16 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் தவெகவிற்கு கிடைத்தது. இதுதான் தவெக ஆட்சியை பிடிக்க காரணமாகி உள்ளது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை 53 இடங்களை வென்றது.

இந்த தேர்தலில் சுமார் 60 வருடம் கழித்து திராவிட அரசியல் முடிவுக்கு வந்தது மட்டுமல்ல. இன்னொரு பெரிய சம்பவமும் நடந்துள்ளது. திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியை தழுவி உள்ளார். இங்கு விஜய்யின் ஆதரவு அலை அதிகமாக இருந்ததால் முதல்வர் ஸ்டாலினே தோற்றுப்போயிருக்கிறார்.
எனினும் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். தி.மு.க. தனித்து 60 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பெற்று உள்ளது. இதில் ஸ்டாலின் மட்டுமல்ல , கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், மூத்த அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், தா.மோ.அன்பரசன், நாசர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. ஆனால் த.வெ.க.வுக்கு, அந்த அளவுக்கு பெரும்பான்மை இல்லை. இருந்தாலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் ஆட்சியை அமைக்க கவர்னரிடம் உரிமை கோரியிருக்கிறார். இவருக்கு அதிமுக தரப்போகிறதா இல்லையா என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. இதுவரை வெளிப்படையாக எதுவும் தெரியவில்லை.. அதேநேரம் அதிமுக ஆதரவு தர வாய்ப்பு உள்ளதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன. என்ன நடக்கும் என்பது அடுத்த சில நாட்களில் தெரிய போகிறது.
விஜய் முதல்வராக பதவியேற்பது உறுதியாகி உள்ளதால், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பார். அத்துடன் தலைமை செயலகம் சென்று முதல்வர் அறையில் அமருவார்.. அதற்கான ஏற்பாடுகளை தலைமை செயலகத்தில் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே முதல்வரின் கான்வாய்கள் விஜய்யின் இல்லத்திற்கு வந்துவிட்டன. முதல்வருக்கான அனைத்து பாதுகாப்பும் இப்போது விஜய்க்கு வழங்கப்படுகிறது.
அதேநேரம் முக தலைவர் ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தமிழக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அறைகளில் உள்ள படங்கள் மற்றும் பொருட்களை அகற்றும் பணியில் தலைமை செயலக பணியாளர்கள் ஈடுபட்டார்கள். அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பக்கத்தில் ஸ்டாலின் புகைப்படம் அகற்றப்பட்டது. அத்துடன் ஸ்டாலின் பெயரில் இருந்த காலண்டர் உள்பட அவரது புகைப்படம் மற்றும் அவர் சார்ந்த பொருட்களை அதிகாரிகள் அகற்றினார்கள்.












Click it and Unblock the Notifications