சுட்டு கொல்லப்பட்ட அதிமுக எம்எல்ஏ..கோபத்தில் கண் சிவந்த ஜெயலலிதா! பவாரியா கும்பலின் கொடூர பின்னணி!
சென்னை: தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கிய பவாரியா கொள்ளை கும்பலால் அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு நவம்பர் 21ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. எம்எல்ஏ சுதர்சனம் கொலை செய்யப்பட்டது எப்படி? இது வழக்கின் விசாரணை எப்படி சென்றது? என்பது குறித்து பார்க்கலாம்
தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் பவாரியா கொள்ளையர்களை தமிழ்நாடு போலீசார் எப்படி பிடித்தார்கள் என்பது குறித்த சாகச கதையுடன் வெளிவந்திருந்தது.
உண்மையில் அப்படி ஒரு கொள்ளை கும்பல் தமிழகத்தில் அட்டகாசம் செய்ததும், குற்றவாளிகளை ஐஜி ஜாங்கிட் குழுவினர் பிடித்த அந்த கதை தான் படமாக வெளிவந்திருந்தது. பலரை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொலை செய்த இந்த கும்பல் அதிமுக எம்எல்ஏ ஒருவரையும் சுட்டுக் கொன்றது.

அதிமுக எம்எல்ஏ கொலை
அதற்குப் பிறகுதான் இந்த கொள்ளை கும்பலை சுட்டு பிடிக்க உத்தரவிட்டிருந்தார் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அதிமுக எம்எல்ஏவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த சுதர்சனம் கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்போது தமிழக அரசியலையே உலுக்கியது. 2005 ஆம் ஆண்டின் ஜனவரி 9 ஆம் தேதி அதிகாலை 2.45 மணியளவில், பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் புகுந்தது.
சுதர்சனம் கொலை
கதவை உடைத்துவிட்டு உள்ளே நுழைந்த அவர்கள், சுதர்சனத்தை கொடூரமாகத் தாக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதோடு, அவரது மனைவி மற்றும் மகன்களையும் தாக்கினர். இதை தொடர்ந்து 62 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு கும்பல் தப்பிச் சென்றது. ஒரு ஆளும் கட்சியின் எம்எல்ஏ கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியதால், அன்றைய முதல்வர் ஜெயலலிதா குற்றவாளிகளை விரைவாக பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பவாரியா கொள்ளை கும்பல்
உடனே ஐஜி ஜாங்கிட் தலைமையில் ஐந்து தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் பல மாதங்கள் அமைதியாக கண்காணித்து, தகவல்களை துல்லியமாகத் திரட்டின. பெரும் அழுத்தம் மற்றும் கண்காணிப்புகளுக்கு நடுவே, முக்கிய கொள்ளையன் பிப்ரவரி 1 ஆம் தேதி பிடிக்கப்பட்டான். அதன் பின்னர் நடத்திய தொடர் விசாரணையின் மூலம், மார்ச் மாதத்திலேயே ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர் கும்பல் இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
என்கவுன்டர்
செப்டம்பருக்குள் இந்த கும்பலின் முக்கிய இரு கொள்ளையர்கள் வடஇந்தியாவில் 'என்கவுன்டர்' செய்யப்பட்டனர். மொத்தம் 32 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ஹரியானாவைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் மற்றும் அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வெளியே வந்த 3 பெண்கள் தற்போது வரை தலைமறைவாகிவிட்டனர். மேலும், கைது செய்யப்பட்ட ஓம் பிரகாஷ் பவாரியா உட்பட இருவர் சிறையிலேயே உயிரிழந்தனர்.
21ஆம் தேதி தீர்ப்பு
இதற்கு பிறகு ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகிய நான்கு பேருக்கு எதிரான வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் முன்னிலையில் நடைபெற்று வந்தனர். இந்தக் கொலை வழக்கில் மொத்தம் 86 காவல் துறை அதிகாரிகள் சாட்சியமளித்துள்ளனர். எனவே வழக்கின் அனைத்து தரப்புகளின் வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஜெகதீஷ் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிரான தீர்ப்பு நவம்பர் 21 அன்று வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications