இந்திக்கு தெவசம்.. இந்தி எந்த காலத்துலயும் தெரியாது போடா.. டிஆர்பி ராஜா போட்ட தடாலடி ட்வீட்
சென்னை: இந்தி தினத்தையொட்டி இந்திக்கு தெவசம் , இந்தி தெரியாது போடா என தடாலடி ட்வீட்டுகளை மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா பதிவிட்டுள்ளார்.
இந்தி தினம் நேற்றைய தினம் அனுசரிக்கப்பட்டது. வடமாநிலத்தவர்கள் இந்தி தினத்தை கொண்டாடி வந்த நிலையில் தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான கோஷங்கள், ட்வீட்டுகள், இந்தி திணிப்பை வலியுறுத்தி நடந்த பழைய போராட்டங்களை மக்கள் அசைபோட்டனர்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தி திணிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. #இந்தி தெரியாது போடா, #StopHindiImposition போன்ற ஹேஷ்டேக்குகள் வைரலாகி வந்தன.

டிஆர்பி ராஜா
இந்த நிலையில் 1960களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்ட புகைப்படத்தை பயன்படுத்தி டிஆர்பி ராஜா ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் இந்திக்கு தெவசம், இந்தி எந்த காலத்துலயும் தெரியாது போடா என கூறியுள்ளார். அந்த புகைப்படத்தில் தமிழ் வாழ்க, இந்தி அல்லது இந்தியா? என்ற பதாகைகளை ஏந்தி பெண்கள் போராட்டம் நடத்தியது உள்ளது. இந்த புகைப்படத்தை ஏன் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதற்கான காரணத்தை பார்ப்போம்.

அலுவல் மொழி
இந்தி மொழியை இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்கும் திட்டத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவியது. சென்னையில் முதல் முறையாக வென்ற காங்கிரஸ் அரசு இந்தி படிப்பதை பள்ளிகளில் கட்டாயமாக்கியது. இதை எதிர்த்து 1937 ஆம் ஆண்டு முதல்முறையாக தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் தந்தை பெரியார் தலைமையில் நடத்தப்பட்டது. சுமார் 3 ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் இருவர் பலியாகிவிட்டனர். பலர் சிறை செல்ல நேரிட்டது.

ஆங்கிலேயர் அரசு
இதையடுத்து 1939 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு பதவி விலகியதை அடுத்து 1940 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு கட்டாய இந்தியை விலக்கினர். இதையடுத்து 1963 ஆம் ஆண்டு இந்தி மட்டுமே அரசு பணி மொழியாக அறிவிக்க அரசு முயற்சிகளை மேற்கொண்ட போது தமிழகத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. 1963 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். எனினும் கோரிக்கைகள் நிறைவேறாததால் 1965 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி தமிழகத்தில் இந்தி திணிப்பு போராட்டம் மீண்டும் வலுப்பெற்றது.

மதுரையில் கலவரம்
1965 ஆம் ஆண்டு குடியரசு தினமே கருப்பு நாளாக திமுக அழைத்தது. அப்போது மதுரையில் ஜனவரி 25 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியினருக்கும் சிலருக்கும் இடையே நடந்த கைகலப்பு பெரும் கலவரமாக வெடித்தது. இந்த கலவரம் 2 மாதங்கள் நீடித்தது. இதில் துப்பாக்கி சூடு நடத்திய போது காவலர்கள் இருவர் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். இந்த போராட்டம் கிட்டதட்ட மாநிலத்தில் அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டது என்றே சொல்லலாம். ஆம் 1967 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலிலும் சட்டசபை தேர்தலிலும் திமுக வென்றது. அரசியல் மாற்றத்தையே செய்ததால்தான் இந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications