அரசிடம் ரிப்போர்ட் கார்டு கேட்கும் கமல்... அரசு திட்டத்தை பாராட்டும் ம.நீ.ம. முக்கிய நிர்வாகி..!
சென்னை: திமுக அரசிடம் ரிப்போர்ட் கார்டு எங்கே என கமல் கேள்வி எழுப்பி வரும் நிலையில், மற்றொரு பக்கம் அரசின் திட்டத்தை பாராட்டி பதிவு வெளியிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் நிர்வாகி செந்தில் ஆறுமுகம்.
தமிழக சுகாதாரத்துறையின் மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து பாராட்டு தெரிவிக்கும் அவர், முதியோர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் நல்ல பலன் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.

அரசுக்கு எதிராக அறிக்கைகள் மூலம் கமல் சீறி வரும் நிலையில், அவரது கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரின் பாராட்டு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனிடையே மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை பாராட்டி பதிவு வெளியிட்டது குறித்து நாம் அவரிடமே பேசினோம். அப்போது அவர் கூறியதாவது, ''பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டுவதும், தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய இடத்தில் சுட்டிக்காட்டுவதும் ஒரு நல்ல எதிர்க்கட்சிக்கு அழகு. அந்த வகையில் தமிழக அரசின் செயல்பாடுகளை நாங்கள் உற்று நோக்கி வருகிறோம்.
எனது பெற்றோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டியிருந்ததால், மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் தடுப்பூசி போடலாம் என நினைத்தேன். அதன் பேரில் நேற்று காலை மக்களை தேடி மருத்துவம் திட்ட தொலைபேசி எண்ணில் அழைத்து விவரத்தை கூறினேன். அடுத்த அரைமணி நேரத்தில் எனது இல்லம் நோக்கி மருத்துவக் குழு வந்தது. இது எனக்கே ஆச்சரியத்தை கொடுத்தது.
கொரோனா தடுப்பூசி செலுத்தியதுடன் பெற்றோரின் ரத்த அழுத்தம் உள்ளிட்டவைகளையும் மருத்துவக் குழு சோதித்தது. இதனால் இந்த திட்டம் உண்மையிலேயே பாராட்ட வேண்டிய திட்டம் எனக் கருதியதால் பாராட்டியிருக்கிறேன். அதேநேரத்தில், தமிழக அரசிடம் ரிப்போர்ட் கார்டு கேட்டு எங்கள் தலைவர் விடுத்துள்ள அறிக்கையையும் எனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருக்கிறேன்.
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் வேளாண்மைத்துறைக்கு தனி பட்ஜெட் போன்ற பல திட்டங்களை நான் பாராட்டியிருக்கிறேன். அதனால் இதற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை. அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட என்றும் தயங்கமாட்டேன். இதனால் நீங்கள் இரண்டையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து குழப்பிக்கொள்ள வேண்டாம்'' எனக் கூறி முடித்தார்.


Click it and Unblock the Notifications
