பட்டுன்னு ஒரு கேள்வி!.. திமுகவுடன் கமல் கூட்டணி வைப்பாரா? மாட்டாரா?.. பெரும் எதிர்பார்ப்பில் மநீம!
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கமல்ஹாசன் கூட்டணி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த கட்சிகளும் வெற்றி பெற்ற கட்சியும் வரும் உள்ளாட்சி தேர்தலில் சோபிக்க விரும்புகின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சியும் இதற்கு சளைத்ததல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் கமல்ஹாசன் பல்வேறு யூகங்களை வகுத்து வருகிறார்.
நேற்றைய தினம் அவர் செய்தியாளர்களை சந்திக்கும் போது உள்ளாட்சி தேர்தலுக்காக தயாராகி கொண்டிருக்கிறோம் என தெரிவித்திருந்தார். இதில் இரு விஷயங்கள் நமக்கு புலப்படுகின்றன.

தயார்
அதாவது வெற்றி தோல்வி எல்லாம் அரசியலில் சகஜம். தோல்வி ஏற்பட்டதற்காக தேர்தலில் போட்டியிடாமலும் அதற்காக தயாராகாமலும் இருத்தல் கூடாது என்பதில் கமல்ஹாசனின் நிலைப்பாடு பாராட்டுதலுக்குரியது. அது போல் மக்கள் நீதி மய்யம் முக்கிய நிர்வாகிகளாக கருதப்பட்டவர்கள் அக்கட்சியிலிருந்து விலகிவிட்டனர்.

மநீம கூடாரம்
மக்கள் நீதி மய்யம் கூடாரமே காலியானாலும் நான் துவண்டு விடமாட்டேன் என்பதை உணர்த்தும்விதமாக கமல்ஹாசன் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசியுள்ளார். கட்சி என்பது நிர்வாகிகளுக்காக நடத்தப்படுவது இல்லை. தொண்டர்களால் பின்னி பிணையப்பட்டது என்பதையும் கமல் சொல்லாமல் சொல்லிவிட்டார்.

திமுகவுடன் கூட்டணி
இந்த நிலையில் கமல்ஹாசன் உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி விவகாரத்தில் கமல் எடுத்த முடிவுதான் கட்சியை தோல்வியடையச் செய்தது என்பது முன்னாள் நிர்வாகிகளின் குற்றச்சாட்டாக இருந்தது.

கமல் முடிவு
எனவே கட்சியில் உள்ள மற்றவர்களை தக்க வைத்துக் கொள்ள இந்த முறை கமல் நல்ல முடிவை எடுப்பார் என மநீம தொண்டர்களும் நிர்வாகிகளும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறிருக்கையில் கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

இரு திராவிடக் கட்சிகள்
இதிலும் நாம் இரு விஷயங்களை பார்க்க வேண்டியுள்ளது. அதாவது தேர்தல் நேரத்தில் இரு திராவிடக் கட்சிகளையும் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். எனினும் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகையை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

பெரிதாக விமர்சனம்
எனினும் அவர் திமுகவை பெரிதாக விமர்சிக்கவில்லை. சட்டசபை தேர்தலுக்கு முன்பு நடந்த மக்கள் நீதி மய்யம் தொடக்க விழாவின் போது கூட்டணி குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் கூறுகையில் திமுகவுடன் கூட்டணி அமைக்க மற்றவர்கள்தான் அழைக்கிறார்கள், திமுக தலைமை அழைக்கவில்லையே என கூறியிருந்தார். எனவே ஒரு வேளை உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமை கூட்டணிக்கு அழைத்தால் கமல்ஹாசன் செல்வாரா என மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications