"முதல்வர் ஸ்டாலினுக்கு தான் நன்றி சொல்லணும்.. வீடு தேடி மளிகைகள் வருகிறது".. இல்லத்தரசிகள் பூரிப்பு
மளிகை பொருட்கள் வீடு தேடி வரும்படி அரசு ஏற்பாடு செய்துள்ளது
சென்னை: "முதல்வர் ஸ்டாலினை பாராட்டியே ஆகணும்.. வேண்டிய பொருட்கள் எல்லாம் வீடு தேடி கொண்டுவரும் இந்த திட்டம் அபாரமானது. அதுவும் கொரோனா காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் சிறப்பானது" என்று மளிகை பொருட்கள் வீடு தேடி வரும் திட்டம் குறித்து இல்லத்தரசிகள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.
தற்போது லாக்டவுன் அமலில் உள்ளது.. பொதுப்போக்குவரத்தும் முடங்கி உள்ளது.. இதனால், காய்கறி-மளிகை கடைகள் உட்பட பல கடைகள் மூடப்பட்டுள்ளன..
அத்தியாவசிய தேவைக்காக பால், மருந்து பொருட்கள் கிடைத்து வந்தாலும், காய்கறிகள்தான் வீடுகளில் அன்றாட தேவையாக இருந்து வருகிறது.

காய்கறிகள்
லாக்டவுன் போடுவதற்கு முன்பு, ஒருவாரத்துக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களை பொதுமக்கள் வாங்கி வைத்து கொண்டனர் என்றாலும், அதில் முழு திருப்தி கிடைக்கவில்லை.. ஃபிரிட்ஜ் இல்லாதவர்களால் காய்கறிகளை பாதுகாத்து வைத்து கொள்ளவும் முடியவில்லை.. இப்டிப்பட்ட சூழலில்தான், பொதுமக்கள் நலனுக்காக தமிழகம் முழுவதும் குடியிருப்பு பகுதிகள் நோக்கி அரசு அனுமதி பெற்ற நடமாடும் காய்கறி-பழ வாகனங்கள் சென்று வர ஏற்பாடாகின.

வியாபாரி
அதேபோல மளிகை பொருட்களையும் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்தது... இதன்படி மொத்த சந்தைகளில் மளிகை பொருட்களை கொள்முதல் செய்ய வியாபாரிகளுக்கு அனுமதியும் அளிக்கப்பட்டதுடன், குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் வியாபாரிகளுக்கும் அதற்கான ஸ்பெஷல் சீட்டு சீட்டு வழங்கும் பணியும் நேற்று முதல் நடந்து வந்தது.

அனுமதி
இதையடுத்து, நடமாடும் மளிகை கடைகள் சேவை தொடங்கப்பட்டுவிட்டது.. அதேபோல, நடமாடும் மளிகை கடை வாகன சேவையும் தொடங்கப்பட்டுவிட்டது.. முதற்கட்டமாக 2 ஆயிரத்து 200 கடைகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியிருக்கிறது..

பொருட்கள்
இதில், உப்பு, சர்க்கரை, அரிசி, பருப்பு வகைகள், புளி, எண்ணெய், மசாலா பொருட்கள் போன்ற அனைத்துமே இதன்மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், தேவையான மளிகை பொருட்களை ஆன்லைன் மூலமாகவும், 'நம்ம சென்னை ஆப்' மூலமாகவும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு போன் செய்து ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைமுறை
யாரும் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்பதற்காகத்தான் இத்தனை ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது.. இந்த நடைமுறைகளை கண்டு, பொதுமக்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் மகிழ்ந்து போயுள்ளனர்.. இந்த திட்டம் குறித்து அவர்கள் சொல்லும்போது, "லாக்டவுன் நீட்டித்து விட்டால் என்ன செய்வது என்று கவலையில் இருந்தோம்.. இப்போ வீடு தேடி காய்கறிகள், மளிகை பொருட்கள் வருவது பெரும் உதவியாக இருக்கு..

பாராட்டு
கொரோனா காலத்தில் இப்படி எங்களுக்காக ரிஸ்க் எடுத்து அரசு செய்வது பாராட்டத்தக்கது... கடையில் விற்கும் விலையை விட நடமாடும் வாகனங்களில் மளிகை பொருட்களின் விலை 2 ரூபாய் அதிகமாக இருந்தாலும், தொற்று சமயத்தில் தேவையில்லாமல் வெளியில் செல்வது இதனால் குறையும்.. காலை 6 மணி முதல் சாயங்காலம் 7 மணி வரை காய்கறிகள் தடையில்லாமல் எங்களுக்கு கிடைக்கிறது.. தமிழக முதல்வருக்குதான் நாங்கள் நன்றி சொல்லணும்" என்றனர்.












Click it and Unblock the Notifications