தமிழகம் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை - இதமான செய்தி சொன்ன வானிலை
தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 12ஆம் தேதி வரைக்கும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாடு,புதுச்சேரி, காரைக்காலில் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்துள்ள மழையால் அணைகள் நிரம்பி வழிகின்றன. குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

கோவை, நீலகிரியில் தினசரியும் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. அவலாஞ்சி, கூடலூர், நடுவட்டம் பகுதியில் 4 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. மேல்பவானி, சோலையாறு, ஏற்காடு, தருமபுரி, தேக்கடி, தேனியில் தலா 1 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டு இயல்பை விட அதிகரித்து அமராவதி மற்றும் பி.ஏ.பி., திட்ட அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து அணைகள் நிரம்பின. அமராவதி அணையில் இருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திருமூர்த்தி அணை பகுதியில் 127 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பாசன அணைகள் மட்டுமன்றி நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. நடப்பாண்டு பருவ மழை விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் மாதம் இயல்பான மழையளவு 74 மி.மீ.ஆக உள்ள நிலையில் இம்மாதமும் தொடக்கம் முதலே, தொடர்ந்து மிதமானது முதல் கன மழை வரை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக இன்று முதல் வரும் 12ஆம் தேதி வரைக்கும் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
அடுத்த 48 மணிநேரத்தில் சென்னையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் தென்கிழக்கு, மத்தியக்கிழக்கு, வங்கக் கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடை இடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
12ஆம் தேதி வரைக்கும் மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை இடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரைக்கும் தென்மேற்கு மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications