புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்..
சென்னை: புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று ரோடுஷோ நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் நின்று பயணிக்க சாலையின் இருபுறமும் பொதுமக்கள் மலர்தூவி வரவேற்பு வழங்கினர்.
தமிழ்நாடு போலவே புதுச்சேரியிலும் இப்போது சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு வரும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் அங்குத் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு இந்த முறை என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் திமுக கூட்டணிகளுக்கு இடையே தான் கடும் போட்டி இருக்கிறது. இரு தரப்பும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இதற்கிடையே புதுச்சேரியில் பிரதமர் மோடி இன்று என்டிஏ கூட்டணிக்காகப் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக இன்றைய தினம் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். சுமார் 3 மணியளவில் பிரதமர் மோடி சென்னை வந்தார். பிறகு சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி சென்றார்.
அங்குச் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் அமைந்துள்ள அதித்தி ஹோட்டல் முதல் ராஜா திரையரங்கம் வரை பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தினார். திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி நின்று பயணித்தார். மோடியுடன், புதுச்சேரி முதல்வரும், என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமி, புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் உடன் இருந்தனர். பிரதமர் மோடிக்கு சாலையின் இருபுறமும் நின்று பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியின் வாகனத்தின் மீது மலர்தூவி வரவேற்றனர்.
அதன்பிறகு பிரதமர் மோடி புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்புகிறார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அவர் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலில் நட்சத்திர ஹோட்டலில் தங்கும் பிரதமர் மோடி நாளை ஏப்ரல் 4ம் தேதி காலை, பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. சுமார் 150 பாஜக நிர்வாகிகள் இதில் கலந்து கொள்வார்கள் எனவும் சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னையில் நடக்கும் பிரச்சார கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என சொல்லப்பட்டது.
இருப்பினும், கடைசி நேரத்தில் மோடியின் ஆலோசனைக் கூட்டமும் பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டது. வேட்பாளர் தேர்வில் நிலவும் இழுபறி காரணமாகப் பிரதமர் மோடி அதிருப்தியில் உள்ளதாகவும் இதன் காரணமாகவே பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், பாஜக சார்பில் அதிகாரப்பூர்வமாகக் காரணம் எதுவும் சொல்லப்படவில்லை.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பதிலாகத் தமிழக பாஜகவின் உயர் தலைவர்கள் ஓரிருவரை மட்டுமே பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications