ரூ. 30 கோடிப்பு! எடப்பாடி பற்ற வைத்த திரி.. ரூ.1.5 கோடிக்கு சாப்பாடு போட்டேன்.. மூர்த்தி பளீர் பதிலடி!
சென்னை: இல்ல திருமணத்திற்கு 30 கோடி ரூபாய் செலவு செய்ததாக எடப்பாடி பழனிச்சாமி வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று அதிமுக சார்பாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக மீது சரமாரி விமர்சனங்களை வைத்தார்.
மதுரைக்காக அதிமுக நிறைய திட்டங்களை செய்து உள்ளது. ஆனால் மதுரையை திமுக கண்டுகொள்ளவில்லை. உட்கட்சி மோதல் காரணமாக மதுரையில் திமுக பலம் இழந்துவிட்டது.

எடப்பாடி பழனிசாமி
சொத்து வரி, மின் கட்டண உயர்வு என்று மக்களை திமுக பாடாய்படுத்துகிறது. எங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை திமுக தங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் போல ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறது. மக்களுக்கான நலத்திட்டங்கள் ஓசி என்று அமைச்சர் பொன்முடி கிண்டல் செய்கிறார். இதே ஆட்சியில்தான் அமைச்சர் மூர்த்தி பிரம்மாண்டமாக மகன் திருமணத்தை நடத்தினார். இதற்கு அவர் 30 கோடி ரூபாய் செலவு செய்தார்.

மூர்த்தி இல்ல திருமணம்
பல கோடி ரூபாய்க்கு அலங்காரம் மட்டும் செய்தார். மக்களின் நலத்திட்டங்களை இவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். ஓசி என்கிறார்கள். ஆனால் ஆடம்பரமாக திருமணம் செய்கிறார்கள். இப்படி ஆடம்பரமாக திருமணம் செய்யும் திராவிட ஆட்சியில் மக்கள் திட்டங்களை பற்றி அவர்கள் பேசலாமா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார்.

செலவு என்ன?
சமீபத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமண விழா மதுரையில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டனர். மூர்த்தி மகன் திருமணத்திற்காக பல லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. அசைவம், சைவம் என்று உணவு மட்டும் பல கோடி ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது. இந்த திருமண விழா மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. தேசிய அளவில் கூட இதை பற்றி சிலர் பேசி இருந்தனர்.

விமர்சனம் பதிலடி
இந்த நிலையில்தான் இந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் தற்போது அமைச்சர் மூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார். நான் 3 கோடி ரூபாய்க்கு இல்ல திருமணத்தை நடத்தினேன். இதில் 1.5 கோடி ரூபாய்க்கு உணவு மட்டும் போட்டேன். எல்லோரையும் சமமாக அமர வைத்து உணவு கொடுத்தேன். மற்றபடி ஆடம்பரமாக எதுவும் செய்யவில்லை, என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த திருமண விழா பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications