தமிழகத்தில் வேகம் காட்டும் கொரோனா! கூடுதல் கட்டுப்பாடுகள் அமலாகுமா? மருத்துவ நிபுணர்கள் சொல்வதென்ன?
சென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முக கவசம் அணிதல் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பொதுமக்கள் கவனமுடன் இருப்பது அவசியம் எனவும் இதனால் முழு ஊரடங்கு போன்ற கடும் கட்டுப்பாடுகளை தவிர்க்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கையாளப்படாததாலேயே கொரோனா பாதிப்பு மாறி மாறி பதிவாகி வருகிறது.

கொரோனா பாதிப்பு
மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் அதிகமாகி வரும் நோய்தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சில மாநிலங்களில் நோய் பாதிப்பு எண்ணிக்கையை வெளியிடுவதில் தாமதம் காரணமாகவே நோய் பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறிவருகின்றனர்.

தமிழகத்தில் அதிகரிப்பு
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை போல் தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 2,283 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டுப்பாடுகள்?
இதனால் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது. அதே நேரத்தில் தற்போது இருக்கும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் தீவிரமாகக் கடைபிடித்தாலே போதும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். கொரோனா தாக்கத்தில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முககவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, அதனை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
Recommended Video

முன்னெச்சரிக்கை அவசியம்
மேலும் தமிழகத்தில் இன்னும் கூட சிலர் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்திக் கொண்டிருக்கவில்லை. மேலும் இரண்டாவது தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதிலும் சிலர் சுணக்கம் காட்டி வருகின்றனர். இதனை அடுத்து தமிழக அரசு பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர் மருத்துவர் நிபுணர்கள். இதனால் பகுதி நேர ஊரடங்கு , முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை தவிர்க்கலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications