தண்ணீர் லாரி ஓவர்டேக்! குழந்தையை தூக்க கூட யாரும் வரலை.. இறந்த சிறுமியின் தாய் கதறல்! மனிதம் எங்கே?
சென்னை: சென்னை கோவிலம்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதியதில் பலியான சிறுமியை தூக்கிவிட கூட யாரும் முன் வரவில்லை என தாய் கண்ணீருடன் பகிர்ந்தார்.
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி. இன்று வழக்கம் போல் தனது 10 வயது மகள் லியோரா ஸ்ரீயை பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட போது 8.45 மணிக்கு தண்ணீர் லாரி கீர்த்தியின் இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் இருவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர்.
தாயை பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த லியோரா ஸ்ரீ, லாரியின் பக்கம் சாய்ந்த நிலையில் டயருக்கு கீழே விழுந்தார். அவர் மீது லாரியின் டயர் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் லியோரா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளி மாணவி மீது மோதிவிட்டு அந்த சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான லாரி டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிலம்பாக்கத்தில் மெட்ரோ உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதால் சாலைகள் மேடும் பள்ளமுமாக இருக்கிறது. அந்த பகுதிகளில் செல்லும் வாகனங்கள் நிலைத்தடுமாறி கீழே விழுவதால் காயங்களும் உயிரிழப்புகளும் ஏற்படுவதாக அப்பகுதியினர் கூறுகிறார்கள்.

தண்ணீர் லாரிகள் போக்குவரத்து நெரிசலான நேரங்களில் செல்லக் கூடாது என அறிவுறுத்தியும் கேட்பதில்லை என மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதுகுறித்து சிறுமியின் மாமா பிரசாத் கூறுகையில், காலையில் பள்ளிக்கு சென்ற குழந்தை இப்போது இல்லை. பைக்கை லாரி முந்தி செல்ல முயன்றதால் இது போல் நடந்தது.
குழந்தையின் தலையில் கற்கள் எல்லாம் குத்தியுள்ளன. குழந்தையை தூக்கி உதவ கூட யாரும் முன் வரவில்லை. என் அக்காவே குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் சாலை குறுகிவிட்டது. இதனால் அவ்வப்போது விபத்துகள் நடக்கின்றன என கூறி குழந்தை கொண்டு சென்ற பை, உணவு பையை காட்டி கண்ணீர் விட்டார்.
இதுகுறித்து குழந்தையின் தாய் கீர்த்தி கூறுகையில் 9.15 மணிக்கு பள்ளி துவங்குகிறது. தினமும் 8.30 மணிக்கு கிளம்புவேன். அப்படி கிளம்பினாலும் ஸ்கூலுக்கு லேட் ஆகிறதே என்பதால் இன்று காலை 8.20 மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டேன்.டிராபிக் நேரத்தில் ஒரு தண்ணீர் லாரி என் பைக்கை முந்தியது. அப்போது லாரி உரசியதில் என் வாகனத்தின் முன் பக்க டயர் ஆட்டம் கண்டது.
இதில் நானும் குழந்தையும் கீழே விழுந்துவிட்டோம். எனக்கு லேசான சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தை லாரிக்கு பக்கத்தில் விழுந்ததால் லாரியின் டயர் ஏறியது. என் குழந்தையை தூக்கிவிட கூட யாரும் வரவில்லை. சாலையில் போவோர் வருவோர் அவரவர் வேலையை பார்க்கிறார்களே தவிர எங்களுக்கு உதவவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications