அரைக் கம்பத்தில் பறக்கும் திமுக கொடி.. முரசொலி செல்வம் மறைவையடுத்து திமுக தலைமை உத்தரவு!
சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வத்தின் மறைவையடுத்து, திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு திமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி நாளிதழில் பணியாற்றி வந்தார். சிலந்தி என்ற புனைப் பெயரில் , முரசொலி நாளிதழில் பல கட்டுரைகளை எழுதி வந்தார். இந்நிலையில், இன்று காலை 'முரசொலி' செல்வம் காலமானார்.

வழக்கம் போல தனது பணிகளை மேற்கொண்டு, சற்று ஓய்வெடுத்தபோது முரசொலி செல்வத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து முரசொலி செல்வத்தின் உடல் பெங்களூரில் இருந்து இன்று பிற்பகல் சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது. சென்னை கோபாலபுரத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது திடீர் மறைவு திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முரசொலி செல்வம் மறைவை ஒட்டி, திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக கட்சிக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. கலைஞரின் மருமகனும், தலைசிறந்த எழுத்தாளர் - பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் மறைவை ஒட்டி இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு திமுக கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு திமுக அமைப்புகளுக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.
முரசொலி செல்வம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "தலைவர் கலைஞரின் அன்பு மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது. தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலியின் பணிகளைத் தன் தோளில் சுமந்துகொண்டு இளமைப் பருவம் முதலே திறம்படச் செயலாற்றியவர் அண்ணன் முரசொலி செல்வம்.
தலைவர் கலைஞரும் அவரது மனசாட்சியான முரசொலி மாறனும் மனதில் நினைப்பதை எழுத்தில் - செயலில் நிறைவேற்றியவர் பாசத்திற்குரிய முரசொலி செல்வம். கழகத்தின் போர்வாளான முரசொலி நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர். அடக்குமுறைக்கு அஞ்சாமல் சட்டமன்றத்தில் கூண்டிலேறி கருத்துரைத்தவர்.
சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக - வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர் என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன். என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கழகத்திலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்!" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications