காங்கிரஸ் மனக்கசப்பு.. 'கூண்டு முயல்' சசிகலா - இந்தியா டுடே நிகழ்வில் தயாநிதி மாறன்
சென்னை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியா டுடே நிறுவனத்தின் நிகழ்வில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் கலந்து கொண்டு பேசினார்.
இந்தியா டுடே நடத்தும் இந்த நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த பல அரசியல் தலைவர் பேசி வருகின்றனர்.
அந்த வகையில் திமுக சார்பில் கலந்து கொண்டு பேசிய தயாநிதி மாறன், பாஜக குறித்தும், அதிமுக குறித்தும் அவர் பல கடுமையாக கருத்துக்களை முன்வைத்தார்.

பதில் அளிக்காத நிதியமைச்சர்
அதில் பேசிய தயாநிதி மாறன், "திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும், சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்று தைரியமாக துணிச்சலாக திமுக தேர்தல் அறிக்கையில், மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால், அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம், பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு குறித்த கேள்விகளுக்கு பதில் கூட அளிக்க மறுக்கிறார். மாநில அரசுகள் மீதும் ஜி.எஸ்.டி மீதும் பழி போடுகிறார். ஜி.எஸ்.டி.யை அறிமுகம் செய்த பாஜக, ஒரே தேசம், ஒரே வரி என்று சொன்னது. உண்மையில், அப்படி தான் இங்கு நடக்கிறதா? தேசம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரி தான் வரிகள் விதிக்கப்படுகிறதா?

கடைசி வரை வராது
கொரோனாவால் உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சாலைகளில், குரங்குகளையும், பாம்பையும் வைத்து வித்தைக் காட்டுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். குரங்கு, பாம்புடன் சண்டைப் போடப் போகிறது என்று கூட்டத்தை சேர்க்க, கூட்டத்தை குதூகலிக்க வைக்க சொல்லிக் கொண்டிருப்பார்களே தவிர, கடைசி வரை அங்கு சண்டையே நடக்காது. இதைத் தான் நமது நிதியமைச்சரும் செய்து கொண்டிருக்கிறார். இந்திய மக்களை நோக்கி இத்தனை இத்தனை நன்மைகள் வந்து சேரும் என்பார். ஆனால், எந்த நன்மையும் கடைசி வரை மக்களிடம் வந்து சேராது.

இமேஜ் மாறிடுமா?
சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைகின்ற போது, ஏன் இங்கு நீங்கள் விலையை குறைக்க மறுக்கின்றீர்கள்? ஏனெனில், உங்களுக்கு புதிய பாராளுமன்றம் எழுப்ப வேண்டும். அதற்கு 10,000 கோடி தேவை. பிரதமருக்கு என்று தனியாக Palatial House (பிரம்மாண்ட இருப்பிடம்) கட்டுகிறீர்கள். துணை குடியரசுத் தலைவருக்கு என்று தனியாக Palatial House கட்டுகிறீர்கள். இதெல்லாம் நமக்கு அத்தியாவசியமானதா? நாட்டுக்கு ரொம்ப தேவையானதா? இதனால், இந்தியாவின் இமேஜ் மாறிவிடுமா?

மோடியின் படம்
இந்த நேரத்தில் கொரோனவால் வேலை இழந்து, வாழ்க்கை இழந்து நிற்பவர்களுக்கு நீங்கள் உதவித் தொகை கொடுக்க வேண்டும். இதை செய்லபடுத்துவதில் இந்திய அரசு தோற்றுவிட்டது. இந்தியாவில் 65 சதவிகித பெட்ரோல், டூ-வீலர் வைத்திருப்பவர்களுக்கு தேவைப்படுகிறது. டூ-வீலர் வைத்திருப்பவர்கள் யார்? மிடில் கிளாஸ் மக்களே. பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டப் போகிறது. டீசல் விலை ரூ.90-ஐ நெருங்குகிறது. சென்னையில் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் பிரதமர் மோடியின் படம் உள்ளது. இங்கே எல்லோரையும் அழ வைத்துக் கொண்டிருக்கும் பிரதமர், 'நான் எல்லோருக்கும் எல்பிஜி சிலிண்டர் கிடைக்க வழிவகை செய்துள்ளேன்' என்ற வாசகத்துடன் பெட்ரோல் பங்கில் புகைப்படமாக வைக்கப்பட்டுள்ளார். சிலிண்டர் விலை இப்போது வாங்கும் நிலையிலா உள்ளது? கிட்டத்தட்ட 1000 ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பேச மறுக்குறீர்கள்
ஊடகங்கள் ஏன் இதுகுறித்து பேச மறுக்கின்றன? நான் உங்கள் ஊடகத்தை மட்டும் குறை கூடவில்லை. எல்லா ஊடகத்தையும் பார்த்து கேட்கிறேன்? ஏன் பேச மறுக்குறீர்கள்? ஊடங்கள் இங்கே முடக்கப்படுகின்றன. எதிர் தரப்பினர் முடக்கப்படுகின்றனர். இதனால் தேவையில்லாத விஷயங்கள் பெரிதாக காட்டப்படுகின்றன. தேவையானவற்றை பேசுவதில்லை" என்றார். அப்போது நேர்காணல் செய்தவர் இடைமறித்து, 'இதுபோன்ற மிகமுக்கியமான தேசம் சார்ந்த பிரச்சனையில், எதிர்க்கட்சிகள் ஏன் மிகப்பெரிய அளவில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை?' என்று கேள்வி எழுப்பினர்.

சாதாரண பிரச்சனைகள்
இதற்கு பதில் அளித்த தயாநிதி, துரதிர்ஷ்டவசமாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஸின் பிரச்சார வழிமுறையை என்பது மிக நன்றாக உள்ளது. அவர்கள் இதுபோன்ற அனைத்துப் பிரச்சனைகளையும் அமைதியாக்க முயல்கின்றனர். இதனால், பெரிய பிரச்சனைகள் அமைதியாக, சாதாரண பிரச்சனைகள் பூதாகரமாக்கப்படுகின்றன. முக்கிய செய்திகளை விட்டுவிட்டு, வாட்ஸ் அப், பேஸ்புக் பிரைவஸி தொடர்பான செய்திகள் குறித்து அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் மக்களை திசைத்திருப்பும் முயற்சி.

ஜெயிலில் இருந்திருப்பார்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக கூட்டணி வெல்ல வேண்டும் என்கிறார். அப்படியெனில், ஜெயலலிதா இறந்த பிறகு, நான்கரை ஆண்டுகள் பாஜக தான் இங்கு ஆட்சி செய்கிறதா? ஊழல் செய்ததாக ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டவர். இந்தியாவின் மிக மோசமான முதல்வர் ஜெயலலிதா. திமுக மீது பொய் வழக்குகள் தான் போடப்பட்டது. ஆனால், ஜெயலலிதா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவர். அவர் உயிரோடு இருந்திருந்தால், சசிகலாவோடு சிறைவாசம் புரிந்து இப்போது தான் ரிலீஸாகியிருப்பார்.

35,000 கோடி
'மோடி ஊழலுக்கு எதிரானவர்.. ஏன் அவரை எதிர்க்கிறீர்கள்?' என்று என்னிடம் கேட்கிறார்கள். அதற்கு நான், 'அப்படியா... மத்தியப்பிரதேசத்தில் மோடி எப்படி ஆட்சியைக் கவிழ்த்தார்? புதுச்சேரியில் எப்படி மோடி ஆட்சியை கவிழ்த்தார்? பணம் எங்கிருந்து வருகிறது? அரசுகளை கவிழ்ப்பதற்கு என்று, பாஜவுக்காக ரிசர்வ் வங்கி தனியாக பணம் அச்சிடுகிறதா? கொரோனா தடுப்பூசி நிகழ்வுகளுக்காக 35,000 கோடி தொகை செலவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிக்கு அனுமதிக்கபப்ட்டுள்ளன. இங்கிலாந்தில் இருந்து வந்த மற்றோரு நிறுவனத்துக்கு அனுமதியே கொடுக்கவில்லை. இந்த பணம் ஆளும் அரசிடம் எந்த வகையிலாவது சென்று சேர்ந்திருக்கிறதா என்பதை கண்டிப்பக்க ஆராய வேண்டும். ஏனெனில், அது நம் பணம். அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம் அச்சிடப்பட்டுள்ளது. நான் பணம் செலுத்தி தனியார் மருத்துவமனையில் பெறும் சான்றிதழிலும் ஏன் பிரதமர் படம் இருக்கிறது? இவை தனியார் நிறுவனங்கள் அல்லவா?" என்றார்.

கருடா சவுக்கியமா?
பின் நேர்காணல் செய்தவர், கொஞ்சம் தமிழ்நாடு பக்கம் வருவோமா? என்று கூறி ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார். அதில், 'ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக இரண்டாக பிளவுறும் என்றும், முற்றிலும் காணாமல் போகும் என்றும், ஆட்சியில் நீடிக்காது என்றும் என்றனர். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, இவையனைத்தும் தவறு என்பதை நிரூபித்தது, வரும் தேர்தலில் திமுகவுக்கு சவாலாக இருக்குமா?" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தயாநிதி, தமிழில் அற்புதமான பாட்டு ஒன்று உள்ளது. 'பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு, கருடா சவுக்கியமா? என்று கேட்டது. அந்த பாம்பு எங்கிருந்து வந்தது? ஏனெனில், இப்போது முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியின் தலையில் அமர்ந்திருக்கிறார், பாஜக இங்கே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அதனால் தான் பழனிசாமியின் அரசாங்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அதன் சித்தாங்கத்தை, தங்கள் விரும்பியவற்றை தமிழகத்தில் விதைக்கின்றன. இது முன்பு எப்போதும் நடக்காத ஒன்று.

அரைவேக்காடு
இன்று நாங்கள் பாதிக்கப்படுகிறோம். எங்களுக்கு நீட் தேவையில்லை. திமுக ஆட்சிக்கு வந்து நீட் தேர்வுக்கு தடை விதிக்கும். இப்போது நர்ஸிங் படிப்பவர்களுக்கே நீட் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது அரசு. அமெரிக்காவில் இருந்து வந்து பிரதமரைச் சுற்றி உட்கார்ந்திருக்கும் அரைவேக்காடு அட்வைஸர்கள், அமெரிக்காவை போல் இந்தியாவை மாற்றுவோம் என்கிறார்கள். பிரதமரின் ஆலோசனைக் குழுவில் இருக்கும் இந்த அரைவேக்காட்டு அமெரிக்க ரிட்டர்ன் அட்வைஸர்கள் இங்கு சிஸ்டத்தை மாற்ற முயல்கிறார்கள். இந்த சிஸ்டத்தை மாற்றுவதால் இந்தியா மாறிவிடுமா?

மரியாதை, அன்பு
இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. இங்கு பல கலாச்சாரம் உள்ளது. பல மொழிகள் உள்ளன. 'நாங்கள் வரலாற்றை மாற்றுவோம். நேரு செய்ததை மாற்றுவோம்' என்று எப்போதும் கூறுகிறார்கள். நான் கேட்கிறேன், 'வரலாற்றில் இருந்து நீங்கள் ஏன் பாடம் கற்க கூடாது? ஐரோப்பாவை பாருங்கள்.. அங்குஎண்ணற்ற மொழிகள் உள்ளன. அவை அனைத்திற்கும் மரியாதை கொடுக்கிறார்கள், அன்பு செலுத்துகிறார்கள். இதனால் செழிப்பாக உள்ளார்கள்.

காணாமல் போனார்கள்
அதேசமயம், USSR இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது? அனைவரும் ஒரே மொழி பேசச் சொல்லி வற்புறுத்தினார்கள். இப்போது USSR எங்கே உள்ளது? எல்லாம் போய்விட்டது. நாங்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல. நாங்கள் ஹிந்தி கற்கவும் விரும்புகிறோம். ஆனால், அதை எங்களிடம் திணிக்காதீர்கள். முன்பு ஹிந்தியை திணிக்க எத்தனித்த நீங்கள், இப்போது சமஸ்கிருதத்தை திணிக்கிறீர்கள். நான் ஏன் சமஸ்கிருதம் பயில வேண்டும்? 2011ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, வெறும் 22 ஆயிரம் பேர் மட்டுமே, தங்கள் தாய்மொழி சமஸ்கிருதம் என்று சொல்லியிருக்கின்றனர்.

தமிழர்கள் முட்டாளா?
ஆனால், அந்த சம்ஸ்கிருத மொழியை புரமோட் செய்ய நீங்கள் 800 கோடி செலவு செய்கிறீர்கள்? அந்த பணம் எங்கிருந்து வந்தது? அதுவே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி வளர்ப்புக்கு வெறும் 20 கோடி மட்டும் செலவு செய்கிறார்கள். அப்போது நேர்காணல் செய்பவர் குறுக்கிட்டு, "கடந்த சில நாட்களாக பிரதமரும் சரி, உள்துறை அமைச்சரும் சரி, 'எங்களால் தமிழில் பேச முடியாததற்கு வருத்தப்படுகிறோம்' என்கிறார்களே என்று சொல்லி முடிப்பதற்குள், 'தமிழர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று நினைத்துவிட்டீர்களா?' என தயாநிதி கேள்வி எழுப்பினார். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ சில வார்த்தைகள் தமிழில் பேச முயற்சி செய்தார்கள் என்பதற்காக தமிழர்கள் அதைக் கண்டு ஏமாறுவார்கள் என்று நினைத்துவிட்டீர்களா? அவர்கள் தமிழில் பேசுவதை வரவேற்கிறோம். ஆனால், ஏன் அதிகாரப்பூர்வ மொழிகளாக தமிழ் உட்பட 22 மொழிகளை அறிவிக்க மறுக்கிறீர்கள்? நீங்கள் அதையெல்லாம் செய்யாமல், அமெரிக்கா சென்று அங்கு தமிழில் பேசுவீர்கள். ஏனெனில், தேர்தல் வருகிறது. தேர்தலுக்கு பிறகு, பிரதமரும், உள்துறை அமைச்சரும் தமிழ் பேசுவார்கள் என்று எண்ணுகிறீர்களா?

Anti Indian
குறிப்பாக, தமிழகம் வந்திருந்த ஜே.பி. நட்டா சொன்னதை கேட்டு நான் வியந்துவிட்டேன். அவர் சொல்கிறார், 'தமிழகத்திற்கு பிரதமர் மோடி ஜல்லிக்கட்டை கொண்டு வந்தார்' என்று. மோடியா தமிழகத்திற்கு ஜல்லிக்கட்டை கொண்டு வந்தார்? உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தது. தமிழகம் ஒரு அமைதிப் பூங்கா. இந்தியாவில் நாங்கள் ஒரு அங்கம். ஆனால், எங்களிடம் வந்து சொல்கிறார்கள், 'நீ ஒரு Anti - Hindu' என்று. என்னுடைய காலேஜ் விண்ணப்பத்தில் நான் ஹிந்து என்று குறிப்பிட்டிருந்தேன். இப்போது என்னை ஹிந்து இல்லை என்கிறார்கள். என்னை ஹிந்து இல்லை என்று சொல்ல பாஜகவிற்கு யார் அதிகாரம் கொடுத்தது? இதற்கு என்று ஏதாவது சர்டிபிகேட் உள்ளதா? இதற்கு என்று ஸ்பெஷல் கோர்ஸ் உள்ளதா? Anti - Hindu-வாக இருப்பதற்கும், Anti - Indian- ஆக இருப்பதற்கும் பாஜகவோ, ஆர்எஸ்ஸோ ஏதாவது ஸ்காலர்ஷிப் கொடுக்கிறதா?

இட ஒதுக்கீடு
நாங்கள் திராவிட மண்ணில் இருந்து வந்தவர்கள். நாங்கள் பெரியார் மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். அண்ணா, கலைஞர் மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். நாங்கள் கேள்வி கேட்போம்.. கேள்வி கேட்போம். எங்களுக்கு சம உரிமை வேண்டும். கோயில்களை எங்களை அனுமதிக்காமல் இருந்தார்கள். போராடி உள்ளே நுழையும் உரிமை பெற்றோம். இன்று இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஏனெனில், இங்கு இருந்த திராவிட தலைவர்கள் எங்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தார்கள். ஆனால், பாஜக என்ன செய்கிறது? நலிவடைந்த உயர் சாதிப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குகிறது.

இதுதான் வழியா?
அன்று ஜெயலலிதா, பாஜக ஆட்சி கவிழும் நேரத்தில் கழட்டிவிட்ட போது, இதே திமுக தான் வாஜ்பாய் அரசுக்கு கைக்கொடுத்தது. ஆனால், ஒரேயொரு ஓட்டில் தோல்வி அடைந்தார். அவர்களுடன் கூட்டணி வைத்தோம். அதேசமயம் இனவெறி தலைத்தூக்காமல் இருப்பதை உறுதி செய்தோம். மதத்தை பயன்படுத்தி நாட்டை பிரிக்காதீர்கள் என்றே திமுக தற்போது சொல்கிறது. இப்போது புதிய கல்விக் கொள்கை கொண்டு வந்துள்ளனர். 'Caste Based Education' என்கின்றனர். பழைய காலத்தில் தான், 'நீ சூத்திரன். நீ மேற்படிப்பு படிக்க முடியாது. உன் தந்தை தொழிலையே நீயும் செய்ய வேண்டும்' என்றார்கள். இதுதான் நமக்கு வேண்டுமா? நாட்டை முன்னேற்ற இதுதான் வழியா?

ஏன் இந்த பிரிவினை?
மக்கள் தொகையில் வெறும் 2 சதவிகிதம் உள்ளவர்கள் நம்மை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள். நான் எதிர்த்து நிற்கிறோம். நாங்கள் விரும்புவது எல்லாம் சம உரிமை. ஏன் பாஜக, நாட்டை துண்டாட நினைக்கிறது? ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் போதும், மதத்தை கையில் எடுக்கும் பாஜக, அதை மாநிலங்கள் மீது விதைத்து, பிறகு தேர்தல் முடிந்தவுடன் விட்டுவிடுகிறது. பிறகு மாநிலங்களில் மதம் சார்ந்த பிரச்சனைகள் வளர்வதை நாம் உணருவதில்லை. தமிழகத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்டியன் என்று எந்த மோதலும் இதுவரை ஏற்பட்டதில்லை. அவ்வளவு அமைதியான மாநிலம் இது. ஆனால், தேர்தல் நேரத்தில் நீங்கள் வருகிறார்கள். எங்களை பிரிக்க முயல்கிறீர்கள். ஏன் இதை செய்கிறீர்கள்? இதை நாங்கள் கேட்பது தவறா? ஆனால் நான் ஒன்றை சொல்கிறேன். தமிழக மக்கள் அமைதியாக உள்ளனர். அவர்கள் பன்முகத்தன்மையில் நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் இந்த தேர்தல் அதை நிரூபிப்பார்கள். பாஜகவை விரட்டி அடிப்பார்கள். பாஜகவை மட்டுமல்லாது, அதிமுக கூட்டணி மொத்தத்தையும் மாநிலத்தை விட்டு விரட்டி அடிப்பார்கள்" என்றார்.

வெற்றி முக்கியம்
பிறகு, கூட்டணி என்ற வார்த்தையை கேட்ட பிறகு, அதை கப்பென்று பிடித்துக் கொண்ட நேர்காணல் செய்த நபர், 'திமுக - காங்கிரஸ் இடையே நடந்த தொகுதிப் பங்கீடு இழுபறி குறித்தும், மக்கசப்புகள் குறித்தும் கேள்வி எழுப்பிய போது, 'என்னை சிக்க வைக்க பார்க்கிறீர்களா? என்ற தயாநிதி தொடர்ந்து கேள்விக்கு பதிலளிக்கையில், "ஒவ்வொரு கட்சிக்கும் ஏற்றம், இறக்கம் இருக்கும். காங்கிரஸும் அதை உணர்ந்து வைத்திருக்கிறது. தமிழகத்தில் 10 வருடங்களாக திமுக ஆட்சியில் இல்லை. இதனால், நாங்கள் அதிகாரத்துக்கு வருவதில் இம்முறை உறுதியாக உள்ளோம். காங்கிரஸ் அவர்கள் விரும்புவதை நாங்கள் கொடுக்க நினைத்தால், அது தமிழகத்தில் பாஜக வளர்வதற்கு தான் வழிவகுக்கும். 2019 மக்களவை தேர்தலில், தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜகவால் ஒரு இடத்தை கூட வெல்ல முடியவில்லை. அந்த வெற்றியை இப்போதும் நாங்கள் தொடர விரும்புகிறோம். இதனை காங்கிரஸ் தலைமை புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி. எந்த கட்சியாக இருந்தாலும், தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடத் தான் விரும்புவார்கள். இது இயற்கை. தேசியக் கட்சிகள் கூட அதிக இடங்களில் நிற்கவே எண்ணுவார்கள். அதேசமயம், நாங்கள் காங்கிரஸுக்கு 25 இடங்கள் ஒதுக்கியுள்ளோம்" என்றார்.

இதுதான் வித்தியாசம்
அப்போது மீண்டும் குறுக்கிட்ட நிருபர், "உங்கள் கட்சித் தலைவர் ஸ்டாலின் தான் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். ஆனால், இப்போது காங்கிரஸ் கேட்ட சீட் எண்ணிக்கைக்கு அருகில் கூட திமுக கொடுக்கவில்லையே. அப்படியெனில், காங்கிரஸ் மீதிருந்த நம்பிக்கையில் பெரியளவில் வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டதா?" என்று கேட்டார். அதற்கு பதிலளித்த தயாநிதி, "கண்டிப்பாக அப்படி இல்லை. மீண்டும் சொல்கிறேன், அனைத்து கட்சிகளுக்கும் ஏற்ற இறக்கும் இருக்கும். தேர்தலில் திமுக ஒரு இடத்தில் மட்டும் வென்ற வரலாறு உள்ளது. அதிமுக 2004-ல் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. நாங்கள் ஒன்றை புரிந்து வைத்துள்ளோம். கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்கினால், திமுகவால் அதிகாரத்துக்கு வர முடியாது. 2016ல் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் வாக்கு வித்தியாசம் வெறும் 1.5 சதவிகிதம் தான். அதாவது ஒன்றரை லட்சம் வாக்குகள். இதுதான் வித்தியாசமே. ஆனால், யார் அதிகாரத்துக்கு வந்தது? நிறைய இடங்களில் போட்டியிட்டு வென்றால் தான், நம்மால் போராட முடியும்" என்றார்.

ரகசிய டீலிங்
"கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகள் மறைந்த பிறகு, திமுக சந்திக்கும் தேர்தல் இது. குறிப்பாக, இருவரின் மறைவுக்கு பிறகும், ஆட்சியில் எந்தவித பங்கமும் ஏற்படாமல் தன் பலத்தை நிரூபித்த அதிமுக அரசுக்கு, திமுக அழுத்தம் கொடுப்பதை குறைத்துவிட்டது. ஆகையால், தனது எதிர்காலத்தின் மிகப்பெரிய போராட்டத்தில் திமுக உள்ளதா?" என்ற கேள்விக்கு பதிலளித்த தயாநிதி, 'மு.க.ஸ்டாலின் தலைமையிலான இதே திமுக கூட்டணி தான், 2019 மக்களவை தேர்தலில், அதிமுகவவையும், பாஜகவையும் படுதோல்வி அடையச் செய்தது. நான் முன்பே சொன்னது போல, இந்த அதிமுக அரசு பாஜகவின் பிரதிநிதியாக இருந்ததால் தான் ஆட்சியில் நீடித்தது. இது பாஜக அரசு. பாஜக தனியாக இல்லை. அதனுடன் சிபிஐ, வருமான வரித்துறை, ஏன்ஐஏ என்று அனைத்தும் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளன. மக்கள் மாற்றத்திற்கு காத்திருக்கிறார்கள். ஜனநாயகம் காரணமாக, அவர்களால் இந்த அரசை பாதியில் தூக்கியெறியும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக செய்வது போல், ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்ற விரும்பவில்லை. நாங்கள் ஜனநாயகத்தை மதிக்கிறோம். இதனால் தான் ரகசிய டீலிங், விலைக்கு வாங்குவது என்று எதையும் திமுக செய்யவில்லை. மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கொடுக்க விரும்பினோம்" என்றார்.

உங்கள் முதுகை பாருங்க
"எதிர்வரும் தேர்தலில் உதயநிதி ஸ்டாலினும் போட்டியிடுகிறார். திமுகவும் வாரிசு அரசியலில் ஈடுபடுகிறதா?" என்ற கேள்விக்கு, "பிசிசிஐ-யில் அமித் ஷாவும் இருந்தார், இப்போது அவரது மகன் ஜெய் ஷா இருக்கிறார். இரண்டு தலைமுறைகளாக பிசிசிஐ-யில் இருந்துள்ளனர். மூன்று தலைமுறைகளாக ராஜஸ்தானில் ஆள்கிறார்களே. அது சரியா? குறை சொல்வதற்கு முன்பு முதலில் தன் முதுகை பார்க்க வேண்டும். நான் இன்னும் சொல்லிக் கொண்டே போவேன். மேனகா காந்தியும், அவரது மகன் வருண் காந்தியும் பாஜக எம்.பி.க்களாக மக்களவையில் ஒன்றாக அமர்ந்திருக்கவில்லையா?

மிஸ்டர்.ஸ்டாலின்
திமுக தேர்தல் அறிக்கையில் முடிந்தால் எழுந்து வந்து குறைகளை கண்டறியுங்கள். இது வெற்றிக்கான தேர்தல் அறிக்கை என்பதும், திமுக சரியான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது என்பதும் உங்களுக்கு தெரியும். ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போகிறது. மக்களுக்கும் நாங்கள் வாக்குறுதிகள் அளித்தால் நிறைவேற்றுவோம் என்று தெரியும். 2006ல் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். பெட்ரோல் விலை ரூ.5 குறைக்கப்படும் என்ற வாக்குறுதியை ஸ்டாலின் நிறைவேற்றுவார். டீசல் விலை ரூ.4 சொன்னது போல முதல்வர் மு.க.ஸ்டாலினால் நிறைவேற்றப்படும். சிலிண்டருக்கு ரூ.100 மானியம் என்ற வாக்குறுதி சொன்னதைப் போல ஸ்டாலின் நிறைவேற்றுவார். கொரோனோவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.4000 கொடுக்கப்படும் என்று மிஸ்டர்.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ஏனெனில், அதை கொடுத்தது மிஸ்டர்.ஸ்டாலின்." என்றார்.

ஏசி ரூம் தத்துவங்கள்
"இந்த தேர்தலில் திமுக வெல்லவில்லை என்றால், திமுகவின் அரசியல் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்கு உள்ளாகிவிடும். குறிப்பாக, கட்சியின் கட்டுப்பாடு சீர்குலையும் ஆபத்தும் உள்ளது" என்று குருமூர்த்தி கூறினார். அது பற்றிய உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த தயாநிதி மாறன், "இது அர்த்தமற்ற பேச்சு. ஒருவேளை அவர் பதட்டத்தில் இருக்கலாம். ஏனெனில், ரஜினி உட்பட சிலரை அரசியலுக்கு அழைத்து வரும் அவரது திட்டம் அனைத்தும் வீணாய் போனது. ஏ.சி. ரூமில் உட்கார்ந்து கொண்டு தத்துவங்களாக பொழிவார்கள். தங்களை சாணக்கியர்கள் என்றும், கடவுள் அவர்களுக்கு அளவுக்கடந்த அறிவை கொடுத்திருக்கிறார். அவர்களால் எந்தவித சேதத்தையும் ஏற்படுத்த முடியும். தமிழக மக்கள் அவர்களுக்கு விரைவில் நல்ல பாடம் புகட்டுவார்கள்.

குருமூர்த்தி
அரசியலுக்கு வருவதாய் சொல்லி, கடைசி நேரத்தில் ரஜினிகாந்த் யு டர்ன் அடித்தது குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு, "குருமூர்த்தி அனைத்து தேசிய சேனல்களிலும், 'ரஜினி வருவார், ரஜினி வருவார், ரஜினி வருவார்' என்று கூறினார். பெரும் அறிவு படைத்த அவர் தான் சொன்னார். நாங்களா 'ரஜினி வருவார்' என்று சொன்னோம்? ஆகையால், இந்த கேள்வியை நீங்கள் குருமூர்த்தியிடமே கேளுங்கள் என்றார்.

மன்னிப்பு கேட்கிறோம்
அரசியலில் களமிறங்கியுள்ள கமல் குறித்த கேள்விக்கு பதிலளித்த தயாநிதி, "கமல்ஹாசனுக்கு எங்களுடைய முழு வாழ்த்துகள், ஆனாலும் நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்" என்ற கூற, அரங்கமே சிரித்துவிட்டது. 'நீங்கள் இந்த மன்னிப்புக்கான காரணத்தை விளக்க வேண்டும்' என்று நிருபர் கேட்க, அப்போதும் சிரித்துக் கொண்டே, 'அந்த மன்னிப்பில் எல்லா பதிலும் அடங்கியுள்ளது' என்று சொல்லி இன்னும் சப்தமாக சிரிக்க, இம்முறை அரங்கத்தில் கைத்தட்டல். இரண்டு முறை கமல்ஹாசனிடம் மன்னிப்பு கேட்டுள்ளீர்கள் என்று நிருபர் கூற, "சரி! நான் மூன்றாவது முறையாகவும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்று மீண்டும் சிரித்தார்.

பாஜக 'பி' டீம்
பிறகு, தேர்தலில் கமல்ஹாசனின் ரோல் எப்படியாக இருக்கும் என்ற கேள்விக்கு, 'அதை நீங்கள் கமலின் பாஸிடம் தான் கேட்க வேண்டும். அவரது பாஸ் அமித் ஷா, மோடியிடம் கேட்க வேண்டும் என்றார். அப்படியெனில், கமலின் முதலாளிகள் இவ்விருவருமா? என்று கேட்க, ஆம்! ஆம்! அவர்களிடம் தான் கமலின் எதிர்காலம் குறித்து கேட்க வேண்டுமே என்றார். தொடர்ந்து பேசிய தயாநிதி, 'அந்த கட்சி பாஜகவின் 'பி' டீம். வெட்கமே இல்லாமல் இந்த வேலையை செய்கிறார்கள்" என்றார்.

ரஜினியுடன் இணைய
ரஜினிகாந்தை போன்று கமல் பெரிய சூப்பர் ஸ்டார் கிடையாது. ஆனால், அவர் எல்லோராலும் நேசிக்கப்பட்டவர். தனிப்பட்ட விதத்திலும், ஒரு நடிகனாகவும் அவரை நாம் மதிக்கிறேன். ஆனால், அரசியலில் அவர் எப்படி தனது நிறத்தை அடிக்கடி மாற்றுகிறார் என்பதை பாருங்கள். எவ்வளவு விரைவாக அவர் நிறத்தை மாற்றுகிறார் என்பதை பாருங்கள். அவருக்கு மேலிடத்தில் தான் அறிவுரைகள் வருகின்றன. ஒருக்கட்டத்தில் அவர் தனது கட்சியை ரஜினி கட்சியுடன் இணைக்கவும் தயாராக இருந்தார்" என்றார்.

மிரட்டியது பாஜக
இறுதியில் சசிகலா குறித்த கேள்விக்கு, 'நான் ஒரு தேசிய ஹீரோவைப் பற்றி பேச விரும்பவில்லை. சசிகலா நாட்டின் விடுதலைக்காக போராடினார். அவர் தமிழர்களுக்காக போராடினார். அவர் ஒரு நேஷனல் ஹீரோ" என்று சொல்லிவிட்டு, 'ஒரு கிரிமினல் பற்றி கேட்கிறீர்கள். சசிகலா ஒரு கிரிமினல். ஊழல் செய்ததற்காக தண்டிக்கப்பட்டவர். அவரும், ஜெயலலிதாவும் இன்னும் 2 பேரும் சேர்ந்து, தமிழக மக்களின் பணத்தை கொள்ளை அடித்தார்கள். அதனால் தான் அவர் சிறையில் இருந்தார். சசிகலாவை சிறையில் வைத்தது பாஜக. அதே சசிகலாவை அதிமுகவுடன் இணைக்க முயற்சி செய்ததும் பாஜக. ஒருக்கட்டத்தில், சசிகலா பிரச்சாரத்துக்கு சென்றால், அதிமுக வாக்குகள் சிதறும் என்பதால், பாஜக தன்னுடைய கூட்டணிகளான சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் மூலம் மிரட்டி அவரை பின்வாங்க வைத்தது. சசிகலா 'கூண்டு கிளி' அல்ல, 'கூண்டு முயல்'. தமிழக, மக்கள் விரைவாக இவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்" என்று தனது உரையை முடித்தார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications