“கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை புறக்கணிப்பது ஏன்?” மக்களவையில் தயாநிதி மாறன் கேள்வி
சென்னை: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை புறக்கணிப்பது ஏன்? என்று தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள தமிழ், இந்தி மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஆசிரியர்கள் நியமனத்தில் சமநிலை உள்ளதா என பல்வேறு கேள்விகளை மக்களவையில் மத்திய கல்வி அமைச்சகத்திடம் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் கழக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவருமான தயாநிதி மாறன் எழுப்பினார்.

அதன் விவரங்கள் பின்வருமாறு, "நாட்டில் தற்போது உள்ள கேந்திரிய வித்யாலயா மற்றும் பிரதம மந்திரி (PM SHRI) பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இவற்றின் செயல்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதி மாநில வாரியாக எவ்வளவு? குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?
தமிழ்நாட்டில் செயல்படும் PM SHRI மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள தமிழ், இந்தி, மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை என்ன? ஒவ்வொரு பள்ளியின் மொழித் துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?
இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள PM SHRI மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாநிய மொழியான தமிழுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசு ஆசிரியர்கள் நியமனத்தில் சமநிலை உள்ளதா?" என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கான பதிலை பெற்று, அதை விவரித்துள்ள தயாநிதி மாறன், "இந்தக் கேள்விகளுக்கு மத்திய அரசின் கல்வி அமைச்சகம் அளித்த பதில்கள் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 24 பள்ளிகளில் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் தமிழ் நியமிக்கப்பட்டு தமிழ்ப் பாடம் கற்பிக்கப்படுகிறது.
மீதமுள்ள 21 பள்ளிகளில் தமிழ்ப் பாடங்கள் தமிழ்நாடு அரசின் தன்னாட்சி அமைப்பான Tamil Virtual Academy (TVA) மூலம் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் PM SHRI கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 69 இந்தி ஆசிரியர்கள். 50 சமஸ்கிருத ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் தமிழ் ஆசிரியர்கள் 34 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். இதில் தமிழ் மொழி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் (contract basis) நியமிக்கப்படுகின்றனர், நிரந்தர மொழி ஆசிரியர் பணியிடங்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 1,253 கேந்திரிய வித்யாலயாக்கள் செயல்பட்டு வருகின்றன, இதில் தமிழ்நாட்டில் 45 கே.வி பள்ளிகளும் அடங்கும். இந்திய அரசால் கேந்திரிய வித்யாலயா சங்கத்திற்கு ஒதுக்கப்படும் நிதிகள், "Grant-in-Aid-Salaries", "Grant-in-Aid-General", "Grant for Creation of Capital Assets" என்ற தலைப்புகளில் வழங்கப்படுகின்றன. ஆனால், மாநில' யூனியன் பிரதேசம்! மாவட்டம்/ தனிப்பட்ட கேந்திரிய வித்யாலயா அளவில் தனியாக வழங்கப்பட்ட நிதியின் தரவுகள் இல்லை.
இந்தப் பள்ளிகளில் முதன்மையாக இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே பாடங்கள் நடத்தப்படுகின்றன. கேந்திரிய வித்யாலயா கல்விக் குறியீட்டின் 112வது பிரிவின்படி, 15 அல்லது அதற்கு மேற்பட்ட மாணர்கள் விரும்பினால் மட்டுமே உள்ளூர்/ பிராந்திய மொழியில் பாடங்கள் நடத்தப்பட கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அப்போதுகூட கேந்திரிய வித்யாலயா சங்கத்தின் துணை ஆணையர் அனுமதி பெற்ற பிறகு, ஒரு பகுதி நேர ஒப்பந்த ஆசிரியர்கள்(part-time contractual teacher) நியமிக்கப்படுவர்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications