"நடுத்தெருவில்" வைத்து போட்டுடைத்த ஜோதிமணி.. ஆவேச குமுறல்.. அப்படியே ஆடிப் போன கதர்கள்..!
காங்கிரஸ் கட்சி குறித்து ஜோதிமணி சொன்ன குற்றச்சாட்டு பரபரப்பாகி வருகிறது
சென்னை: கடந்த 2 நாட்களாகவே ஜோதிமணி எடுத்து வைத்த குற்றச்சாட்டு தமிழக காங்கிரஸையே புரட்டி போட்டு வருகிறது.
"காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலம் விசுவாசமாக பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், பணம் இருப்பவர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது... இதனால், காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் இப்போது கொந்தளித்துக்கொண்டிருக்கிற உணர்வுகளை நான் அறிவேன்.
இந்தத் தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும், நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

ரத்தம் கொதிக்கிறது
உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தைக் கண்டு என் ரத்தம் கொதிக்கிறது... எனது யுத்தத்தை நான் தொடர்வேன்" என்று கரூர் எம்பி ஜோதிமணி, சொந்தக் கட்சிக்கு எதிராகவே வெளிப்படையாகக் கொந்தளித்திருக்கிறார். இதனால் தமிழக காங்கிரஸ் கூடாரமே கடும் அதிர்ச்சியில் உள்ளது.. இதுகுறித்து நாம் சில காங்கிரஸ் மூத்த தலைகளிடமே பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது:

உண்மையா?
இது எங்களுக்கு கொஞ்சம் ஷாக்தான்.. ஜோதிமணி சொன்னது உண்மையாக இருக்கட்டும்.. இப்படி காசு வாங்கி கொண்டு திமுக, அதிமுக உட்பட எல்லா கட்சிகளிலும் பணக்காரர்களுக்கு சீட் தருவதும், அவர்களிடம் இருந்தே நிதியை பெற்று தேர்தலை நடத்துவதும் காலங்காலமாக இருக்கக்கூடிய அரசியல் நடைமுறைதானே? ஜோதிமணிக்கு சொந்த கருத்தை சொல்ல உரிமை உண்டு, விமர்சிக்க உரிமை உண்டு..

ராகுல்
மனக்குறைகளை கட்சிக்குள் பகிரங்கமாகவே வந்து கண்டிக்கலாம்... அவ்வளவு ஏன், ராகுலின் நன்மதிப்பை நேரடியாக பெற்றவர்தானே ஜோதிமணி? இதற்கு பேசாமல், சோனியா காந்தி, ராகுலிடம் புகார் செய்யலாமே.. அதைவிட்டுவிட்டு, நடுத்தெருவில் நின்று செய்தியாக்குவது சொந்த கட்சியை இழிவுபடுத்துவது போலாகாதா? தேர்தலில் திமுக கூட்டணி அணியின் வெற்றியை இது பாதிக்காதா?

ராகுல் காந்தி
ராகுல் காந்தி கரூர் வந்தபோது இதே ஜோதிமணி என்னவெல்லாம் செய்தார்? ராகுலை வேறு யாருமே நெருங்கவே விடாமல் செய்தாரே? ப.சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் கூட வெயிலில் ரோட்டோரம் நின்றுதானே ராகுலை பார்க்க நேர்ந்தது. இதை யாராவது பெரிசுபடுத்தி பொதுவெளியில் சொன்னார்களா? அதனால், ஜோதிமணியின் பேச்சு கொஞ்சம் அதிர்ச்சிதான்..

கோபண்ணா
இதைதான் கோபண்ணாவும் கண்டித்துள்ளார்.. 'ஜோதிமணி இப்படி பேசுவதே அப்பட்டமான கட்சி விரோத நடவடிக்கை. இவ்வளவு பெரிய தைரியம் அவருக்கு எங்கிருந்து வந்தது? அவரது அராஜக அரசியலைப் பற்றித்தான் நான் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளேன்'' என்று ஆவேசமாகி உள்ளார்.. எப்படி பார்த்தாலும் ஜோதிமணியின் கருத்தில் நியாயமே இருந்தாலும்சரி, அவர் அணுகிய விதம் தவறு" என்கின்றனர்.

பீட்டர் அல்போன்ஸ்
ஆனால் ஜோதிமணி ஏன் இப்படி சொன்னார்? அந்த அளவுக்கு மனக்காயம் அவருக்கு ஏற்பட்டுள்ளதா என்பதையும் யோசிக்க வேண்டி உள்ளது.. இப்படித்தான் அன்னைக்கு, மூத்த தலைவர் பீட்டர் அல்போன்சும் ஒரு புகார் சொன்னார்.. காங்கிரஸ் கட்சியில் பணக்காரர்களுக்கு மட்டுமே சீட் தரப்படுகிறது என்றார்.. அதேமாதிரி போட்டியிட சீட் கிடைக்காத விரக்தியில் மாநில மகளிர் காங்கிரஸின் முன்னாள் தலைவியான ஜான்ஸிராணியும் இதே குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

ஜோதிமணிகள்
அதே குமுறல்தான் இன்றம் நீடிக்கிறது.. ஒன்று காசு இருப்பவர்களுக்கு சீட், இல்லாவிட்டால் வாரிசகளுக்கு சீட் தருவதா? என்ற ஜோதிமணியின் கேள்வியில் ஆயிரம் நியாயங்கள் இருக்கவே செய்கிறது. அடிமட்டத்தில் இருந்து மேலே வந்தவர் ஜோதிமணி.. ஏழைகளின் கண்ணீரை உணர்ந்தவர்.. கட்சிக்காக எத்தனையோ இன்னல்களை மட்டுமல்ல, பல அவமானங்களை சந்தித்துவிட்டுதான் எம்பியாக உயர்ந்துள்ளார்.. ஆனானப்பட்ட ஜோதிமணிக்கே இந்த நிலைமை என்றால், வளர்ந்து வரும் ஜோதிமணிகளின் நிலைமை நிச்சயம் பரிசீலிக்கத்தக்கதே..!












Click it and Unblock the Notifications