எடப்பாடியின் துரோகம்.. செங்கோட்டையன் வெளியேற இதுதான் காரணம்! மாய உலகத்தில் விஜய்.. அமைச்சர் தாக்கு!
காஞ்சிபுரம்: எடப்பாடியின் துரோகத்தால் தான் செங்கோட்டையன் வெளியேறி உள்ளார் எனவும், நடிகர் விஜய் மாய உலகத்திலும் கனவு உலகத்திலும் இருக்கிறார், நடிகர்கள் நாடு ஆள வேண்டுமென்றால் உழைக்கவேண்டும் என தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து பயணித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என பேசியதால் அவர் எடப்பாடி பழனிச்சாமியார் வெளியேற்றப்பட்டார்.
இதற்கிடையே இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவிடம் வழங்கிய செங்கோட்டையன், அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கிடையே ஏற்கனவே எதிர்பார்த்தது போலவே தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் இணைவார் என சொல்லப்படுகிறது.

எம்ஆர்கே பன்னீர்செல்வம்
இந்த நிலையில் நடிகர் விஜய் அவர் சந்தித்து பேசியது சூழலை மேலும் பரபரப்பாகி உள்ளது. கட்சியில் அவருக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் எடப்பாடி துரோகத்தால் தான் செங்கோட்டையன் வெளியேறி உள்ளார் எனக் கூறியுள்ள தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விஜய் மாய உலகத்திலும், கனவு உலகத்திலும் இருக்கிறார் எனவும் கூறியுள்ளார்.
2026 தேர்தல்
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்," SIR திருத்தப் பணிகள் மேற்கொண்ட மாநிலத்தில் ஆளுங்கட்சி தான் ஜெயித்துள்ளது. எடுத்துக்காட்டு பீகார் தேர்தல். எஸ்ஐஆர் மூலமாக திமுகவை அடக்கி விடலாம் விடலாம் என எண்ணுகிறது மத்திய அரசு. ஆனால் இந்த பணி மூலமாக மக்களிடம் நேரடியாக சென்று பணிகள் மேற்கொண்டு மக்கள் குறைகளை கேட்டு அறிய மக்கள் செல்வாக்கு பெற்று வெற்றி பெற வாய்ப்பாக கிடைத்துள்ளது. பாஜக ஆளுகின்ற பாண்டிச்சேரியில் எஸ்ஐஆர் இல்லை.
செங்கோட்டையன் ராஜினாமா
எம்ஜிஆர் இடம் இருந்தவர், ஜெயலலிதாவின் விசுவாசி ஆக இருந்த செங்கோட்டையன் தற்பொழுது எடப்பாடியின் துரோகம் காரணமாக அதிமுகவிலிருந்து விலகி உள்ளார். நடிகர் விஜய் சர்க்கார் போன்ற படத்தில் அதிக அளவில் கூட்டத்தைக் கூட்டி நடிப்பது போன்று விஜய் பல்வேறு பகுதியில் இருந்து ரசிகர்களை கூட்டி பிரச்சாரம் செய்கிறார். கரூர் சம்பவத்தில் கூட சேலம், திண்டுக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரசிகர்கள் வருகை தந்தார்கள்.
எடப்பாடி துரோகம்
அதே போன்று நடிகர்கள் சினிமா பாணியில் ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து வருகிறார், முதல்வன் படத்தில் வருவது போல் ஒரு நாள் முதல்வர் போன்று இருக்க முடியுமா? நடிகர்களெல்லாம் வசனம் பேசி கைதட்டி வாங்கி செல்கிறார்கள் ஆனால் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உண்மையாக மக்களுக்காக உழைத்து வருகிறார். எம்ஜிஆர் அவரை திமுகவில் தான் வளர்ந்தார் அதன் மூலமாக தனியாக கட்சி தொடங்கினார்.
விஜய் அரசியல்
ஜெயலலிதா அவர்கள் எம்ஜிஆரின் பின்புலம், பிம்பத்தை வைத்து வளர்ந்தார். ஆனால் நடிகர் விஜய் மாய உலகத்திலும் கனவு உலகத்திலும் இருக்கிறார். மக்களும் சென்று போராடுவது திமுக, கொரோனா காலத்திலும் மக்களுடன் துணை நின்றது திமுக அப்பொழுது நடிகர் விஜய் மற்றும் அன்புமணி உயிருக்கு பயந்து கொண்டு எங்கே சென்றார்கள்? நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும். நடிகர்கள் எல்லாம் நாடு ஆள வேண்டும் என்றால் உழைக்க வேண்டும் மக்கள் புத்திசாலிகள் யார் உழைக்கிறார்கள் என்று மக்கள் சிந்தித்து செயல்படுவார்கள்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications