முல்லைப்பெரியாறு அணை விவகாரம்.. பினராயி விஜயனுக்கு, முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.. முழு விவரம்!
சென்னை: கேரளாவில் கடந்த வாரம் கடும் மழை கொட்டியது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் தமிழகம் கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய கேரள முதல்வர் பினராயி விஜயன், ' முல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிகபட்ச தண்ணீரை கால்வாய் வழியாக வைகை அணைக்கு திறந்து விடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என கூறி இருந்தார்.

தமிழக மக்கள் கவலை
இந்த நிலையில், முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- தமிழக அரசும், தமிழக மக்களும் கேரளாவில் கடந்த 10 நாட்களாக மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கவலை கொண்டு உள்ளனர். இந்தக் கடினமான கால கட்டத்தில், நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம்

ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
மக்களின் துயர் துடைக்கத் தேவையான உதவிகளைச் செய்வோம். அந்த வகையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவுவதற்கு தமிழகத்தின் எல்லையோர மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன். வெள்ள நிவாரணப் பொருட்களை தடையின்றி விநியோகம் செய்யுமாறு உத்தரவிட்டு உள்ளேன்.

நீர்மட்டத்தை கவனித்து வருகிறோம்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பொறுத்தவரை, நாங்கள் அணையின் நீர்மட்டத்தைக் கூர்ந்து கவனித்து வருகிறோம். எங்களின் அதிகாரிகளும் தொடர்ந்து கேரள மாநில அரசுடன் இது தொடர்பான தகவல் பரிமாற்றத்தில் இருக்கின்றனர். இன்று, அக்டோபர் 27 ஆம் தேதி காலை நிலவரப்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.60 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2300 கன அடி நீர்வரத்து உள்ளது.

மத்திய நீர் ஆணைய விதி
நீர்வரத்தின் அடிப்படையில் வைகை அணைக்கு தொடர்ந்து அதிகபட்ச அளவிலான நீரை வெளியேற்றிக் கொண்டிருக்கிறோம். இன்று காலை 8 மணி முதல் வைகை அணைக்கு விநாடிக்கு 2300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டமானது உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அனுமதிக்கப்பட்ட அளவிலேயே உள்ளது. அதேபோல் மத்திய நீர் ஆணையத்தின் விதிகளின்படியும் உள்ளது.

இரு மாநில மக்களின் நலன்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நான் பேசி உள்ளேன். அணையில் நீர்மட்டத்தைத் தொடர்ந்து கூர்ந்து கவனிக்குமாறும், அணையில் இருந்து நீர் வெளியேற்றத்தை முறையே திட்டமிட்டு செயல்படுத்துமாறும் வலியுறுத்தி உள்ளேன்.அதேபோல் அணையின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்றம் தொடர்பான தகவல்களை எனக்கு முன்கூட்டியே தெரிவிக்குமாறும் உத்தரவிட்டு உள்ளேன். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சரியான தருணத்தில் மேற்கொள்ள முடியும். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பொறுத்தவரை தமிழக அரசானது, இரு மாநில மக்களின் நலனை, பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கும் என்று மீண்டும் உறுதி அளிக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications